Subscribe:

Pages

Tuesday, May 17, 2011

வேதியியலில் எங்கள் உறவுப்பாலம்

வேதியியலில் எங்கள் உறவுப்பாலம்  

டாக்டர்  ஷவாண்டா மில்ஸ் - ஜார்ஜியா கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் வேதியியல் இணைப்பேராசிரியர். அமெரிக்க வேதியியல் சபையின்  "சிறந்த விஞ்ஞானி"  விருது பெற்றவர். 

பழக இனியவர்; உதவி செய்தலுக்கு நல்ல உதாரணமாய் இருப்பவர். 
வேதியிலில் பெண்களின் ஒத்துழைப்பு எனும் அமைப்பின் வாயிலாக,  தொழில் ரீதியான உறவு கொண்டு ஒருவருக்கொருவர் சார்பாய், அனுசரணையாய், இயங்கி வருகிறோம். 

இருவருக்குமே வேதியியல் என்றால் உயிர். ராக்கெட்டுகள் முதல்  வேதமாகங்கள் வரை அனைத்தையும் அலசுவோம். கொஞ்ச காலத்திற்கு முன்பு நான் எழுதிய வேதியனும் வேதிகனே என்ற என் தமிழ்க் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யச் சொல்லிக்  கேட்டு மகிழ்ந்த எளிய அறிவியல் பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. 
 
Dr R என்று என்னை மென்மையாய் இரத்தினச் சுருக்கமாகக் கூப்பிட்டு என்  உள்ளம் கவர்ந்த காரிகை டாக்டர் மில்ஸ். 
 

Sunday, May 15, 2011

வெற்றி அன்னையே! அம்மா!! நீவிர் தான் எங்களின் தாய்!!!



வெற்றி அன்னையே! அம்மா!! நீவிர் தான் எங்களின் தாய்!!!

அன்னையர் தினப் பரிசாக வந்தது  போல இருந்தது  தமிழகத் தேர்தல் முடிவுகள்! அம்மா மீண்டும் நம்மைப் பராமரிக்கும் அரியதொரு பொறுப்புக்கு அதிபதியாகிறார். 

ஜெயலலிதா மீண்டும் பதவியில் அமர்வது  - ஆட்சிமையை மீண்டும் துவங்கபோவது - என்ற ஏகப்பட்ட சடங்குகள் - தொடரப்போகின்றன.

நம் மக்களில் பெரும்பாலோர், இந்தச் சடங்குகளில் எவ்வித ஈடுபாட்டையும் காட்டவில்லை என்பது உறுதி. 

இந்தப் பரபரப்புக் களேபரம் அடங்கி,  இயல்பாய் வாழும் வாழ்வு என்று துவங்கும் என்றே  அவர்கள் ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறார்கள்.

ஜிகினா பளபளப்பில், மதியிழந்து, ஓட்டுப் பொறுப்பில் கோட்டை வீட்ட நிலை மீண்டும்  ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்துபவர்களே ஏராளம் பேர்.
 
தொடர்ச்சியாய் ஏறும் விலைவாசியால், தொடர்ந்து சரியும் வாழ்க்கைத்தரம், ரௌடி அரசியல், பாதுகாப்பற்ற நிலையில் அல்லாடும் இளம் பெண்கள், களைய முடியாத ஊழலுடன் கல்விக் கூடங்கள், முறைமைகள் இல்லாத வேலை வாய்ப்புக்கள், வசிக்க இயலாத வீடுகள், தாகம் தணிக்காத் தண்ணீர், போக்கிடம் இல்லாத முதியவர்கள், போக்கிரித்தனத்தில் இளைஞர்கள், நலிந்து போன கிராமங்கள், நரகமாய்ப் போய்விட்ட நகரங்கள், அம்மா இல்லாத வீடுகள், கும்பல் கூடும் ட்யூஷன், மக்கள் சங்கிலியாய் ரேஷன் கடை கியூ,------

நீளும் இந்தப் பட்டியல், நம் அன்னையின் கண்ணில் புலப்படட்டும்.

அவரது போன பதவிக் காலத்திற்கும், இப்போதைய பதவிக் காலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை  அன்னை அறிவாராக. மிகக் குறிப்பாக, அவருக்கு வயது முதிர்ந்திருக்கிறது. எனவே அவருக்கு விவேகம் முதிர்ந்திருக்க வேண்டும் என்று எவருமே எதிர்ப் பார்க்கிறார்கள்.

அவரது போன பதவிக்காலத்தைக் காட்டிலும், இந்தப் பதவிக் காலத்தில், நம் மக்கள் மிக அதிகமான பரிதவிப்புடன் காணப்படுகிறார்கள். அதிகமான இல்லல்களுடன்  ஒவ்வொரு மணிநேரத்தையும் எப்படியோ நகர்த்தி வருகிறார்கள்.  அவர்கள் உள்ளம் முழுவதும் காயம், அவர்கள் உடல்களில், தொய்வு, களைப்பு, பலவீனம், இயலாமை. அவர்களுக்கு எவ்விதத்திலும் தொல்லை தராதவாறு அம்மாவும் அவரது சகாக்களும் நடந்துகொள்ளட்டும்.

