அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில்: திரு சந்த் குப்புசாமி, திரு ஆனந்த் தங்கமணி, டாக்டர் பத்மினி சர்மா, திரு சேக்கிழார், நான்
நம்பிக்கைப் பெண்மணி
எத்தனையோ வேலைக்கு நடுவிலும் என்னைப் பற்றி நினைக்கும் - டாக்டர் பத்மினி சர்மா
நெல்லின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் படியாக தனது பெயரை Paddy Sharma என மாற்றியமைத்துக் கொண்டவர். கேட்காமலேயே உதவி புரிபவர். தமிழ்ச் சமுதாயத்திற்கும், இந்தியச் சமுதாயத்திற்கும் அயராது பாடு பாடுபடுபவர்.
எத்தனையோ வேலைக்கு நடுவிலும் என்னைப் பற்றி நினைக்கும் பெண்மணி. மனம் விட்டுப் பேசுவதற்காய் இவர் தேடும் ஒரு சில ஜீவன்களில் நானும் ஒருத்தி என்பது இவர் எனக்கு அளித்திருக்கின்ற நம்பிக்கை ஊற்று.
சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சி மாநகரைப் பூர்வீகமாய்க் கொண்டவர். செல்லுமிடமெல்லாம் தமிழில் பேசுமாறு தமிழர்களை வேண்டிக் கேட்டுக்கொள்ளும் இவரது தமிழ்ப்பற்று போற்றுதற்குரியது,
பாடிகள் நிறைந்த வடவாற்காடு ஆங்கு
பாடிப்புகழ்போந்த கச்சி கோயிலம்பதி
பாடிப்பரவிய வேதமாகமங்கள் அவை விளங்குறப்
பாடிய அறவோர் குலமுறை இசைப்
பாடிய ஆடியில் ஆயில்யத்தாரகை முறைப்
பாடிய வகையினில் பத்மினி பிறந்தனள்
பாடிய பாட்டும் சொல்லிய எழுத்தும் வாய்ப்
பாடிய கணக்கும் வாய்த்த பாங்கினில் வியப்
பாடிய வாய்களும் விரிந்த கண்களும் எதிர்ப்
பாடிய பேர்களும் வளரவே உயர்ந்தனள்; அவர்
பாடிய வண்ணமும் சாடிய வன்மமும் இவள் மனம்
பாடிய வண்ணத்தில் எருவாய்ச் சிறந்திட வாழ்வைப்
பாடிய ஆன்றோர் மணிவாசகத்தில் உளம் உறுதி
பாடியே நின்றது; யாங்கும் கல்விகேள்விகள் தேடியே ஓடினள்
பாட்டிடை மேவிய தொண்டைமண்டலம் சிறப்புடைப்
பாடலம்பதிகளின் அருமை அறிந்தனள்; சிறப்புறு
"பாடி"யைத் தனது பெயருடன் இசைக்கவே இவள் இசைந்தனள்
பாடிஎனும் சர்ம நாமம் தானேசூடினள்; தன்மண்ணிசைப்
பாடியே கிளம்பினள், பாரெங்கும் பறந்தனள், உயர்ந்தனள்
பாடிசர்மா என்றாக்கிய காதல்; கடிமண இணக்கம்
பாடிய பாங்கில் குழலும் யாழும் பிறந்தனப் பேரெழ, வசைப்
பாடிய வாய்களில் புகுந்து புறப்பட்டு இவள் சாதனை
பாடிய சரித்திர முத்திரை; வழுக்குப் பாறையின் அழுக்கைப்
பாடியே வீணாய்ப்போக இவள் விழையா நெஞ்சினள் திறம்
பாடியே சாடுவேன் பிறருயர்வுற வேண்டின செய்குவேனெனப்
பாடிசாண்டிலர்சர்மா நிறுவனம் எழுப்பினள்; ஆன்றோர்
பாடிய கூற்றை வழிமொழி செய்து திரைகடலோடி திரவியம் தேடினள்
பாட்டும் பொருளும் பொருளால் பயனும் கூடிட வேண்டினள்; மன்பதைப்
பாடிப்புகழும் சட்டம், கணினி, கல்வித்துறைகளில் வேலைவாய்ப்
பாடித்திரட்டித் தந்தனள் பல்லோர் பயனுற; அவர் பணத்தையும்
பாடிமனத்திடத்தையும் பாடிடும் பாக்கியம்வழங்கினள் தன்
பாடுகள் மூலம்; எளிமைக்கு எளிமை; வலிமைக்கு வலிமை; கட்டுப்
பாடுகள் நிறைத்து உழைப்பை மிகுத்தினள்; பிறர் படும்
பாடு நினைந்து தன் வலியைமறந்து, தூக்கம், ஓய்வு, உணவு துறந்து
பாடுபடுவதொன்றே என்பணியென ஓடியோடி உழைத்தனள் தேவி
பாடும் பல்லுள்ளங்கள் இவள் பல்லாண்டு வாழ்கவென அவருடன்
பாடும் கொள்ளுவர் இவள் நூராயிரத்தில் ஒருத்தியென; உலகோர்
பாடும் அறுபது ஆண்டுகள் இவளின்று காணுதல் அற்புதம்; தெய்வதம்
பாடும் உன்னதப் பெண்ணிவள் வாழ்க்கையோர் வெற்றிக்களஞ்சியம்
பாடும் கடல்கள் வாழும் வரைக்கும் மாதிவள் வாழ்வு நிலை நிற்கும்! நூலோர்
பாடிய தத்துவம் தழைக்கும்; வீரப்பெண்ணிவள் வாழ்வின் புகழ்விள்ங்கும்! திசைப்
பாடிடும் கதிரவன் ஒளிமழை போலே அம்மை செயல்திறன் என்றும் சிறந்திடட்டும்!
பாட்டிடைப் புரவலர் பட்டியலில் பாடியின் பெயரும் சிறப்பும் நிலை பெறட்டும்! கவி
பாடிய பாரதி காட்டிய பெண்ணிவளென்றே தரணியோர் போற்றிக்களிக்கட்டும்! நலம்
பாடியே நெஞ்சம் அமைதிகொண்டாடிட ஆண்டவன் நிறையருள் புரியட்டும்!
பாடி வாழிய! நின் சாதனை வாழிய! நின் குடியும் குலமும் தழைத்து வாழிய! எங்கள்
பாடி வாழிய! நின் சிந்தை வாழிய! நின் உறுதியும் தீரமும் நிலைத்து வாழிய! தமிழ்மகள்
பாடி வாழிய! நின் புது நோக்கு வாழிய! நின் திறமைகள் யாவும் செழித்து வாழிய!
0 comments:
Post a Comment