Subscribe:

Pages

Monday, April 18, 2011

இசைவடிவில் பெரியபுராணம்

இசைவடிவில் பெரியபுராணம் 

சசிரேகாவிடமிருந்து எனக்கு வந்த அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்நூல்.காம் வழங்கும் 
பெரியபுராணம்
குரலிசைக் குறுந்தட்டுப் பேழை

வரலாற்றில் முதல் முறையாக 
4274 பாடல்கள், 72 புராணங்கள் 
குரலிசை: ஓதுவார் பா. சற்குருநாதன்

விவரங்கள் காண்க:

திருத்தணியில் நடைபெற்ற 6ஆவது உலகச் சேக்கிழார் மாநாட்டில் இக்குறுந்தட்டுப் பேழை வெளியானது.
திருத்தணியில் வெளியீட்டுவிழாக் காட்சிகள் காண்க:

4274 பாடல்களின் குரலிசைப் பதிவை 
20 எம்பி3 குறுந்தட்டுகள் கொண்ட ஒரு தொகுதியாக
ஒரே பேழைக்குள் அமைத்துள்ளோம். 

அடக்க விலை - ரூ. 700

தேவைகளுக்கு அஞ்சல் முகவரியுடன் எழுதுக. அஞ்சல் செலவுடனான கூறுவிலை தருவோம்.

நன்றி
சசிரேகா
 


ஒரு மெழுகுவர்த்தியின் வேதிச் சரிதை - மைக்கேல் பாரடே

ஒரு மெழுகுவர்த்தியின் வேதிச் சரிதை - மைக்கேல் பாரடே 
இப்புத்தகம் பொதுச் சொத்தாகும், தமிழில் மொழிபெயர்க்கத் தடையில்லை. எவரேனும் இப்பணியில் முனைவார்களா?

ஞானிகள் - விஞ்ஞானிகள் - இவர்கள் எதனையும் உயர்நிலையில் நின்று பார்ப்பவர்கள்; பிறருக்குப் புரியாத உயர்நிலை மொழியில் பேசுபவர்கள் - விவாதிப்பவர்கள் என்று நாம் நினைப்பதுண்டு . நானும் கூட அவ்வாறானதொரு கருத்துடன் தான் இருந்துவந்தேன் இந்தப் புத்தகத்தைக் கேட்கும் வரை.

"எளிமை என்றால்  இதுவன்றோ எளிமை" எனும்படியாக  எழுதப்பட்டுள்ள
  இந்த  நூலின் ஆசிரியர், மைக்கேல் பாரடே .

மின்சாரமும் காந்தமும் இவரது சிறப்பு ஆய்வுத்துறைகள். அவற்றைப் பற்றிய விதிகள், விளக்கங்கள், கருவி வடிவமைப்பு என வாழ்ந்துபோனவர், எவருக்கும் தெரிந்த மெழுகுவர்த்தியைப் பற்றி எழுதியிருப்பார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அசந்து  போய்விட்டேன்.  அன்று  அவர் எழுதிய அந்தப் புத்தகம், இன்று ஒலிவடிவில் காணப்பெறுகிறது. 

சிறுவர்  முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டிப்போடும்,  எளிய சொற்கள், படிப்படியாய் வளரும் கதை என சுவாரஸ்யமாய், படிப்பவரை, "கைபிடித்து அழைத்துப்போகும்" அக்கறையுள்ள எழுத்தாளனை  நாம் அடையாளம் காண முடிகிறது. "கதைகதையாம் காரணமாம்" என்கிற இலகுவான தொனியில் பாரடே மெழுகுவர்த்தியின் கதையைக் கூறுவது, அறிவியல் கருத்துக்களை ஒருவரால் இத்தனை எளிதாகக் கூறமுடியுமா என நம்மைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ள வைக்கிறது. அவரது எழுத்துவன்மையை, ஒலிவடிவில் கேட்பது நாம் பெற்ற பேறு என்பேன்.
சொல்லபோனால், அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்தப் புத்தகம், எனவே  புத்தகத்தில் பாரடேவின் உயிரோட்டமான குரல் ஒலிப்பதை நன்றாய்க் கேட்கமுடிகிறது.     