அம்மா இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு 
இணையாக அமரப்போகும் எதிர்க் கட்சிக்கு அரசியல் வரலாறு இல்லை. அனுபவம், இல்லை, முதிர்ச்சி இல்லை. 

ஆனால் இவரை ஒத்த ஜிகினா பளபளப்புடன், இவரை விஞ்சும், யதார்த்த  சூட்சுமத்தைக் கையாளும் திறமையுடன், வன்முறைக் கிளர்ச்சிகளுக்கு வித்திடும் நோக்குடன் வளைய வரும் தன்மை எதிர்க் கட்சியிடம் இருக்கிறது.  அம்மாவின் ஒரு சின்ன சொற்குற்றம் கூட மாநில அளவில்- தேசிய அளவில் - பெரும் கொந்தளிப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம்.

இந்நிலையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும், அரசியல்  நடத்தப் போகிறார்களா அல்லது போட்டா போட்டி போட்டுக் கொண்டு  ரகளை செய்யப் போகிறார்களா என்று மக்கள் மனக் கலவரத்துடன் காணப் படுகிறார்கள் என்பதை   அம்மா புரிந்து கொள்ளட்டும். 


அம்மா முன்னெப்போதும் இருந்திரா முதிர்ச்சியுடனும், பொறுமையுடனும், கண்ணியத்துடனும், கடமை நோக்குடனும், கவுரவத்துடனும், அரசை நடத்திச் செல்ல  வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அம்மா இதனைச்  செய்தாக வேண்டும்.

தமிழில் பேசாத முதல்வர் என்று முந்தைய  ஆட்சியில் பட்டம் வாங்கிகட்டிக் கொண்டத்தை, அம்மா மறந்து விடக் கூடாது, இன்று காலை கூட, காரில் இருந்தபடியே  நிருபர்களிடம் ஆங்கிலத்தில் பேசியதை உலகமே  கண்டது. தமிழால் பேசி மட்டுமே  தமிழக அரசியலில் சாதிக்க முடியும் என்பதை  காமராசர் முதல், அண்ணா  - கலைஞர் - ஈறாக -  நல்ல அரசியல் தலைமைக்கு எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. தமிழ்த்தாய் வாழ்த்துச் சொல்லி  மட்டுமே அரசு விழாக்கள் தொடங்க முடியும் என்று சட்டம் போடும் அரசின் தலைவி தமிழைப் புறக்கணிப்பதை  - தமிழன்னை பொறுக்கமாட்டாள் - மன்பதை மன்னிக்காது.     

தோழி நாடகமும், வளர்ப்புப் பிள்ளை சாகசங்களும், முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசுவதும், ஆடம்பரங்களும் விடுத்து, திடீர்ப் புரட்சி உடைகளும், அலங்கார அணிகலன்களும் தவிர்த்து,  படாடோபம் இல்லாது எளிமையாய் நடந்து கொண்டால் அன்னை அரியணைக்குப் பெருமை சேர்ப்பார். அன்றேல் நினைத்துக் கூடப் பார்க்க முடியா நெருக்கடிகளை அவரும், அவற்றால் தமிழக மக்களும் சந்திக்க நேரிடும்.

இன்று அன்னைக்குத்  தேவைப்படுவது: வேகமல்ல - விவேகம். உணர்ச்சி அல்ல முதிர்ச்சி.  முகஸ்துதிகள் அல்ல- இடித்துரைப்பு. 


 வாழ்வா சாவா என்கிற நிலையில் பற்பல குடும்பங்கள் தத்தளிக்கின்ற வேலையில்  காட்சிக்கு எளியவராய் - கடுஞ்சொல் அல்லாதவராக இருந்தால் மட்டுமே அன்னை மக்களின் மனதில் அமருவார்.  தமிழக மக்கள் மாற்றாந்தாயை நம்பும் விருப்பமில்ல்லாதவர்கள்.

 இன்று ஒன்று மட்டும் தெரிகிறது; மக்கள் முன்னைப்போல, பொறுமையுடன் அரசியல் வாதிகள் கூத்தை வேடிக்கைப பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.  சாது மிரண்டால் காடு  கொள்ளாது  என்பது  போல அவர்கள் ஆக்ரோஷத்துடன் கொதித்து எழுந்து விட்டால் --  அரசுகளில் பாடு அதோகதிதான்.

மக்கள் கொதித்தெழும் அந்தப் பிரளயம்  நியாயமானது என்றாலும் அது  வெகு பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் பதவியில் அமரப் போகும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்,  தன்னடக்கத்துடன், பணிவுடன், தமிழக மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்பது அவர்களது தலையாய கடமை. சொல்லப் போனால் மக்கள் முன்னே இவர்கள் இரந்து பெற்ற ஓட்டுக்களால் மட்டுமே இவர்களுக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது!!  இது மக்கள்  போட்ட "பிட்சை " என்பதனை இவர்கள் இருவரும் கணந்தோறும் எண்ணிப் பார்க்கட்டும். 

