Subscribe:

Pages

Thursday, June 16, 2011

மண மனம்

மண மனம்  
மாலையிட்டுக் கூடவில்லை 
தாலி கட்டி ஆளவில்லை - வீடு 
கட்டி வாழவில்லை இல்லையே - நல்ல
ஜோடி இங்கு சேர்ந்து போனதிங்கு உண்மையே!

மேளம் கொட்டி ஊதவில்லை
தாளமிட்டுப் பாடவில்லை - ஊரைக் 
கூட்டிச் சொல்லவில்லை இல்லையே - ஒரு
திருமணம் தான் நடந்து போனதுண்மையே!

சாத்திரங்கள் பார்க்கவில்லை
சீதனங்கள் கோரவில்லை - இங்கு
காத்திருக்க நேரமில்லை இல்லையே  நாங்கள்
சேர்ந்திருக்கப் போவதிங்கு உண்மையே

கேலி கண்டு அஞ்சவில்லை
தோல்வி கண்டு துஞ்சவில்லை - போலி 
வாழ்க்கை நாடவில்லை இல்லையே -  இன்று
போல என்றும் இணைந்து நிற்போம் உண்மையே!

துன்பம் கண்டு துவளவில்லை
தூற்றல் கண்டு மருளவில்லை - உண்மைக்
காதலென்றும் சாவதில்லை இல்லையே - பெரும்
சாதனையைப் படைத்து விட்டோம் உண்மையே! 

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)
 

 

Wednesday, June 15, 2011

பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?

பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?



பெண்கள் முன்னேற்றம் என்பது பற்றி சிந்திக்கும்போது
பெண்கள் பலவகையில் முன்னேறியிருக்கிறார்கள் என்பதனை ஒத்துக்கொள்ளாதாவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.

கல்வியிலாகட்டும், வேலைவாய்ப்பிலாகட்டும் பெண்கள் ஆணுக்கு சரி நிகர்சமானமாய் வந்துவிட்டார்கள்.

சொல்லப்போனால், ஆண்களைக்காட்டிலும் ஒருபடிமேலே என்று சொல்லும்படியாகத்தான் அவர்கள் இன்று பரிமளிக்கிறார்கள்.

பெண்களுக்கான தனிக்காவல் நிலையங்களும், சிறப்புச்சட்டங்களும் வந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பெண்கள் வியாபாரிகளாகவும், தொழில் முனைவர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் இன்று உயர்ந்தோங்கியிருக்கிறார்கள்.

ஆண்கள்மட்டுமே செய்யமுடியும் என்கிற எந்தஒரு வேலையையும் அவர்கள் வெகுசிறப்பாக செய்துமுடிக்கிறார்கள். வான், கடல் என எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. எங்கும் அவர்கள் அழுத்தமாய்த்தம் முத்திரையைப் பதித்து வருகிறார்கள்.

ஏறக்குறைய பெண்களைப்பற்றிய வகையில் மிகப்பெரிய சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் மூத்த பெண்மணிகள் இன்றைய இளம் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என அறிய முற்பட்டேன். 
இந்த விருப்பத்திற்கு ஏற்றாற்போல், இங்கு,  வாழ்ந்துவரும் தமிழ் மூதாட்டி  ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவரிடம் பொதுவான விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். பெண்கள் பிரச்சினை பற்றிப் பேசும்போது,   பெண்களுள்ள சிக்கல் பற்றி அவர் கூறியதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


"தன்னடக்கம், கற்பு நெறி, நல்ல பழக்கவழக்கங்கள் என்பவை முன்னெப்போதைக்காட்டிலும் இன்று பெண்களுக்கு கூடுதலாய்த் தேவைப்படுகின்கிறது என்பதை நான் சொல்லத்தேவையில்லை. இது நம் அனைவருக்கும் இப்போது வெளிப்படையாய்த் தெரிந்திருக்கின்ற விஷயம் தான்!" என்றார்.

"முன்னேற்றம் என்ற பெயரில் எதனை அடைய விரும்புகிறோம் அதற்காக எதனை  அடகுவைக்கிறோம் என்பதிலே தெளிவு நிலை இருந்தாலொழிய பெண் முன்னேற்றம் உண்மையில் எந்தப் பலனையும் தராது "என்றார்.

"செழிப்பானதொரு தருணத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தாலும், பெண்களுக்குப் பல இடர்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன" என்றார். 

