Subscribe:

Pages

Tuesday, April 26, 2011

விஞ்ஞானியாகுக: வினவுக --- எனது நூல் Become A Scientist: Ask the Right Sequence of Questions

விஞ்ஞானியாகுக: வினவுக --- எனது நூல்

Become A Scientist: Ask the Right Sequence of Questions  



சென்ற மாதம், ஜெர்மனியிலிருந்து, பெர்லாக் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது, 200பக்கங்கள் கொண்டது இந்நூல்.  

மிகச்சிறந்த கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தவேண்டுமெனில்,  விஞ்ஞானியானால் மட்டும் போதாது; செறிவான வினாத்தொகுதிகளை  எழுப்புதல் வேண்டும் அவற்றைப் பின்பற்றி நிறைவான ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும் என்கிற அடிப்படைத்தேவை இந்த நூலில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நூலுக்காய், நோபல் பரிசு பெற்ற  விஞ்ஞானிகள் பலருடனும் தொடர்புகொண்டு, உரையாடித் தகவல் பல சேர்த்து அவற்றின் மேல், ஆய்வு நிகழ்த்தியிருக்கிறேன்.

விஞ்ஞானி: ரிச்சர்ட்  ஸ்மாலி



இந்நூலை ரிச்சர்ட்  ஸ்மாலி எனும் பெரியவருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறேன்.  ஸ்மாலி நோபல் பரிசு பெற்ற  விஞ்ஞானி. புல்லரின் எனப்படும் புதுவகைக் கார்பனைக் கண்டு பிடித்த மூவரில் ஒருவர். எனது  பல கேள்விகளுக்கு மிகப் பொறுமையாய் வெகு திறமையாய், சலிக்காமல்-சளைக்காமல் பதிலிறுத்தவர். இப்போது அமரராகி விட்டார்.
  
பதிப்பிற்கு முன்பு  இந்நூலின் ஆய்வுப் படிவத்தைப் படித்தவரான, கனக்டிகட் லிவர்போர்ட் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் தாமஸ், தனது 35வருடக் கல்வி  மற்றும், ஆய்வு வாழ்க்கையில் இத்தனைத் தரமான ஆய்வை,  தான் கண்டதில்லை என்று சான்றுரைத்திருக்கின்றார்.       

கலிபோர்னியா ரிவர்சைட் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் டில்லன் அவர்கள்  உருவாக்கிய ஒரு வினாத்தொகுப்பை, விரித்தும், கிளைத்தும், அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கு அவற்றை  எவ்வாறு  பயன்படுத்துவது  என ஆய்ந்து; அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தியபோது, விஞ்ஞானிகள் எத்தகைய வினாக்களைத் தொடுத்தார்கள், என்பதை அறிந்து, அடிப்படை ஆய்வுகளுக்கு என ஒரு தொகுதியும், தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு என   ஒரு தொகுதியுமாக இந்நூலில் வினாத்தொகுதிகளை அமைத்து வழங்கியிருக்கிறேன்.

பேராசிரியர் டில்லன்
 
இவற்றை நோபல் பரிசு வென்ற பல ஆய்வுகளுக்கு அளித்து அக்கண்டுபிடிப்புக்களை மீண்டும் கட்டமைத்துக் காட்டியிருக்கிறேன்.

உலகில் நடக்கும் ஆய்வுகளில்  முப்பது விழுக்காடு ஆய்வுகள் "அரைத்த மாவை அரைத்து, கரைத்த மாவைக் கரைத்து" எனும்படியாக ஒருவர் செய்வதையே மற்றவர் செய்வதான சூழலில் போய்க்கொண்டிருக்கிறது. இது நல்ல போக்கா என்றால் இல்லை. அறிவியல் ஆய்வுகளுக்கு மிகுந்த அளவு   நிதி முதலீடு தேவைப்படுகிறது. அதுபோன்றே ஆய்வுகள் நிகழ்த்த அதிக அளவு ஆட்கள்  தேவைப்படுகிறார்கள். எனவே ஒருவர் செய்வதையே மற்றவர் செய்கின்றபோது, நிதி விரயத்தோடு, மனிதவளமும் விரயமாகிறது. அதுவும் வளரும் நாடுகளில், இத்தகைய  போக்கு மாபெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாகிறது. எதைவேண்டுமானாலும் ஆய்வு செய்வது என்பது பணக்கார நாடுகளின் பொழுதுபோக்கு மனோநிலையாக இருக்கமுடியுமே தவிர, ஏழை நாடுகள் இவ்வாறான போக்கில் ஈடுபலாகாது.   

செய்யப்போகும் ஆய்வில் என்னென்ன செய்யப்போகிறோம் என்று ஒவ்வொரு அசைவிலும் திட்டமிடலும் தெளிந்த சிந்தனையும், முடிபும் இல்லாமல் ஆய்வில் இறங்குவது கூடாது. ஏனெனில் ஆய்வாளர்கள் எவரும் தனது சொந்தப்பணத்தில் ஆய்வுகள் நடத்துவதில்லை, கோடானுகோடி ஏழைகள்  அடிப்படைத்தேவைகளைத் துறந்து வாழும் நிலையில், இந்த ஆய்வின் மூலம் ஏதேனும் பயன்  விளைந்து இந்த நாடு முன்னேறிவிடாதா என்கிற ஆதங்கத்தில் அரசுகள் ஆய்வுகளுக்காய் நிதி ஒதுக்குகின்றன. எனவே ஒவ்வொரு நயா பைசாவையும் உருப்படியாகச் செலவு செய்வது என்பதும், அதுவும் அதனைக் காலத்தே விளையும் உருப்படியான ஆய்வுக்காக மட்டுமே செலவு செய்வது என்பதும் ஆய்வாளர்களின் கடைமையாகின்றது. அதேநேரத்தில் ஆய்வாளர்களுக்கு மிகச்சரியான வழிகாட்டுதல் இருக்குமேயானால் அவர்கள் சிறந்த கண்டுபிடிப்புக்களை உருவாக்கமுடியும். இவ்வகையில், எனது இந்த சிறுமுயற்சி ஆய்வாளர்களுக்கு, உகந்ததொரு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது..

சமீபத்தில் நிகழ்ந்த இந்திய வம்சாவழியினருக்கான பன்னாட்டு  அவையின் (Global Organization for the People of Indian Origin; GOPIO) அட்லாண்டா கிளையின் துவக்கவிழாவிலே, இந்நூல் அறிமுகப் படுத்தப்பட்டது.   ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தலைமை அதிகாரி திரு சஞ்சீவ் அரோரா அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 




எனது நூல் அறிமுகப்படுத்தப்படுகிறது:  
பத்மினி சர்மா, நான், திரு சஞ்சீவ்  அரோரா  

இந்நூலுக்குப் பின்னே எனது உழைப்புக்கு உந்துசக்தியாக அமைந்தவர்கள் சென்னைப் பேராசிரியர் இராஜா கணேசன் மற்றும்  அட்லாண்டா டாக்டர் பத்மினி சர்மா. இவர்களுக்கு எனது வணக்கங்கள்.


பேராசிரியர் இராஜா கணேசன் 

 .
 
     



 
 

0 comments:

Post a Comment