ஜெயலிதா என்றால், அதர்மத்தை வென்ற அன்னை என்பது பொருள்.
அம்மா தனது  பெயரையும் தமிழகத்தின் பெயரையும்  காப்பாற்றுவாராக!

விஜய காந்த் என்றால் வெற்றி விரும்பி என்று பொருள். ஐயா!! உங்கள் பெயருக்கேற்றாற் போல் நீங்கள் இயங்கி வருவதை மக்கள் அறிவார்கள்!

நினைத்ததைச் சாதிக்கும் திறன் படைத்த நீங்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றவாறு, வன்முறைக்கு வித்திடாத அரசியலையும், ஆளும் கட்சிக்கு பலமாய்  இருந்து, நல்ல பல செயல் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தை உயர்த்துவதை  மட்டுமே நினையுங்கள்.  முதல்வராக வேண்டும் என்ற உங்கள் உள் நினைப்பை மக்கள் அறியாதவர்களா என்ன?

ஆட்சிமைப்பொறுப்பில் வருவது  பெண் என்பதில் உமக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. உம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் அவர் மூத்தவர் என்பது அடிப்படையாகும்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாரதியின் வழி வந்த நீங்கள், உமது பொறுப்பை நழுவவிடமாட்டீர்கள் என்று தமிழக  மக்கள்  எதிர்ப்  பார்ப்பது இயல்பே!!  உமது சொல், சிந்தை, செயல் இவை மூன்றிலும் இறுக்கத்தை விடுத்து,  இணக்கத்தை இணைத்து  மக்கள் விரும்பியாக நீங்கள் உருமாற்றம் - உளமாற்றம்  அடைய  வேண்டும். தலைவனாக நடிப்பதற்கும், தலைவனாக நடப்பதற்கும் லட்சக்கணக்கான வித்தியாசங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறியாதவரா  என்ன?


தமிழகம் தரணியில் தனிப்பெரும் கவுரவம் பெறுவதற்கு ஜெயலலிதாவும் விஜயகாந்துமான நீங்கள் இருவரும் பொறுப்பேற்று  நடப்பீர்களாக!!

வாழ்க தமிழகம்!!        


   

 

Thursday, May 12, 2011

வண்ண வண்ணச் சேலைங்க!! வசதியான சேலைங்க!!

வண்ண வண்ணச் சேலைங்க!! வசதியான சேலைங்க!!

இந்தியா தொடர்பான விழா என்று வந்துவிட்டால், விழா நடக்கும் இடத்தில் ஒரு குட்டி பஜார் வந்து விடும். 

அங்கே என்ன கிடைக்கும்? 
எல்லாம் கிடைக்கும்.
கல்வி, கலை, ஆன்மிகம், மருத்துவம். என எல்லாமே அதில் அடக்கம். 

மிகக் குறிப்பாக, நம்மூர் உடுப்புக்களும், அணிகலன்களும் இங்கு மாபெரும் அணிவகுப்பையே நிகழ்த்தி விடும்.

க்வின்னட் பன்னாட்டுக் கலையரங்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய  விடுதலை விழா பிரம்மாண்டமானதொரு விழாவாகும்.

செல்லும் வாயெல்லாம் சேலை என்பதை என்னால் இயன்ற அளவுக்குக்   காப்பாற்றி வருகிறேன்.

கடந்த விடுதலை விழாவிலிருந்து சில காட்சிகள் !!






 
  

Saturday, May 7, 2011

நம்பிக்கைப் பெண்மணி : டாக்டர் பத்மினி சர்மா


அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில்: திரு சந்த் குப்புசாமி, திரு ஆனந்த் தங்கமணி, டாக்டர் பத்மினி சர்மா, திரு சேக்கிழார், நான்   
  
 நம்பிக்கைப் பெண்மணி
 
எத்தனையோ வேலைக்கு நடுவிலும் என்னைப் பற்றி நினைக்கும்  - டாக்டர் பத்மினி சர்மா

நெல்லின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் படியாக தனது பெயரை Paddy Sharma  என மாற்றியமைத்துக் கொண்டவர். கேட்காமலேயே உதவி புரிபவர். தமிழ்ச் சமுதாயத்திற்கும், இந்தியச் சமுதாயத்திற்கும் அயராது  பாடு பாடுபடுபவர். 

எத்தனையோ வேலைக்கு நடுவிலும் என்னைப் பற்றி நினைக்கும் பெண்மணி. மனம் விட்டுப் பேசுவதற்காய் இவர் தேடும் ஒரு சில ஜீவன்களில் நானும் ஒருத்தி என்பது இவர் எனக்கு அளித்திருக்கின்ற நம்பிக்கை ஊற்று.

சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சி மாநகரைப் பூர்வீகமாய்க்  கொண்டவர். செல்லுமிடமெல்லாம் தமிழில் பேசுமாறு தமிழர்களை வேண்டிக் கேட்டுக்கொள்ளும் இவரது தமிழ்ப்பற்று போற்றுதற்குரியது, 
 

இவரது மணிவிழாவின் போது இவருக்கு நானளித்த கவிமாலை.

 பாடிகள் நிறைந்த வடவாற்காடு ஆங்கு
பாடிப்புகழ்போந்த கச்சி கோயிலம்பதி
பாடிப்பரவிய வேதமாகமங்கள் அவை விளங்குறப்
பாடிய அறவோர் குலமுறை இசைப்
பாடிய ஆடியில் ஆயில்யத்தாரகை முறைப்
பாடிய வகையினில் பத்மினி பிறந்தனள்
பாடிய பாட்டும் சொல்லிய எழுத்தும் வாய்ப்
பாடிய கணக்கும் வாய்த்த பாங்கினில் வியப்
பாடிய வாய்களும் விரிந்த கண்களும் எதிர்ப்
பாடிய பேர்களும் வளரவே உயர்ந்தனள்; அவர்
பாடிய வண்ணமும் சாடிய வன்மமும் இவள் மனம்
பாடிய வண்ணத்தில் எருவாய்ச் சிறந்திட வாழ்வைப்
பாடிய ஆன்றோர் மணிவாசகத்தில் உளம் உறுதி
பாடியே நின்றது; யாங்கும் கல்விகேள்விகள் தேடியே ஓடினள்
பாட்டிடை மேவிய தொண்டைமண்டலம் சிறப்புடைப்
பாடலம்பதிகளின் அருமை அறிந்தனள்; சிறப்புறு 
"
பாடி"யைத் தனது பெயருடன் இசைக்கவே இவள் இசைந்தனள் 
பாடிஎனும் சர்ம நாமம் தானேசூடினள்; தன்மண்ணிசைப்
பாடியே கிளம்பினள், பாரெங்கும் பறந்தனள், உயர்ந்தனள்
பாடிசர்மா என்றாக்கிய காதல்; கடிமண இணக்கம்
பாடிய பாங்கில் குழலும் யாழும் பிறந்தனப் பேரெழ, வசைப்
பாடிய வாய்களில் புகுந்து புறப்பட்டு இவள் சாதனை
பாடிய சரித்திர முத்திரை; வழுக்குப் பாறையின் அழுக்கைப்
பாடியே வீணாய்ப்போக இவள் விழையா நெஞ்சினள் திறம்
பாடியே சாடுவேன் பிறருயர்வுற வேண்டின செய்குவேனெனப்
பாடிசாண்டிலர்சர்மா நிறுவனம் எழுப்பினள்; ஆன்றோர்
பாடிய கூற்றை வழிமொழி செய்து திரைகடலோடி திரவியம் தேடினள்
பாட்டும் பொருளும் பொருளால் பயனும் கூடிட வேண்டினள்; மன்பதைப்
பாடிப்புகழும் சட்டம், கணினி, கல்வித்துறைகளில் வேலைவாய்ப்
பாடித்திரட்டித் தந்தனள் பல்லோர் பயனுற; அவர் பணத்தையும்
பாடிமனத்திடத்தையும் பாடிடும் பாக்கியம்வழங்கினள் தன்
பாடுகள் மூலம்; எளிமைக்கு எளிமை; வலிமைக்கு வலிமை; கட்டுப்
பாடுகள் நிறைத்து உழைப்பை மிகுத்தினள்; பிறர் படும்
பாடு நினைந்து தன் வலியைமறந்து, தூக்கம், ஓய்வு, உணவு துறந்து
பாடுபடுவதொன்றே என்பணியென ஓடியோடி உழைத்தனள் தேவி
பாடும் பல்லுள்ளங்கள் இவள் பல்லாண்டு வாழ்கவென அவருடன்
பாடும் கொள்ளுவர் இவள் நூராயிரத்தில் ஒருத்தியெனஉலகோர்
பாடும் அறுபது ஆண்டுகள் இவளின்று காணுதல் அற்புதம்தெய்வதம்
பாடும் உன்னதப் பெண்ணிவள் வாழ்க்கையோர் வெற்றிக்களஞ்சியம்
பாடும் கடல்கள் வாழும் வரைக்கும் மாதிவள் வாழ்வு நிலை நிற்கும்! நூலோர்
பாடிய தத்துவம் தழைக்கும்; வீரப்பெண்ணிவள் வாழ்வின் புகழ்விள்ங்கும்!    திசைப்
பாடிடும் கதிரவன் ஒளிமழை போலே அம்மை செயல்திறன் என்றும் சிறந்திடட்டும்!
பாட்டிடைப் புரவலர் பட்டியலில் பாடியின் பெயரும் சிறப்பும் நிலை பெறட்டும்! கவி
பாடிய பாரதி காட்டிய பெண்ணிவளென்றே தரணியோர் போற்றிக்களிக்கட்டும்! நலம்
பாடியே நெஞ்சம் அமைதிகொண்டாடிட ஆண்டவன் நிறையருள் புரியட்டும்!
பாடி வாழிய! நின் சாதனை வாழிய! நின் குடியும் குலமும் தழைத்து வாழிய! எங்கள்
பாடி வாழிய! நின் சிந்தை வாழிய! நின் உறுதியும் தீரமும் நிலைத்து வாழிய! தமிழ்மகள்
பாடி வாழிய! நின் புது நோக்கு வாழிய! நின் திறமைகள் யாவும் செழித்து வாழிய!