வேலைக்குச்செல்வது என்றபெயரில், மிக இளவயதிலேயே, தொழிற் கூடங்களுக்குச்சென்று அங்கு தொழில்ரீதியான தொல்லைகளில், ஆரோக்கியப்பிரச்சனைகளில் பெண்கள் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள் என்று சொன்னார்.

ஒருசில இளம் பெண்கள் ஆணைப்போல் உடையணிந்து அவனைபோல் சுதந்திரமாக வாழ்வதே பெண்கள் முன்னேற்றம் என்கிற மாயையில் இருக்கிறார்கள் - என்றார்
 
பொதுவாக, பெண்களுக்கு குடும்பத்தில் கவனம் குறைந்து வருவதாகத் தெரிகிறது என்றார்.

மாதர்,  தம்மை  இழிவுசெய்துகொள்கிற மடமையைக் கொளுத்துவோம்" என்றார்.


அம்மூதாட்டியை   நேருக்கு நேர் கண்களால் சந்தித்து வினவினேன், "நீங்கள் என்ன சொன்னீர்கள்?" என்று  


மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாரதி சொன்னதை நாம் இன்று வேறுவிதமாகப்  புரிந்து கொள்ளவேண்டும்--

இன்று, "மாதர் தம்மைத்தாமே இழிவு செய்துகொள்ளுகின்ற மடமையைக்கொளுத்துவோம்!" என்றார் உறுதியாக.

இது அனுபவப் பெண்மணியின் வார்த்தைகள்.

பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?

இந்த நேரத்தில் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்த ஒரு கவிதை என்றோ படித்தது, கவிஞர் எவரென நினைவில்லை.

பெண் ஆபாசப் போஸ்டரின் மேல் தாரடிக்கபோனார்கள் 
ரவிக்கைக்குக்  கையில்லை தொப்புளில் சீலையில்லை
முதுகில்  ஜன்னல் முன்புறம் கப்பறை      

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran) 


வைகறை

வைகறை 

உழைப்பவர்க்கு வைகறை ஓய்வறை; அறம்
தழைப்பவர்க்கு வைகறை நிதியறை ; தொந்திப்
பசிப்பவர்க்கு வைகறை ஊண்வகை; இல்லம்
வசிப்பவர்க்கு வைகறை நிறைவுவகை ; கல்வி
படிப்பவர்க்கு வைகறை உயர் நிலை; கலை
நடிப்பவர்க்கு வைகறை புகழ் நிலை; துயில்
விழித்தவர்க்கு வைகறை தெளிநிலை; கீழ்
விழுந்தவர்க்கு வைகறை எழுநிலை; நோய்ப்
படுத்தவர்க்கு வைகறை சீர்நிலை; சினம்
கடுத்தவர்க்கு வைகறை குணநிலை; பொருள்
மிகுத்தவர்க்கு வைகறை  கொடையருள்; ஊழ்வலி
மிகுத்தவர்க்கு வைகறை இறையருள்!!

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)






பொழுதுபோக்கு:காலத்தைப் பொன்னாக்குவோம் வாருங்கள்


பொழுதுபோக்கு: காலத்தைப் பொன்னாக்குவோம் வாருங்கள்   


பொழுதுபோக்கு எனும்போது நமக்குக்கிடைக்கும் உபரி நேரத்தைப்பயனுள்ள வகையில் கழிப்பது எனப்பொருள் கொள்ள வேண்டும்.

பயனுள்ளவகையில் பொழுதைக்கழித்தல் என்றால், மூன்று விஷயங்கள் நம் கவனத்திற்கு வரும். அதாவது பொழுதுபோக்கிற்காக நாம் எடுத்துக்கொள்ளும் வேலை (1) நமக்கு மனநிறைவையும் அறிவு வளர்ச்சியையும் தரவேண்டும்  (2) நாம் வாழும் சமுதாயத்திற்குப் பயன் தருவதாய் அமையவேண்டும் (3) நமக்கு,  கொஞ்சமேனும் பணவரவைத் தருவதாய் அது இருக்க வேண்டும்.
   
இன்றைக்குள்ள சூழ்நிலையில் இந்த மூன்று வழிமுறைகளையும், ஒருங்கே தருவது கழிவுப்பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை மீட்பதாகும்.

இதனை ஆங்கிலத்தில் ரீசைக்ளிங் என்பர்.