தந்துகிக் கவர்ச்சி மூலம், மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிவதை அவர் விளக்கும்போது,  புரிநூல் திரியே மெழுகுவர்த்தியின் மதிப்பிற்குக்  காரணம் என்று பாரடே சொல்லும் பாங்கு கேட்குந்தோறும், கேட்குந்தோறும் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது. 'திரியழல் காணின் தொழுவர்; விறகின் எரியழல்  காணின் இகழ்வர்" என்ற' மாணிக்கவரிகள்  நினைவுக்கு வந்தன. கல்வி என்பது கற்றோர் மனதையாண்டு,  அவரை  நெறிப்பட வாழும் தன்மையராய் வழிநடாத்துதல் என்பது  வெற்று  ஏட்டுச்சுரைக்காய்க் கல்வியால்  வந்துவிடாது. முறுக்கிபிழிந்து, கற்ற  கல்வியின் சாரத்தைப்  பட்டறிவால் இளக்கிப் , பதனப்படுத்துகின்றபோது மட்டுமே கல்வியின் வெளிச்சம் புலப்படும் என்று என் செவிக்குள் எவரோ திருத்தமாய்ச் சொன்னதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

இதுதான் பிரவண மந்திரமா?

செல்வத்துட்செல்வம் செவிச் செல்வம் என்று சும்மாவா சொன்னார்கள்?

மெழுகுவர்த்தியின்  சரிதையைக்கேட்டு நீங்கள் என்ன உணரப்போகிகறீர்கள்?
  
கேளுங்கள்  
 
http://www.archive.org/details/chemical_history_candle_ava_LibriVox

இது இலவசச் சேவை 
       இப்புத்தகம் பொதுச் சொத்தாகும், தமிழில் மொழிபெயர்க்கத் தடையில்லை. எவரேனும் இப்பணியில் முனைவார்களா?


  
 



Sunday, April 10, 2011

இவர் தேடுவது தீயின் நாக்கையா? அல்லது வறுமையின் நெற்றையா?

 இவர் தேடுவது தீயின் நாக்கையா? அல்லது வறுமையின் நெற்றையா?
  
மூண்ட தீயில் முழுவதும் போக, கரிக்குட்டையில் வாழ்க்கைத்துவக்கம் 

பிலிப்பைன் நாட்டில் மலபான் நகரத்தின் மக்கள் நெருக்கடியும், சுகாதரக்கேடுகளும் நிறைந்த, குப்பைமேட்டுக் குப்பம். அங்கே உள்ள அனைத்து வீடுகளுமே வெறும் அட்டைகளாலும்  டின்-தகரத்தாலும் மட்டுமே கட்டப்பட்டவை. 
கடந்த வியாழன் அன்று
 ஒரு வீட்டில் சமையல் வாயு சிலிண்டர் வெடித்ததால் அனைத்துவீடுகளுக்கும்  தீபரவ, தீயணைப்புப்படையினர் வந்து தீயை அணைத்ததால், குடியிருப்பு இருந்த இடத்தில்  அகழ்போல 
ஒரு குப்பைக் குட்டை உருவாகியுள்ளது.

தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் மக்கள் நூற்றுக்கணக்கில்; இவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிடுப்பவர்கள் 3000.

அக்குட்டையில் நீந்தித்துழவி இவ்விளைஞர் தேடுவதென்ன?

(அவர் தலைப்பாகையில் செருகப்பட்டுள்ள சிகரெட்டுகள், இந்தக் குப்பைமேட்டிலிருந்து எடுக்கப்பட்டவையாம்)
  




 

 
 
    

Saturday, April 9, 2011

சுகி சிவமும் நானும்: அவ்வைமகள்

சுகி சிவமும் நானும்: அவ்வைமகள்  

இது நடந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அன்று நான் சொன்ன வார்த்தைகள் - அவை  தப்பாமல் அப்படியே நிஜமாகி வந்திருக்கின்றன.

எஸ் ஐ ஈ டி கல்லூரியின் தமிழ் மன்றச்செயலாரக  நான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பதவி வகித்திருந்த இனிமையான கல்லூரி நாட்கள். எனது மேஜர் வேதியியல் ஆனால் எனக்கிருந்த தமிழார்வம், முதல்வரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது.
மிசஸ்  க்வ்ஹரின்  ஆர்கானிக் கெமிஸ்ட்ரி வகுப்பு போய்க்கொண்டிருக்கிறது; முதல்வர் அழைக்கிறார் என்று ஆபீஸ் அட்டண்டர் வந்து கூப்பிடுகிறார். வகுப்பு என்னை ஒருமாதிரியாகப் பார்க்க, எனக்குள் படபடப்பு மிக அட்டண்டரின் பின்னால்  சென்று முதல்வர் அறையில் நுழைகிறேன்.