அந்த நெலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்

அந்த நெலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்

 
 இப்படி பாடியக் காட்டக் கூடாதாம்!
சட்டைக்கு அளவு வேணும்!
 சட்டத்தில் சரியாய் மாட்டிக்கொண்டாய்!!

 என் அம்மாவின்  பிறந்த நாள்!
எல்லோருக்கும் சொல்லிவிடு!!

உனக்குப்பின்னால் என்ன இருக்கு?
 பூரிக்கட்டை விலை ரொம்ப ஏறிப்போச்சு!! 

 ஷூட்டிங் முடியும் வரை  அப்படியே அசையாமல் இரு!
 உனக்குக் களங்கம்  என்று ஊரெல்லாம் பேச்சு!
துடைக்காமல் விடுவேனா?

 வெள்ளரி பத்தைக்குக் கீழே ஏகப்பட்ட கிராக்கி!! 
 தக்க சிறு பிறைநுதலும் தரித்த பெரும் கோல் நுனியே! 
 அமாவாசையும் கூடாதாம்!! பௌர்ணமியும் கூடாதாம்!! 
 காஷ்மீர் கொள்ளை போகுதுன்னு
கருத்தாய்ச் சொல்லும் சுட்டிப்பெண்ணே! 
 நில்லு! குமிழி எவ்வாறு உருவாகுதுன்னு சொல்லிட்டு நகரு!!
 உனக்கு வண்ணம் பூசச் சொன்னர்கள்!மஞ்சளும் இஞ்சியும் பின்னால் வருகின்றன!!

 ஏய்! விட்டுராதடி! அவ்வைப்பாட்டிக்கு ஏதாச்சும் ஆயிடப் போகுது!
 லேண்டான வேகம்!
 பாட்டி கொஞ்ச நேரத்தில   சரியாயிடுவாங்க!
 பவர் கட் கஷ்டத்துக்கு ஒன்னப்போல
ஒத்தாசைப் பண்ண யாரால முடியும்?
 கையிலப் பட்ட நேரத்துல துள்ளுதே!


புவியீர்ப்பு விசை இல்லேன்னு  நியூட்டன் சொல்லலியா?
 நிலா வேகத்துக்குச சரியா நகரு! பிடிச்சுக்கிட்டே வீட்டுக்குப் போயிடலாம்!!

 வாடா மச்சான்! நம்பளையா கெலிக்கப்பாக்கரே?
கையில இருக்கறது  ஏன்  ஆளுடா!   
 பூலோகத்தில் யாரும்  பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்பேன்!! 
 எந்தன் விரல் நுனியில் உன்னை  சுற்றிவிட ஆசை!!
  இப்படியே முழுசா இரும்மா!
நீ பாட்டுக்குத் தேயறதும் வளர்றதும்!
ஸ்டெடி இல்லாத பொம்பளன்னு பேசிக்கறாங்க!!

 இத்தனைக் கச்சிதமாய் இருப்பாய் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!! 
 உன்னைத் தொட்டுக்கிட்டுத் தான்  ஏம் பொண்ணு  சாப்பிடுவாளாம்!!
 நானும் ஒரு ஹெர்குலஸ் தான்!!
சூரியனுக்குத்தான் நேரம் காட்டத் தெரியுமாம்! எனக்கு வெட்கமாப் போச்சு!! 














சென்னையிலிருந்து ஆத்ம ராமன் அவர்கள் அனுப்பிவைத்திருந்த அருமையான படங்கள்! தலைப்பு மட்டும் என்  உபயம்!! 

Saturday, April 30, 2011

இலக்கியவட்டத் தலைவராக, பொறுப்பாசிரியராக

இலக்கியவட்டத் தலைவராக, பொறுப்பாசிரியராக 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியவட்டத் தலைவராக, என்னை ஆக்கிப் பார்ப்பதில்,  மிகுந்த ஆர்வத்தைக் காட்டியவர்கள் இருவர்: திரு சந்த் குப்புசாமி அவர்கள்;   திரு இரவி பழனியப்பன் அவர்கள். 

திரு சந்த் குப்புசாமி அவர்கள் கடந்த ஆண்டு சங்கத்தின் தலைவராக  இருந்தவர்.  திரு இரவி பழனியப்பன் அவர்கள் கடந்த ஆண்டு சங்கத்தின் துணைத் தலைவராகவும், இவ்வாண்டு, சங்கத்தின் தலைவராகவும் இருப்பவர். 