வீட்டுக்கழிவுப்பொருட்களிலிருந்து, வாணிப, மற்றும் தொழிற்கூடக்கழிவு வரை - பல்வேறுவிதமானக்கழிவுகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கின்றன.
இவற்றை நாம் ரீசைக்ளிங் செய்யவேண்டும் என்றால் பலதகவல்கள் தேவைப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக-

எவ்வாறானக்கழிவுகள் இவை - இவற்றின் தன்மை யாவை, இவற்றை எவ்வாறு பிரித்தெடுப்பது, அவ்வாறு பிரித்தெடுத்தப் பொருட்களிலிருந்து என்னென்ன செய்யலாம் என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் தேவைப்படுகின்றன.

இந்தத்தகவல்களை அறியவேண்டும் என்றால் இதற்கு நாம் அதற்குரிய காலநேரத்தைச் செலவழிக்கவேண்டியுள்ளது. பொழுதுபோக்கு நேரம் இதற்கு உகந்ததாகும்.

இண்டர் நெட் அல்லது இணையதள வசதி மூலம் இதுகுறித்தத் தகவல்களை அறியலாம் என்றாலும், நூலகத்தில் பல நூல்கள் உள்ளன. குறிப்பாகப் பொது நூலகங்களில் இவ்வாறான நூல்கள் நிறைய உள்ளன. நூலகத்திற்குச்சென்று இவற்றைப்படித்துக் குறிப்பெடுத்துக் கொள்ளுவது நல்லது. நூலகத்தில் உறுப்பினராகும் பட்சத்தில், சில புத்தகங்களை நூலகத்திலிருந்து வீட்டிற்கும் கொண்டுவந்து படிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வாங்கி வந்த புத்தகத்தைத் திருப்பித் தந்துவிட்டு வேறு புத்தகங்களை எடுத்துவந்து படிக்கலாம். புத்தகங்களைப்படிக்கும்போது பயனுள்ள இன்ன பிறதகவல்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புகிடைக்கிறது.

மேலும், சில தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், ரீசைக்ளிங் வகையில் பயிற்சிதருகின்றன; இப்பயிற்சிகளில் சேர்ந்து பயில நமது பொழுதுபோக்கு நேரத்தை ஒதுக்கலாம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பார்கள். ரீசைக்ளிங் பற்றி நாம் அறிந்து கொண்டவற்றைப் பிறருக்குச் சொல்லித்தர வேண்டும். நம்மையொத்த சிறுவர் சிறுமியர் ஒன்றுசேர்ந்து இயங்கினால் அது பார்க்க அழகாக இருப்பதோடு பெரியோரது பாராட்டுக்களையும் பெறும்.  இதற்கென, நமது வீட்டை அல்லது பள்ளியை மையமாகக்கொண்டு சிறுகுழுக்கள் அமைத்துச்  செயல்படலாம்.  

பிறருக்குச் சொல்லித்தருவதிலே எத்தனை ஆனந்தம் இருக்கிறது என்பதை இவ்வாறானப் பயிற்சிகளில் நாம் கண்கூடாகக் காணமுடியும். பயிற்சிமுடிந்த கையோடு ரீசைக்ளிங் செய்யும் செயல்பாட்டில் நாம் இறங்க வேண்டும். குழுக்களாகச்செய்யும்போது பலம் பெருகும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல நிறைய பணிகளைக் குறுகிய காலத்திற்குள் செய்யமுடியும். இதனால் மனிதஆற்றலை நாம் மேம்படுத்த முடியும்.

குப்பையிலிருந்து மாணிக்கம் என்பார்கள். ரீசைக்ளிங் முறையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடத்திலே நல்ல வரவேற்பு இருப்பதால்; அவற்றை அவர்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். எனவே மாணவர்களாகிய நாம் படித்துக்கொண்டே பணம் ஈட்டவும் முடியும்.

ரீசைக்ளிங்க் என்பது சுற்றுச்சூழல் மாசுபடுதலைக்குறைக்கும் ஒரு அணுகுமுறை என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நல்லதொரு வழி என்பதால் இதில் குழந்தைகளாகிய நாம் கவனம் செலுத்துவது நல்லது.  பொறுப்புள்ள குடிமக்கள் நாம் என்பதனை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.



ரீசைக்ளிங் எனும்போது இதில் நிறைய ப்ராஜெக்ட்க்ள் உள்ளன; குழந்தைகளாகிய நமது வயது, நேரம்,  ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டு எளிய ப்ராஜெக்ட்களைத்தெரிவு செய்து கொள்ளுவது நல்லது.