"ஒன்ன  காலேஜ் தமிழ் செக்ரட்ரியா போட்டிருக்கேன். தமிழ் மன்றம் சிறப்பா நடக்கணும் அதுக்கு நீ பொறுப்பு. புதுசா ஏதாவது பண்ணனும். கவனமாப் பண்ணனும். ஒரு துளி கூட இசகு பிசகா எதுவும் நடந்துவிடக்கூடாது. எதுவானாலும் எங்கிட்ட வந்து பேசி, அதுக்குப் பிறகு செய்."   

நான் ஏற்பாடு செய்த முதற்சொற்பொழிவு  சுகி சிவத்தினுடயது. இளமையும் கவர்ச்சியுமாக  அழகு மிகுந்த பெண்கள் நிறைந்த எங்கள் கல்லூரிக்கு இளமையும் அழகுமான, சுகி சிவம் வந்து  பேசியது ஒருவிதக் கிளுகிளுப்புதான். அதுவும் அந்நாளில், கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது எங்கள் எஸ் ஐ ஈ டி கல்லூரி. அன்றைய நாளில்  சென்னையில் ஒரு  
பிரம்மாண்டமான உள் அரங்கு என்று பெயர் போன எங்கள் கல்லூரி உள்-அரங்கில், வழிந்த பெண்கள் கூட்டத்திற்கிடையே சுகி சிவம்.  

எனது வரவேற்புரையில், 

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள் - தந்தை பத்தடி பாய்ந்தால் பிள்ளை நூறடி பாயும் என்று இவரைப்  பார்த்துச் சொல்லத்தோன்றுகிறது."

"தந்தையையும் மிஞ்சும் சொல்வளத்தொடு  "தன்னை வெல்வார் எவரும் இல்லை எனும்படியான சொல்லின் செல்வராய்"  இத்தரணியில் இவர் வலம் வருவார் என்று என்னால் உறுதியாக் கூறமுடியும் ----  சொல் எனும் அற்புதக்கலையில்,  திறம்பட சிறந்து விளங்கும்,
கலை மாமணியான இவரை வரவேற்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்."    
 
நான் அன்று ஹேஷ்யம் கூறியவாரே சுகி சிவம் சொல்லின்செல்வரராகவும்,  
கலை மாமணியாகவும் மாறினார். வருடங்கள்  ஓடினாலும், தனது இளமைத்தோற்றத்தையும்,  குரல் வளத்தையும்,   இவர் பாதுகாத்துவருவது பாராட்டுதற்குரிய விஷயங்கள். பேஷ்! பேஷ்!!

எனக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமைகள் மூன்று: நாங்கள் இருவருமே தமிழர்கள்; பேச்சாளர்கள்-எழுத்தாளர்கள்; இருவருக்குமே கிருபானந்தவாரியாரும் குன்றக்குடி அடிகளாரும் உந்து சக்திகளாய்த்த் திகழ்ந்தவர்கள்/திகழ்பவர்கள் .

வேறுபாடு?
*நான் வேதி;  அவர் சட்டாம்பிள்ளை 
ஆய்வக மேடையிலே கலக்குவது என் தொழில்;
மக்கள் மேடையிலே கலக்குவது அவர் தொழில்!! 
அவரைப்போல பேச நம்மாலாகாதப்பா!
உண்மையை ஒழுங்கா ஒப்புத்துக்கொள்ளணும்!  இது சட்டம் பேசும் இடமல்லவா?


அவ்வைமகள் 
*நான் வேதியியல் பேராசிரியர்; அவர் சட்ட வல்லுனர்





 


 

Friday, April 8, 2011

சத்தமின்றி -சித்தமொன்றி : அன்னா ஹசாரே

சத்தமின்றி -சித்தமொன்றி: அன்னா  ஹசாரே

எவரும் இதனை எதிர்ப் பார்த்திருக்க மாட்டார்கள்.  கூச்சலும், குழப்பமும், கூத்தாட்டமும் நிறைந்த நம்மூர் அரசியலில், இத்தகையதொரு புரட்சி முளைக்கும் என்று எவரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

கத்தியின்றி, இரத்தமின்றி  சத்தியப்போர் என வருணிக்கப்பட்ட காந்தியடிகளின் புரட்சிக்கு அடுத்து, மற்றுமொரு சாதனைப் புரட்சி இங்கே கிளம்பியிருக்கிறது. இது குறுகிய காலத்தில் வளர்ச்சி கொண்டு புகழடையும் நோக்கத்திற்காக போடப்பட்டிருக்கிற  அரசியல் நாடகம் அல்லவென்பது கண்கூடு 
.