காட்சிக்கெளியன்  கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப   அடக்கமாய், அன்பாய், எளிமையாய் எங்களுக்குள் வளையவரும் இரவி அவர்களின் தலைமையில் பலப் பல புதுமைகள் நிகழ்ந்தேறி வருகின்றன. 

குறிப்பாக, எமது வசந்தமலர் புத்தொளி பெற்று, புதுவடிவில் வெளிவருவதற்கு இவரது தலைமைப் பண்புகளே முதற்காரணம் என்பேன். என்னைப் பொறுப்பாசிரியராக்கி,  காரியத்தில் குறியாயிருக்கும் ஒரு குழுவைக் களத்தில் இறக்கி இவர் தலைமையிலே  பற்பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

உலகின் புகழ்பெற்ற வெளியீடுகளின் வடிவத்தை சவாலுக்கு அழைக்கும்படியான "லே அவுட்" (ராம் மோகனின் கைவண்ணத்தால்) கொண்டு,  காலம் தப்பாது மொட்டவிழும்   வசந்த மலரின் மணத்தை  எவரும் நுகரும்படியாக வசதி செய்திருக்கும் இந்தப் புதிய ஏற்பாட்டின் சிற்பி, இப்புதியக் குழுவின் நாயகன், இரவி பழனியப்பன் அவர்களே.  





இயக்கம் என்றால் இதுவன்றோ இயக்கம் எனும்படியாக இயங்கும் வசந்தமலாரின்  குழு பற்றி  நாம் பேசுவோம்.

 
 

என்னம்மா எப்படி இருக்கே? டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்

என்னம்மா எப்படி இருக்கே?-  டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்

அத்தனைச் சன்னமானதொரு குரல், தொனிக்கும் விதத்திலும், கண்கள் கொடுக்கும் இதத்திலும் அவர் இளைய விஞ்ஞானிகளை எத்ததனை நேசிக்கிறார் என்பதனைக் காட்டும். 

முகத் தோற்றமாகிலும் சரி, பார்வையாகிலும் சரி, வார்த்தையாகிலும் சரி. இணக்கம் என்றால் அத்தனை  இணக்கம். அவருக்கு இவையெல்லாம்  பிறவிப் பண்புகளாகவே  அமையப் பெற்றன எனறே தான் எண்ணத் தோன்றுகிறது. 

இம்மாமனிதரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ஞானம் பிறக்கும், அந்த ஞானம் அலட்டலில்லாமல், ஆர்பாட்டமில்லாமல்  கனிவாய்த் தீண்டி,  தண்மையைக் கக்கினாலும் எனக்குள் அது ஒரு ஆர்வப் பிரவாகத்தையே  கிளப்பும். 

மோனம் என்பது ஞான வரம்பு என்றார் ஔவையார். சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லைஎன்பார்கள். 

இடையிடையே மோனமும், தேர்ந்தெடுத்துக் கையாளும் மாணிக்கவார்த்தைகளுமாக,  அமைதியாக நடமாடும் ஒருகாப்பியமாக இளைய உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்  டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள். 

சுயமாய் உழைப்பதில் இவர்காட்டும் உறுதி கண்டு என்னை நானே பலமுறை உரைத்துப் பார்த்து, உருப்படியாய் உழைக்கின்றேனா எனத் தரப் பரிசோனைசெய்து கொண்டிருக்கிறேன்
.


என்னை எங்கு கண்டாலும்  "என்னம்மா எப்படி இருக்கே?"  என்றவாறு  அவர் வரவேற்பு தரும் அந்த நேசம் எனது பாக்கியம்.
        

Friday, April 29, 2011

நள்ளிரவு பயங்கரம்: சுழற்றி வீசிய சூறாவளி

நள்ளிரவு பயங்கரம்: சுழற்றி வீசிய சூறாவளி 

நேற்று இரவு தூங்கிக்கொண்டிருக்கிறோம். எச்சரிக்கை சைரன் வாசலில் பெரிய அளவில் ஒலிக்கிறது. பாதுகாப்புப் பகுதிகளுக்கு நகர்ந்துவிடுமாறு எமக்கு அறிவுறுத்தல். வாரிச்சுருட்டி எழுந்து நான் படக்கென ஜன்னலின் "ப்ளைண்டை" திருகித் திறக்க வெளியிலோ மழை.  இடிஎன்றால் அப்படியொரு இடியை நான் வாழ்க்கையில் கேட்டதில்லை - அப்படிப்பட்ட  மின்னலைப் பார்த்ததில்லை. 

இரண்டு குழந்தைகளையும் இழுத்து அணைத்துக்கொண்டு , மவுனமாய்க் கிடந்தேன். பிரார்த்தனையைத்தவிர வேறு எந்த உபாயமும் தெரியவில்லை.  