எடுத்துக்காட்டாக,  வீட்டுக்காய்கறிக் கழிவில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், தூக்கி எறியப்படும் பேனா மற்றும் பிற பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பொம்மைகள் தயாரிப்பது. பழைய துணிகளிலிருந்து, பைகள், பொம்மைகள், மிதியடிகள் செய்வது, தூக்கியெறியப்படும் அட்டைகள், தாள்கள், மரத்தூள், கொண்டு வாழ்த்து அட்டைகள் தயாரிப்பது,  ஆகியன நமக்கு ஏற்றவையாகும்.



கழிவாக வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் காகிதத் தகடுகளை க்ரோஷா என்று நாம் சொல்லும் நூல்பின்னல் மூலம் இணைத்து அழகிய திரைச்சீலைகளை உருவாக்கலாம். இவ்வகைப்பொருட்களுக்கு வெளி நாட்டிலே அதிக வரவேற்பு உள்ளது. நமக்குள்ள கற்பனைத்திறனைப்பயன்படுத்தி வசீகரமானதும் தரமானதுமான பொருட்களைத்தயாரித்தால் அதனை நல்ல விலைக்கு விற்கமுடியும். கணிசமான அன்னியச் செலாவணியையும் ஈட்டமுடியும். 

இவற்றையெல்லாம் சாதிக்கவேண்டுமெனில் அதற்கு நம் பொழுதுபோக்கு நேரத்தைச் செலவிடவேண்டும் என்பது அவசியமாகின்றது.



இன்னொருபடி மேலே சென்று ரீசைக்ளிங் பற்றி வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், போன்ற ஊடகங்களில் நாம் நிகழ்ச்சிகள் படைக்கலாம் - கட்டுரைகள் எழுதலாம். சமுதாயசேவையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள இது நல்லதொரு வாய்ப்பாகும்.

நம் வீட்டு வாசலில் ரீசைக்ளிங் கோலம் போடுவது ஒரு நல்ல விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்.

இவ்வாறு பயனுள்ள வகையில் நேரத்தை நாம் திட்டமிட்டுச்செலவழித்தோமேயானால்,நம் சின்னசிறு கைகள் ஒன்றிணைந்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதனைப் பெரியவர்கள் புரிந்து கொள்வார்கள், 

பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரத நாடு என உலகமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.



ஆதிரை (Sri Madhavi Rajasekaran)



  
  














 



Tuesday, June 14, 2011

சாத்தானின் வேதம்

சாத்தானின் வேதம்



உனது சுட்டுவிரலை என்பாற்காட்டி
எனைக்குற்றவாளியாக்கினாய் - சுடுமொழியால்
எனது நெஞ்சைக்குத்திக்கிழித்து வேகவைத்தாய்
பரவாயில்லை ஐயனே! பரவாயில்லை!!
காலமும் நேரமும் சாதகமானால்
இங்கே சாத்தான் கூட வேதம் ஓதும்!!!
                                                   
                                                     அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)

நமது தேசியப் பறவை: மை, மையல், மயில்

நமது தேசியப் பறவை: மை, மையல், மயில்  

நமது தேசியப்பறவையாக மயிலைத்தெரிவு செய்தது எவ்வாறு?

இந்தியத்துணைக்கண்டத்து பூர்வீகவாசியானது மயில். இந்தியா முழுவதும் மற்றும் பாகிஸ்தானில் சில இடங்ககளிலும் மயில் காண்ப் படுகிறது.  எனவே இப்பறவையை தேசியப்பறவையாகத் தெரிந்தெடுத்தது  மிகவும்  பொருத்தமானது. 
மயிலை, ஆங்கிலத்தில், Peafowl  என்ற பொதுப்பெயருடன்  அழைப்பர். ஆண் மயிலை peacock என்றும், பெண்மையிலை  peahen என்றும் அழைக்கின்றனர். மனித இனத்தைத்தவிர, மற்ற விலங்கின வகைகளில் பெரும்பாலும் ஆண்களே அழகாய் இருப்பார்கள் என்ற கூற்றிற்கு ஆன்மயிலின் தோகையும் அதை விரித்து அது நடனமாடும்  காட்சியும் சான்றுகள். 
நன்கு வள்ர்ந்த ஆண்மயிலின் தோகையில் ஆயிரம் கண்கள் இருக்கும் என்பார்கள். மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது என்பார்களே! இதற்குக் காரணம் உண்டு. நமது தலைமுடி தன்னாலேயே உதிர்தல் போல மயிலிறகும் தன்னாலேயே முதிர்ந்து விழவேண்டும். இதைவிடுத்து இறகைப்பிடுங்குதல் வலியை உண்டாக்கும். நினைத்த வாக்கிலோ அல்லது பிறர்கேட்பதாலோ மயிலால் தனது இறகை உதிர்க்கமுடியாது.