அஹிம்சா வழியில் இயங்கி வந்திருக்கிற அதிகப் பிரபலமில்லாத ஒரு முதியவரின் பின்னே   மாபெரும் ஜனத்தொகுதி திரண்டு நிற்கிறது என்றால்   மக்கள்  நமது அரசியல் மீதும் அரசியல் வாதிகளின் மீதும் எத்தனை வெறுப்படைந்து - நம்பிக்கையிழந்து போயிருக்கிறார்கள்  என்பது  வெளிப்படை. 

இன்று, அன்னா  ஹசாரே எனும் இந்த - சாதரண  மனிதரைக்கண்டு -  
படைபுடை சூழ, அரசியல் அரிதாரம் பூசி, ஊழல் சாம்ராஜ்ஜியம் நடத்திவரும் நமது தலைவர்களுக்கு,   நாடி நரம்பெல்லாம் நடுக்கம் கண்டு  போயிருக்கிறது.
   
அதர்மம் மலியும்போது அவதாரப் புருஷர்கள் தோன்றுவார்கள் என்று சொல்வதுண்டு. சத்தமின்றி -சித்தமொன்றி  மக்கள் யாவரும் இந்த மனிதரின் பின்னே எழும்பி நிற்பது, பாரதம் காணப்போகும் மறுமலர்ச்சியா?

சீர்திருத்த வித்துக்கள் முளைத்து எழும்போது அவற்றிற்கு, நீர் கட்டி, எரு அட்டி,  களைவெட்டி, அரண் கட்டிப் பாதுகாக்கவேண்டியது சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொருவரது கடமையுமாகும். இதிலே உமது பங்கு பணி? 

ஒன்று மட்டும் உறுதி!

மாற்றம் தேவை!
ஏமாற்றம் கண்டது போதும்!!






அன்னா  ஹசாரே


அவ்வைமகள்

  
 
 

மரணத்திற்குப் பின்னும் ஜீவிதம் சுஜாதாவின் பக்குவம்.

சுஜாதா: வாராதது போல வந்து .... 

ஜிகினா உலகத்தில் ஆரவாரம் இல்லாமல் வாழ்வது என்பது மிகப்பெரிய கலை. 
அதுவும் நடிப்பவர் பெண்ணா  ஆணா என்பது இதிலே ரொம்பவும் முக்கியம்.
"Show the person, I will tell you the rule" என்பார்கள். படைபலம், பின்னணி பலம், குடும்ப பலம் என்று பலப்பரிட் சை செய்தவாறு  இங்கே காரியங்கள் நடக்கும். இவ்வாறான பலப்பரிட்சை என்பது ஜிகினா உலகத்தில் நித்தியப் பரிட்சையாகும்.  நாளொரு போதும் புடம் போட்டுப் பார்க்கின்ற அக்கினிப் பரிட்சையிது.  இதனைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில், திரும்பிப் பார்க்காமல் ஓடியவர்களும், திரும்பி வரமுடியாத இடத்திற்குப் போனவர்களும் எத்தனையோ!

இந்தப் பெண்மணி எப்படி வந்தார் என்று தெரியாதபடி வந்தவர். அரசல் புரசல் வதந்திகளும், புளுகு மூட்டைகளும் தம்மைத் தீண்டி விடாதபடி தற்காத்து, ஊசலாட்டமான பிழைப்பில், உறுதியாய் நின்று குணச்சித்திர வேடங்களில், தனக்கென ஒரு பாணி, தனக்கென ஒரு பாதையென, பாந்தமாய் நடித்து, தனக்கென ஒரு வரலாற்றை வடித்துப் போயிருக்கிறார்.                 

மரணத்திற்குப் பின்னும் ஜீவிதம் சுஜாதாவின் பக்குவம்.  