ஒரு மைல் அகலத்திற்குச் சுருண்டு எழுந்துவரும் சூறாவளியை டிவியில் காட்டிக்கொண்டே  இருந்தார்கள். வினாடிக்கு வினாடி அது எவ்வாறு நகருகிறது என்பது அங்கே காட்டப்பட்டது. எங்கள் வீட்டிற்கு மிக அருகில் அது நெருங்கிவருகிறது. கண்களைக் கெட்டியாக மூடிக்கொண்டு, குழந்தைகளை இன்னமும் நெருங்கிப் பிடித்துகொண்டு கவிழ்ந்து படுத்துவிட்டேன். எண்ணம் முழுவதும் ஊழிக்கூத்தாடிய சிவனின் நாட்டியாஞ்சலி தான். "சிவ சிவ என்றிட   தீவினை மாளும்" என்கிற ஒற்றைவரி மட்டுமே நாவில் தொடர்ந்து வந்தது. 

விஞ்ஞானம் எங்கு நின்று விடுகிறதோ அங்கிருந்து தொடங்குவது மெய்ஞானம் என்றார் கண்ணதாசன்.  என் அறிவுக்கு எட்டிய  வரையில் இயற்கையின் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் விஞ்ஞான வழிமுறைகள் இல்லை. விஞ்ஞானம் எனைக் கைவிட்டது. ஆனால் எனைக் கைவிடாது தொடர்ந்தது மெய்ஞானப் பிரார்த்தனை மட்டுமே. எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை.

விடிந்ததும் சேதி. எங்கள் மாநிலம் ஜார்ஜியாவில் தான் மிகக்குறைவான உயிர்ச்சேதம். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது. நன்றி பெருமானே!!
 


 

  






Tuesday, April 26, 2011

திருக்குறளை ஒலி வடிவத்தில் தயாரித்து வெளியிடுகிறோம்

அம்பராத்தூணி நிறுவனம் தமிழ்ப் பணியில் மிகவும் பெருமை கொள்கின்றது. திருக்குறள் என்பது தமிழரின் அடையாளம். அதுவே நம்மை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, நமக்குப் பெருமை சேர்க்கின்றது. இனிமையான நமது தமிழ் மொழியில் ஒவ்வொரு குறளையும் பொருளோடு கேட்டு மகிழ்வதை நம் நேயர்கள் யாவரும்  விரும்புவார்கள்  என்பதால் திருக்குறளை ஒலிவடிவத்தில் வெளியிட்டு வருகிறோம். குறளின் பொருளைத் தமிழோடு  ஆங்கிலத்திலும் வழங்குகிறோம்.  

நமது அம்பராத்தூணி  இல்லமுகப்பில் (home page) வலப்புறப்  பட்டையில், இதற்கான வசதி பொருத்தப்பட்டுள்ளது.   இதனை இறக்கிக் கொள்ள cinchcast.com/ambarathoni செல்லுக.
 
 

விஞ்ஞானியாகுக: வினவுக --- எனது நூல் Become A Scientist: Ask the Right Sequence of Questions

விஞ்ஞானியாகுக: வினவுக --- எனது நூல்

Become A Scientist: Ask the Right Sequence of Questions  



சென்ற மாதம், ஜெர்மனியிலிருந்து, பெர்லாக் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது, 200பக்கங்கள் கொண்டது இந்நூல்.  

மிகச்சிறந்த கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தவேண்டுமெனில்,  விஞ்ஞானியானால் மட்டும் போதாது; செறிவான வினாத்தொகுதிகளை  எழுப்புதல் வேண்டும் அவற்றைப் பின்பற்றி நிறைவான ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும் என்கிற அடிப்படைத்தேவை இந்த நூலில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நூலுக்காய், நோபல் பரிசு பெற்ற  விஞ்ஞானிகள் பலருடனும் தொடர்புகொண்டு, உரையாடித் தகவல் பல சேர்த்து அவற்றின் மேல், ஆய்வு நிகழ்த்தியிருக்கிறேன்.

விஞ்ஞானி: ரிச்சர்ட்  ஸ்மாலி



இந்நூலை ரிச்சர்ட்  ஸ்மாலி எனும் பெரியவருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறேன்.  ஸ்மாலி நோபல் பரிசு பெற்ற  விஞ்ஞானி. புல்லரின் எனப்படும் புதுவகைக் கார்பனைக் கண்டு பிடித்த மூவரில் ஒருவர். எனது  பல கேள்விகளுக்கு மிகப் பொறுமையாய் வெகு திறமையாய், சலிக்காமல்-சளைக்காமல் பதிலிறுத்தவர். இப்போது அமரராகி விட்டார்.
  
பதிப்பிற்கு முன்பு  இந்நூலின் ஆய்வுப் படிவத்தைப் படித்தவரான, கனக்டிகட் லிவர்போர்ட் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் தாமஸ், தனது 35வருடக் கல்வி  மற்றும், ஆய்வு வாழ்க்கையில் இத்தனைத் தரமான ஆய்வை,  தான் கண்டதில்லை என்று சான்றுரைத்திருக்கின்றார்.       