பர்மா மற்றும் ஜாவாவில் காணப்படும் மயில் சற்று வித்தியாசமானது; பச்சைவண்ணம் மிகுந்து இருக்கும் அவ்வகை மயிலை Green Peafowl  என்பர். இந்திய மயில்கள் பச்சை நீலமும், பழுப்பு நிறமும் கலந்தனவாய், பல்வண்ண ஜொலிப்பில், பெரியதோகையோடு கவர்ச்சிகரமாய் வலம்வருபவை.  மெஃஸிகோவில் வெள்ளை மயில்கள் காணப்படுகின்றன.


எண்ணிக்கையைப்பொருத்தமட்டில் இந்தியாவைக்காட்டிலும் பாகிஸ்தானில் குறைந்த அளவு மயில்களே காணப்படுகின்றன, அதிகமான மயில்கள் காணப்படுவது நமது நாட்டில் தான். குன்றுகளும், குறுங்காடுகளும் நிறைந்தனவாய் -  அதிகக்குளிர்ச்சியும், அதிகவெப்பமும் இல்லாதத் தட்பவெப்பமும் உடையனவாய் நம் நாட்டின் பெரும்பகுதிகள் நிலவுவதால், இங்கு மிகதாராளமாகவே மயில்கள் வாழுகின்றன.

தரைமட்டத்திலும் தாழ்வான மரக்கிளைகளிலும் குஞ்சுகளுக்குக் கூடமைத்து வாழும் மயில்கள், சைவம் - அசைவம் என இரண்டும் பிடித்தவை. அசைவத்தில் பூச்சிகளும் கணுக்காலிகளுமே இவற்றின் பிரிய உணவு. 



சரி - மயில் பாம்பை  உண்ணுமா என்ன?
விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
மயில் பாம்பை உண்ணுவது இல்லை; கொல்ல மட்டுமே செய்கிறது!
பரம்பரை பரம்பரையாக ஏற்பட்டுள்ள பகைமை உண்ர்ச்சியின் வெளிப்பாடு இது!
மயிலின் குஞ்சுகளைக் கபளீகரம் பண்ணுவதற்காகப் பாம்புகள் மயிலின் வசிப்பிடத்திற்குள் அத்துமீறி நுழைவதுண்டு.   இதனைத்தடுத்து குஞ்சுகளைக்காப்பாற்றுவதற்காக மயில்கள் பாம்பைக் கண்டமாத்திரத்தில் தாக்கி அழிக்கின்றன. கூரிய நகங்களும் அலகும் இந்தப் பாம்பு வேட்டைக்கு ஒத்தாசை செய்கின்றன.

புத்தமதத்தைச்சேர்ந்தவர்கள் மயிலுக்கும் பாம்புக்கும் உள்ள உறவை வேறுவிதமாகச்சித்தரிக்கிறார்கள். பாம்பை அடக்கும் வல்லமை உள்ள ஒரே ஜந்து மயில் மட்டுமே! இதனால் மயில்  எங்களது வழிபாட்டுப்பறவை என்கிறார்கள்.

ஒரு கதை:  ஒரு புத்தபிட்சு பாம்புத்தொல்லையால் நடுங்கிக் கடவுளை வழிபட்டாரம். அப்போது ஒரு மயில் தோன்றி அந்தப்பாம்பை நேருக்கு நேர் நோக்கியதாம்; அந்தக்ககூரிய பார்வைக்குக்கட்டுப்பட்டு அந்தப் பாம்பானது மயிலின் உடலின்மீது ஏறி அமைதியாகச் சுற்றிக்கொண்டதாம். பாம்புடன், மயில் அங்கிருந்து பறந்து தொலை தூரத்திற்குச்சென்று பாம்பை உதறியதாம். இதனால் பாம்பும் பிழைத்தது; பிட்சுவும் பிழைத்தாராம்.