Thursday, April 7, 2011

அரிஸ்டாட்டில்: ஏன்? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

ஏன்? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை 

வினாக்கள் - இவை எப்போது தோன்றின ஏன் தோன்றின எவ்வாறு தோன்றின என்று யாராலும் சொல்ல முடியாது. வினாக்கள்  எழுப்புவது மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமானதா பிற விலங்குகளுக்கும் இது  சாத்தியமா என நம் சிந்தனையைக் கொஞ்சம் கிளரினோமேயானால், மூளை அமைப்பு உள்ள விலங்குகள் யாவற்றிறிகும் இந்தத்திறன்   அமையப்பெற்றிருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இது படிப்படியாக வளர்ச்சி பெற்று மனிதர்களாகிய நம்மிடத்திலே இது ஒரு உச்சஸ்தாயியில் இருக்கிறது என்கிற உருவாக்கமும் கிடைக்கிறது. . 

நமக்கு மொழி எனபது மிகப்பெரிய வரப்பிரசாதம், எனவே, விலங்குகளைப் போலல்லாமல்-  நாம் எண்ணுவதை நம்மால் அப்படியே சொல்லிவிடமுடிகிறது - எழுதமுடிகின்றது - பதிவுசெய்ய முடிகின்றது. 

வினாக்கள் பொதுவாக ஒற்றையாகப் பிறப்பதில்லை.  ஒருவினாவின் கரு முளைவிட்டதென்றால், அங்கே தொடர் சிருஷ்டியாக வேறு சிலவினாக்களும் பிறந்துவிடும்.   

இவ்வாறு ஒருவருக்கு வினாக்கள் தொகுதியாக வெளிப்படுகின்றதென்றால், அவர் சிந்தனை வளத்திலே, உயர்நிலைவகிப்பவர் என்று கொள்ளலாம்.


அரிஸ்டாட்டில் (கிமு 384 –322 )

இத்தகு உயர் சிந்தனையாளர் ஒருவரை நம் புவியரசி ஈன்றெடுத்தாள். அவர்தான் அரிஸ்டாட்டில்.  

நாம் எத்தனைக்  கேள்விகளைக் கேட்கமுடியும் என்றால், நமக்கு எத்தனைப்  பொருட்களைத் தெரியுமோ அத்தனைக் கேள்விகளை நாம் எழுப்பமுடியும் என்பது  அரிஸ்டாட்டிலின்  கூற்று.  இங்கு பொருட்கள் என்பதில் உயர்திணை மற்றும்  அக்றிணைப் பொருட்கள் யாவுமே  அடக்கமாகும்.

ஆனால் இவ்வினாக்கள் யாவற்றையும் நான்கே நான்கு வினாக்களுக்குள் அடக்கிவிடமுடியும்  என்பார்  அரிஸ்டாட்டில்.

 இதனை அவர் எத்தனை அழகாகக் கூறுகிறார் பாருங்கள்

ஒரு பொருள் உள்ளது என்று தெரிந்துவிட்டால், அதனது தன்மையை  நாம் வினவுகிறோம்,  அப்பொருள் இத்தன்மையது   என்று அறிந்துகொண்ட  பின் அதனது  விவரங்களை வினவுகிறோம். அடுத்து அது ஏன் அவ்வாறு உள்ளது என வினவுகிறோம்.
தனது போஸ்டீரியர் அனலிடிகா என்ற நூலில்  அரிஸ்டாட்டில் இவ்வாறு கூறியுள்ளார். இதோ பாருங்கள். 
Aristotle’s  schema of classification of questions.
No

Kind of Question

Categorial Label
1
Existence/Affirmation
When we ascertained the thing's existence
2
Essence/Definition
we inquire into its nature
3
Attribute/Description
when we know the fact
4
Cause/Explanation
we ask the reason

 

   

 
 



உங்களுக்குத் தெரியுமா? அரிசிச் சாராயம்

உங்களுக்குத் தெரியுமா? அரிசிச் சாராயம் 

அரிசி என்றால் நமக்கு நினைவுக்கு முதலில் வருவது சோறு. அடுத்து, இட்லி தோசை, ஆப்பம், அப்பம், கொழுக்கட்டை, அதிரசம், சீடை, முறுக்கு எனத் தின் பண்டங்களாக நம் கற்பனை நீளும்.  