கலிபோர்னியா ரிவர்சைட் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் டில்லன் அவர்கள்  உருவாக்கிய ஒரு வினாத்தொகுப்பை, விரித்தும், கிளைத்தும், அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கு அவற்றை  எவ்வாறு  பயன்படுத்துவது  என ஆய்ந்து; அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தியபோது, விஞ்ஞானிகள் எத்தகைய வினாக்களைத் தொடுத்தார்கள், என்பதை அறிந்து, அடிப்படை ஆய்வுகளுக்கு என ஒரு தொகுதியும், தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு என   ஒரு தொகுதியுமாக இந்நூலில் வினாத்தொகுதிகளை அமைத்து வழங்கியிருக்கிறேன்.

பேராசிரியர் டில்லன்
 
இவற்றை நோபல் பரிசு வென்ற பல ஆய்வுகளுக்கு அளித்து அக்கண்டுபிடிப்புக்களை மீண்டும் கட்டமைத்துக் காட்டியிருக்கிறேன்.

உலகில் நடக்கும் ஆய்வுகளில்  முப்பது விழுக்காடு ஆய்வுகள் "அரைத்த மாவை அரைத்து, கரைத்த மாவைக் கரைத்து" எனும்படியாக ஒருவர் செய்வதையே மற்றவர் செய்வதான சூழலில் போய்க்கொண்டிருக்கிறது. இது நல்ல போக்கா என்றால் இல்லை. அறிவியல் ஆய்வுகளுக்கு மிகுந்த அளவு   நிதி முதலீடு தேவைப்படுகிறது. அதுபோன்றே ஆய்வுகள் நிகழ்த்த அதிக அளவு ஆட்கள்  தேவைப்படுகிறார்கள். எனவே ஒருவர் செய்வதையே மற்றவர் செய்கின்றபோது, நிதி விரயத்தோடு, மனிதவளமும் விரயமாகிறது. அதுவும் வளரும் நாடுகளில், இத்தகைய  போக்கு மாபெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாகிறது. எதைவேண்டுமானாலும் ஆய்வு செய்வது என்பது பணக்கார நாடுகளின் பொழுதுபோக்கு மனோநிலையாக இருக்கமுடியுமே தவிர, ஏழை நாடுகள் இவ்வாறான போக்கில் ஈடுபலாகாது.   

செய்யப்போகும் ஆய்வில் என்னென்ன செய்யப்போகிறோம் என்று ஒவ்வொரு அசைவிலும் திட்டமிடலும் தெளிந்த சிந்தனையும், முடிபும் இல்லாமல் ஆய்வில் இறங்குவது கூடாது. ஏனெனில் ஆய்வாளர்கள் எவரும் தனது சொந்தப்பணத்தில் ஆய்வுகள் நடத்துவதில்லை, கோடானுகோடி ஏழைகள்  அடிப்படைத்தேவைகளைத் துறந்து வாழும் நிலையில், இந்த ஆய்வின் மூலம் ஏதேனும் பயன்  விளைந்து இந்த நாடு முன்னேறிவிடாதா என்கிற ஆதங்கத்தில் அரசுகள் ஆய்வுகளுக்காய் நிதி ஒதுக்குகின்றன. எனவே ஒவ்வொரு நயா பைசாவையும் உருப்படியாகச் செலவு செய்வது என்பதும், அதுவும் அதனைக் காலத்தே விளையும் உருப்படியான ஆய்வுக்காக மட்டுமே செலவு செய்வது என்பதும் ஆய்வாளர்களின் கடைமையாகின்றது. அதேநேரத்தில் ஆய்வாளர்களுக்கு மிகச்சரியான வழிகாட்டுதல் இருக்குமேயானால் அவர்கள் சிறந்த கண்டுபிடிப்புக்களை உருவாக்கமுடியும். இவ்வகையில், எனது இந்த சிறுமுயற்சி ஆய்வாளர்களுக்கு, உகந்ததொரு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது..

சமீபத்தில் நிகழ்ந்த இந்திய வம்சாவழியினருக்கான பன்னாட்டு  அவையின் (Global Organization for the People of Indian Origin; GOPIO) அட்லாண்டா கிளையின் துவக்கவிழாவிலே, இந்நூல் அறிமுகப் படுத்தப்பட்டது.   ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தலைமை அதிகாரி திரு சஞ்சீவ் அரோரா அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 




எனது நூல் அறிமுகப்படுத்தப்படுகிறது:  
பத்மினி சர்மா, நான், திரு சஞ்சீவ்  அரோரா  

இந்நூலுக்குப் பின்னே எனது உழைப்புக்கு உந்துசக்தியாக அமைந்தவர்கள் சென்னைப் பேராசிரியர் இராஜா கணேசன் மற்றும்  அட்லாண்டா டாக்டர் பத்மினி சர்மா. இவர்களுக்கு எனது வணக்கங்கள்.


பேராசிரியர் இராஜா கணேசன் 

 .