ஆண்-பெண் தொடுப்பில் நம்ம ஊர் பல-நிற மயில்கள் தனித்தன்மை உடையனவாய் இருக்கின்றன. பெண்மயில்கள் பதிவிரதைகளாகும். ஒரு பெண்மயில் ஒரு ஆண் மயிலோடு மட்டுமே உறவு கொள்ளும். ஆண்மயில்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்மயில்களுடன் உறவு கொள்வது உண்டு.

ஆனால் பச்சை மயில்கள் இவ்விஷயத்தில் மிகுந்த கற்புநெறியோடு செயல்படுகின்றன. ஒரு ஆணுக்கு ஒரு பெண் என ஏகபத்தினி-ஏகபதி விரதைகளாய் அவை வாழ்கின்றன.

குன்றுதோராடும் மயிலை, குன்றக் குமரனாகிய முருகன் தனது வாகனமாக்கிக்கொண்டது பக்தி இலக்கியம் காட்டும் புது அறிவியல். அதிக வேகத்துடன் அதிக உயரத்தில் பறக்கவியலாத பறவை மயில். தந்தையிடமிருந்து மாங்கனிபெறும் போட்டியில் மயில்மீது ஏறி  உலகைவலம் வந்து, பரிசை வேண்டுமென்றே தவறவிட்டு, திருவிளையாடல் புரிந்த அவன் காட்டும் சகோதரபக்தி நம்மை வியக்கவைக்கிறது.


கோயில் கொட்டடிகளில் மயில் வளர்க்கப்படுவதை நாம் அறிவோம்.  மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய்  உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.)

ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும். இன்று, பச்சை மயில்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன. எஞ்சியுள்ளப் பச்சை மயில்களைப் பாதுகாக்க இம்முறையைத் தழுவலாம்.

சைனாவிலும் ஜப்பானிலும் மயிலை, கருணை தெய்வமாகக் கருதுகிறார்கள். க்வான்-இன்-குவானான் என்பது அந்தக் கருணை தெய்வத்தின் பெயர். கிறிஸ்துவம், பேகன், யூதம், இஸ்லாம் உள்ளிட்ட பல சமயங்களிலும் மயில் பற்றி பேசப்படுகிறது. இஸ்லாமியர்களைப்பொறுத்தமட்டில், மயிலை சொர்க்கத்தின் வாயில் கதவைத்திறக்கும் வரவேற்பாளராகக் கருதுகின்றனர்.

பொதுவாக, மயில் என்பது ஆற்றல், கம்பீரம், மற்றும் எழிலைக்குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. விஷஜந்துக்களை அடக்கி அவற்றின் விஷத்தைத் தன் தோகையின் வண்ணமாக்கிக்கொள்ளுவதாக  பலசமயத்தினரும் நம்புகின்றனர்.

உலகில் பலரும் மயிலை தெய்வவடிவாக நினைக்கும் அதே நேரத்தில், மயிலின் ஆட்டத்தை கர்வத்தின் பிரதிபலிப்பாகக் கருதுகிறார்கள். மயிலின் தோற்றம் பொலிவாக இருந்தாலும் அதன் கால்களும், குரலும் நளினத்தைப்பிரதிபலிக்கவில்லை. மாறாக, அருவருப்பைத் தோற்றுவிக்கின்றன. இதனாலோ என்னவோ ஐரோப்பியர்கள் மயிலின் குரலையும் அதன் இறகையும் தீயசகுனமாகக் கருதுகின்றனர். 


மயிலாசனம் என்பது ராஜகம்பீரத்தின் அடையாளம். இந்தியாவில் மட்டுமல்ல; பாபிலோன் மற்றும் பாரசீகப் பாரம்பரியத்திலும் மயிலாசனம் பரவலாகப்பயன்பட்டுள்ளதை அறிகிறோம். மயிலாசனம் ஆசனங்களில் ஒரு வகையாகும். உடலை இலகுவாக்கிக்கொள்ள இது உறுதியான வழியாகும்.


நடனங்களில் மயில் நடனத்திற்கு அதிகப் பிரசித்தி உண்டு. 

சூரிய சின்னங்களில், மயில் என்பது ஆன்மாவைக்குறிக்கிறது. ஆன்மா எனும் ஆற்றல் அழியாத தன்மை உடையதாகவும் பலஜென்மங்களை எடுக்கும் தன்மை உடையதாகவும் இருக்கும் தன்மையை மயில் குறிப்பதாக நம்புகிறார்கள் . 