அரிசியிலிருந்து போதை தரும் பானங்களும் தயாரிக்கிறார்கள் என்பதை நாம் அவ்வளவாக எண்ண ஓட்டத்தில் கூடக் கலந்திருக்க மாட்டோம்.

மது பானங்கள் திராட்சை ரசத்திலிருந்து மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்ற நினைப்பு வேறு நம்மில் பலரின் மனதிலே பதிந்திருக்கிறது.

ஆனால், அரிசியிலிருந்து முக்கிய சாராய வகையறாக்கள் தயாரிக்கிறார்கள்: இதோ பாருங்கள்!   

பசைத்தன்மை நிறைந்த அரிசியை ஊறவைத்து நொதிக்க வைப்பதன்  வாயிலாகத் தயாரிக்கப்படுவது "சேக்"  எனப்படும் மதுபானம். இதனை அரிசிச் சாராயம் என்கிறார்கள். சைனா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் விரும்பி  உட்கொள்ளப்படும்  மதுபானம் "சேக்" தான்.

ஊறுகாய் மற்றும் பிற உணவுப்பதார்த்தங்களைப் பாதுகாப்பதற்காக நாம் பயன்படுத்தும் வினிகர் எனப்படும் "காடி" (அசிடிக் அமிலம்)  அரிசி   நொய்யை ஊறவைத்து நொதிக்க வைப்பதன்  வாயிலாகத தயாரிக்கப்படுவது.

பிரபல மதுபானமான பீர்  அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கு  ஊறவைத்த அரிசி  நொய், மற்றும் ஊறவைத்து முளைகட்டிய  பார்லி ஆகியன  மூலப் பொருட்களாகும்.

Wednesday, April 6, 2011

அரசு வென்ற பரிசு: குஜராத் சாதனை


அரசு வென்ற பரிசு: குஜராத் சாதனை   
உலகின் மிகச்சிறந்த அரசுகளில் வரிசையின் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது நமது நாட்டின் குஜராத் மாநில அரசு. இப்புகழ்மிக்க உயரிடத்தை குஜராத் மாநில அரசு வென்றிருப்பது நமக்கெல்லாம் எத்தனைப் பெருமை? பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியின் வாக்கு இன்று வென்றது எனலாம். 
ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுக் குழு, அறிவித்திருக்கிற இந்த  இனிய சேதி நமக்கெல்லாம் கிடைத்த வசந்தகாலப் பரிசு! (விருது அறிவிப்பின் வண்ணப்படம் மேலே)   ஆனால் இப்புகழ் நிலை குஜராத் அரசுக்கு ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை. அரசு என்பது மக்களுக்காக, மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளால் நடத்தப்படுவது. இந்நிலையில், “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” எனும் நிலைமை போய், “மக்கள் எவ்வழி தலைவர் அவ்வழி” எனும்படியான நிலைமையிலேயே நாம் வாழ்கிறோம். எனவே மாநில மக்களின் சிந்தனை, வாழ்நிலை, கூட்டுறவுக் கொள்கை  ஆகிய அடிப்படைப் பண்புகளே அவ்வவ்வரசுகளின் சித்தாந்தங்களாகின்றன. இவகையில் தனது மக்களின் நோக்கமறிந்து, ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை நிறைவேற்றும் அரசாக குஜராத் அரசு திகழ்ந்ததால் கிடைத்த வெற்றிதான் இது.   

குஜராத்காரர்கள் என்றால், அவர்களது செல்வச்செழிப்பும், வியாபாரச் செயல்பாடுகளும் மட்டுமே நம்மில் பலருக்கும் தெரியும். அதனால், வியாபார நோக்கு மற்றும் வாணிபத் திறமை மட்டுமே கொண்டு இவர்கள் வெளிச்சத்திற்கு வந்து விட்டதாகப் பலரும் நினைக்கக்கூடும். குஜராத் மக்கள் நம்மூர் நாட்டுக்கோட்டை செட்டியார்களைப் போல தனவணிகத்திற்குப் பேர் போனவர்கள்தாம் . ஆனால், வியாபார வாழ்க்கையினால் மட்டுமே இவர்கள் முன்னுக்கு வந்துவிட்டதாக நாம் எண்ணுவோமேயானால், அது தவறு. இவர்களது முன்னேற்றத்தின் உண்மையான ரகசியம் இவர்களது,     உழைப்பு, சுறுசுறுப்பு, மற்றும் கூடி வாழ்ந்து கூடி உயரும் கூட்டுப் பண்பாடே. இந்த அடிப்படையான வளப்பமான கூட்டுச்சிந்தனை குஜராத் மக்கள் ஒவ்வொருவரது மனத்திலும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதால், இதனிலிருந்து பிறநற்பண்புகள் இயற்கையாகவே பிறந்துவிட்டிருக்கின்றன எனலாம்.

