சத்தமின்றி -சித்தமொன்றி: அன்னா ஹசாரே
எவரும் இதனை எதிர்ப் பார்த்திருக்க மாட்டார்கள். கூச்சலும், குழப்பமும், கூத்தாட்டமும் நிறைந்த நம்மூர் அரசியலில், இத்தகையதொரு புரட்சி முளைக்கும் என்று எவரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
கத்தியின்றி, இரத்தமின்றி சத்தியப்போர் என வருணிக்கப்பட்ட காந்தியடிகளின் புரட்சிக்கு அடுத்து, மற்றுமொரு சாதனைப் புரட்சி இங்கே கிளம்பியிருக்கிறது. இது குறுகிய காலத்தில் வளர்ச்சி கொண்டு புகழடையும் நோக்கத்திற்காக போடப்பட்டிருக்கிற அரசியல் நாடகம் அல்லவென்பது கண்கூடு
.அஹிம்சா வழியில் இயங்கி வந்திருக்கிற அதிகப் பிரபலமில்லாத ஒரு முதியவரின் பின்னே மாபெரும் ஜனத்தொகுதி திரண்டு நிற்கிறது என்றால் மக்கள் நமது அரசியல் மீதும் அரசியல் வாதிகளின் மீதும் எத்தனை வெறுப்படைந்து - நம்பிக்கையிழந்து போயிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
இன்று, அன்னா ஹசாரே எனும் இந்த - சாதரண மனிதரைக்கண்டு -
படைபுடை சூழ, அரசியல் அரிதாரம் பூசி, ஊழல் சாம்ராஜ்ஜியம் நடத்திவரும் நமது தலைவர்களுக்கு, நாடி நரம்பெல்லாம் நடுக்கம் கண்டு போயிருக்கிறது.
அதர்மம் மலியும்போது அவதாரப் புருஷர்கள் தோன்றுவார்கள் என்று சொல்வதுண்டு. சத்தமின்றி -சித்தமொன்றி மக்கள் யாவரும் இந்த மனிதரின் பின்னே எழும்பி நிற்பது, பாரதம் காணப்போகும் மறுமலர்ச்சியா?
சீர்திருத்த வித்துக்கள் முளைத்து எழும்போது அவற்றிற்கு, நீர் கட்டி, எரு அட்டி, களைவெட்டி, அரண் கட்டிப் பாதுகாக்கவேண்டியது சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொருவரது கடமையுமாகும். இதிலே உமது பங்கு பணி?
ஒன்று மட்டும் உறுதி!
மாற்றம் தேவை!
ஏமாற்றம் கண்டது போதும்!!
அன்னா ஹசாரே
அவ்வைமகள்
0 comments:
Post a Comment