மயிலின் தோகை அலங்கார அழகுப்பொருட்களிலும் விசிறிகளிலும் பயன்படுவதோடு. பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழ் மருத்துவ முறையில், தொடர் வாந்தியை  நிறுத்த மயிலிறகைச்சுட்டு தேனில் குழைத்து அம்மையை, நாவில் தடவுவார்கள்.




மயிலின் இறகு சீக்கிரத்தில் மக்கிப்போகாது; சரியான முறையில் பாதுகாத்தால் நூற்றுக்கணக்கான வருடங்கள் காப்பாற்றமுடியும். பேனா, தொடங்கி, தூரிகை, மருந்து என மஞ்சம் வரைக்கும் பலவகைகளில் மயிலிறகு நமக்குக் கைகொடுத்துவருகிறது. ஆடை மற்றும் உடுப்புக்களில் மயில் டிசைன் உலக அளவில் பிரபலமானதாகும். இதில் இந்தியர்களாகிய நாம் முன்னோடிகளாக விளங்கி வருகிறோம்.


மயிலின் இறகு வெட்ட வெட்ட வரும் தன்மையுடையது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரியாக சிந்தித்தோமேயானால், மயிலிறகை நல்ல வர்த்தகப்பொருளாக, அன்னியச்செலாவணியை ஈட்டித்தரவல்லதொரு அம்சமாக மாற்றமுடியும். மாமிசத்திற்காக இல்லையென்றாலும், இறகிற்காகவும். இனத்தைக்காப்பாற்றுவதற்காகவும், மயில்களைப்பராமரித்து வளர்ப்பது சிறப்பானதாகும்.

விலங்கியல் நிபுணர்கள் இதுபற்றி சிந்திப்பார்களா?
---அவ்வை மகள் (Dr Renuka Rajasekaran)

அவமானம்

அவமானம்
அவமானம் ஒரு சன்மானம்
தன்மானம் சிறந்தோங்கி
பெருமானம் பெறுமாறு
பிறர் மானம் கெடுமாறு
மனம் மானம் உருமாறு
மண் மானம் எழுமாறு
விண் மானம் தருமாறு
உயர்மானம் உயிராகி
உயரவைக்கும் வெகுமானம்

                                                         அவ்வை மகள்  (Dr Renuka Rajasekaran)

வறுமை


வறுமை


வறுமை வருமேயானால்
பெரும்பேறு பெற்றானாவாய்
வறுமை ஒரு வேள்வி
வறுமை ஒரு படிப்பினை
வறுமை ஒரு வெளிச்சம்
வறுமை ஒரு விளக்கம்
வருமை ஒரு தவநிலை
வறுமை ஒரு தூய்மை
வறுமை ஒரு உருமாற்றம்
வறுமை ஒரு முனைப்பு
வறுமை ஒரு வளப்பம்
வறுமை ஒரு உயர் நிலை
வறுமை ஒரு வாழ்வியல் பயிற்சி

அவ்வை  மகள்  (Dr Renuka Rajasekaran)

விதி: ஆதிரையின் கவிதை

விதி

 
திதி, தேதி, தாதி, வீதியென
விளக்கம் கூறும் சொற்கள் பலவிருக்க
இது என்ன "விதி" என்றொரு சொல்?
விதிக்கப்பட்டது விதி என்றால்
எவர் விதித்தார்? ஏன் விதித்தார்?
பாரடேயின் விதி மின்பகுப்பை நிர்ணயிக்கும்
நியூட்டனின் விதி இயக்கத்தை இட்டுரைக்கும்
மெண்டலின் விதி மரபணுவை மகிழ்ந்துரைக்கும்
வெப்பவியல் விதி பிரபஞ்சத்தின் நிலையுரைக்கும்
ஆனால் மனிதன் கூறுகின்ற
"விதி"யை எவன் உரைத்தான்
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் அவரவர்
கருமமே கட்டளைக்கல்
என்ற வள்ளுவன் விதியே வாழ்வியல் விதி
தலைவிதி என்றும் கொடுப்பினையென்றும்
தன்னையும்சகமனிதர்களையும் இழிப்பது
விதியல்ல இவை சதியேதான்
இனியொரு விதிசெய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
விதியென்று வீணுரைக்கும்
வில்லங்கவாதிகளை
விதிப்படி இடித்துரைப்போம்
விதி விதிப்படி நடக்கும் ஆனால்
மதியோ விதியை வெல்லும் என்று