குஜராத் மக்கள் கல்லாப் பணத்தின் மீது எத்தனைக் கருத்தாக இருக்கிறார்களோ அத்தனைக் கருத்தாக நல்ல காரியங்கள் பல செய்து வருகிறார்கள். சமுதாயத்திலிருந்து பெற்றதை சமுதாயத்திகே மீண்டும் அளிக்க வேண்டும் எனும் இவர்களுக்கு இருக்கின்ற சமுதாய சிந்தனை வேறு எவருக்கும் இல்லை எனலாம். இவர்களைப்ப்போல தருமம செய்ய வேறு எவரும் இல்லை எனும் படியாக இவர்கள் வாரிக்கொடுக்கும் பாரிகளாக விளங்குகின்றார்கள். கல்வி, கலைகளை இவர்கள் பேணுவதுபோல் எவரும் செய்யமுடியாது.  

உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கு இவர்கள் தருகின்ற கவனம் நம்மை வியக்க வைக்கிறது. குறிப்பறிதல் என்பார் திருவள்ளுவர். இக்கலையில் குஜராத் மக்கள்  வல்லவர்கள். இயற்கைப் பேரழிவா? பஞ்சமா? பட்டினியா? எவருடையதாகிலும் அத்துயரம் இவருடையது என்பதாக இவர்கள் தாயினும் சாலப்பரிந்து ஒடி உதவும் சான்றாண்மை பற்றிப் பேச  சொற்கள் போதா!

தருமம் வளர்த்தல், கல்விப்பணி, முதியோர், பெண்கள், குழந்தைகள், ஆவினம் பேணுதல், கலாச்சார ஒருமைப்பாடு,  என ஆன்றோர் காட்டிப் போயிருக்கிற நல்ல வழியிலே இவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் திறம்பட இயங்கி, பிற மொழி, பிற கலாச்சாரம், பிற இனம் என்கிற பாகுபாடு காட்டாமல், ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் படியாக செல்லுமிடமெல்லாம் செல்லுபடியாவதோடு செல்வத்தோடு செல்வாக்கையும் ஈட்டி வருகிறார்கள்.

நான் வாழும் அட்லாண்டா மாநகரில் இவர்கள் நிகழ்த்தியிருக்கிற சாதனைகள் ஒன்றா இரண்டா? எடுத்துக்காட்டிற்காக ஓரிரு சேதிகள்:
*முழுக்க முழுக்க சலவைக் கற்களால் மிக நுண்ணிய 
வேலைப்பாடுகளுடன் கட்டப்பபட்ட சுவாமி நாராயணன் கோயில்.  
*சக்தி மந்திர் என்று அழைக்கப்படும் அம்மன் கோயில். வழிபாட்டுடன் நின்று விடாது எத்தனைப் பேர் வந்தாலும், வரும் அனைவருக்கும், இலவசமாக உயர்தர உணவு (இனிப்பு, காய்கறிகள், அப்பளம், பூரி, கூட்டு, சாம்பார், சகிதம், உயர்தர அரிசியில் சாதம்) வழங்கப்படுகிறது என்பதோடல்லாது, இக்கோயில் வளாகத்தில் ஒரு மருத்துவ சேவை மையமும் இயங்கி வருகிறது.   
*ஹைட்டி துயர், ஜப்பான் சோகம், என உலகத் துயர் துடைப்பிற்காக இவர்கள், துணியும், மருந்தும், உணவுப்பொருளுமாக, சேகரம் செய்து, பொட்டலம் கட்டி, அனுப்பிவைக்கும் பாங்கு, கூடி வாழ்வதில் இத்தனை நேர்த்தியா என நம்மை நெகிழவைக்கிறது. நவீன மாற்றங்கள் ஏற்பட்ட நிலையிலும், இந்தியவழி அலங்காரம், பாரம்பரிய உடுப்புகள், அந்நிய மண்ணிலும் விட்டுக்கொடுக்காது கடைபிடித்துவரும் மரபுவழி கலாச்சாரம் என இவர்களது ஒவ்வொரு அசைவிலும் இந்தியா பரிமளிப்பதை நாம் காண முடியும்.    
*அட்லாண்டா மாநகரின் மிகப்பெரிய அரங்கான க்வின்னட் பன்னாட்டு அரங்கில் இவர்கள் வருடந்தோறும் ஏற்பாடு செய்து நடத்துகிற இந்திய விடுதலை விழா ஒரு மாபெரும் கோலாகல விழாவாகும். காலைமுதல் மாலை வரை நடக்கிற இந்தவிழாவில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலப் பெருமைகளும் பறைசாற்றப்படும். இசை, நாட்டியம், நாடகம், நாட்டுப்புறக்கலைகள் என நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக நடந்தேறும் இந்த வைபவம் காண எங்கிருந்தும் இங்கு வந்துவிடுவார் இந்தியர்கள். அன்று இந்தியாவே   அட்லாண்டா மாநகரில் கூடிநிற்பதுபோன்ற உணர்வு எவருக்கும் ஏற்படும்.

  
சுவாமி நாராயணன் கோயில்

பெட்ரோல் பங்குகளே இவர்களது முக்கியத் தொழில் எனினும், மிகப்பெரும்பாலான குஜராத் மக்கள் வெவ்வேறு விதமான வாணிபங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு வகைகளில், இவர்கள் அமெரிக்க விவகாரங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பங்கேற்று வருகிறார்கள். இவர்களுக்கென்று அமெரிக்காவில் தனியானதொரு அங்கீகரிப்பு என்றைக்கும் உண்டு என்பது உண்மை.

இத்தகு மக்களின் ஆர்வத்தையும், வளர்ச்சியையும் கட்டிக்காப்பது என்பது சுலபமான விஷயம் அன்று. அந்த சீரிய செயலைச் செம்மையான முறையிலே நடத்தி வருகின்ற குஜராத் மாநில அரசு, உலகின் தலைசிறந்த அரசுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தை  வென்றிருப்பதை, நாம் கொண்டாடியாகவேண்டும். வெளிப்படைத் தன்மை, கடப்பாடு, மக்கள் தேவைகளுக்கு செவிசாய்த்தல் ஆகிய செயல்பாடுகள் வாயிலாகப்பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கும், உலகின் தலைசிறந்த அரசுகளில் இரண்டாவது அரசு என்பது இந்த விருதுப் பத்திரத்தின் அடக்கம். 

அடக்கம் என்பது அரசின் அணிகலன் என்பதைச் சொல்லாமல் சொல்லும் இவ்வரசு உலக வங்கியிலிருந்து தான் பெற்ற கடனை முழுமையாக அடைத்ததோடல்லாமல், அவ்வங்கியில் பெருத்த முதலீட்டைச் செய்துள்ளது என்பது சிறப்புக்குச் சிறப்பாகும். 

(மேலே சக்தி மந்திர் அம்மன்).      


அவ்வைமகள் 

                      
           

Sunday, March 13, 2011

எனது வண்ணப்படப் பேழையில்: சின்னி ஜெயந்த்தும் நானும்

எனது வண்ணப்படப் பேழையில்: சின்னி ஜெயந்த்தும் நானும்

சென்ற ஆண்டு, அட்லாண்டா மாநகரத்திற்கு,  தனது குடும்பத்தோடு  வருகை  தந்திருந்தவர். அவரது நகைச்சுவைச் சொற்பொழிவில் சிரிப்ப்போ சிரிப்பென்று சிரித்துச் சிலிர்த்த கையோடு, அவரைச் சந்தித்து, சிந்தனைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. எளிமை, ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் தன்மை ஆகியன புலப்பட்டன. ஒருமாபெரும்கூட்டத்தை வயிறு வலிக்கும் அளவுக்குச் சிரிக்க வைப்பது என்பது சுலபமான வேலையில்லை. சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய இந்த சிரமமான பணியை வெகுசிறப்பாகச் செய்துகொண்டிருக்கிற சின்னி ஜெயந்த்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். மனைவி மக்களுடன் இவர் பல்லாண்டு  வாழ்கவென இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

அவ்வைமகள்