                                            ஆதிரை (Sri Madhavi Rajasekaran)

Sunday, June 12, 2011

மாமா என்றொரு ஆங்கில வார்த்தை

மாமா என்றொரு ஆங்கில வார்த்தை 

எவரொருவருக்கும் தாய் போல்  ஒரு உறவை  எவராலும் தர முடியாது. மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவா போகிறோம் என்று, ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமக்கிடையே பேதமிருப்பினும்,  அவற்றை ஒதுக்கித் தள்ளி ஒற்றுமையுடன் வாழ்வது கண்கூடு. அன்பென்றாலே அது அம்மா தான். மற்ற உறவுகளெல்லாம் சும்மாதான்!!    

மாமா, மாமா என்று தனது  அன்னையைச் சுற்றிவந்தபடி வளர்ந்துவந்த சம்மர் எனும் இந்தப் பெண்ணுக்கு அன்னையே கேடு விளைவிக்கிறாள். 
அம்மாவைத் தேடி வீட்டுக்கு வரும் அம்மாவின் பாய் பிரண்ட், பத்து வயதேயான  சம்மரிடமும் நயமாக நடந்து கொண்டு மெல்ல மெல்ல அவளையும் தகாத உறவுக்கு அடிமையாக்கிவிடுகின்றான். போதைப் பொருட்கள் ருசிகாட்டப் படுகின்றன. பாலியல் உறவோ - போதைப்  பொருட்களோ -  இவையெல்லாம் சம்மருக்குத் தண்ணி பட்ட பாடு. சம்மரின் மாமா இவற்றுக் கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை - உடந்தையாக இருக்கிறாள் . 

குற்றங்கள் செய்வதில் கில்லாடியாகிறாள் சம்மர்.  தொடர்க்  குற்றங்கள் - திருடுவது - வீடு புகுந்து கொள்ளையடிப்பது - கிரெடிட் கார்ட் மோசடி என - அடிக்கடி ஜெயிலுக்குப் போவது என்பது அவளுக்கு வாடிக்கையாகிப் போன ஒன்று.       



பதினைந்தே வயதாகும் அவளுக்கு சமீபத்தில் ஒரு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தை பால் குடிக்க மறுக்கிறது - நீர் குடிக்க மறுக்கிறது - தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அந்தக் குழந்தை பராமரிக்கப் பட்டு வரும் நிலையில் - அக்குழந்தைக்கு இரத்தப் பரிசோதனை நடத்துகிறார்கள். திடுக்கிடும் தகவல் கிடைக்கின்றது. கர்ப்பமாய் இருக்கும்போது சம்மர் சாப்பிட்ட போதைமருந்துகள் யாவும் - கருவில் வளர்ந்து வந்த சிசுவிற்கும் போக   - இக்குழந்தை பிறப்பதற்கு முன்னரேயே போதை மருந்துக்கு அடிமையாகி விட்டது.  இரத்தத்திற்குள் நேரடியாக போதை மருந்துகள் கலந்து வந்த நிலையில் அக்குழந்தைக்கு போதைமருந்தே உணவாகச்  செயல்பட்டு வந்திருக்கிறது. 

இப்போது, பிறந்து வெளிவந்து விட்டாதால் தாயின் போதை சப்ளையிலிருந்து பிரிக்கப் பட்டு அக்குழந்தைக்கு, போதைக்காக அலையும் வெறி நிலை ஏற்பட்டுத் துன்பப் படுகிறது!

வாழையடி வாழையென வந்த  மரபு என்பார்களே அது போல பல மாமாக்கள் செய்யும் பிறழ்வுகளும் குற்றங்களும், தொடர்கின்றன  - தொடர்கின்றன என்று சொல்வதைவிட - ஒவொவொரு - தலைமுறையிலும் - அவை பன்மடங்கு அதிகமான  பாதிப்புகளை   ஏற்படுத்துகின்றன.  இன்று மருத்துவமனையில் இருக்கின்ற  பெண்குழந்தை பிழைக்குமா? பிழைத்தாலும், அவளால் இயல்பாக வளர முடியுமா வாழமுடியுமா? அப்படியே வாழ்ந்தாலும் அவளால் உருப்படியான சந்ததியை உருவாக்க முடியுமா?

மாமாவோ அம்மாவோ  அன்னையாக இருப்பதல்லவோ தாயின் பண்பு? கலாச்சாரங்கள் கடந்த கடமையல்லவா இது?