Subscribe:

Pages

Saturday, January 22, 2011

மறக்கப்பட்டார் தாமரை மணாளன்

மறக்கப்பட்டார் தாமரை மணாளன்

தாமரை மணாளன் - இந்தப்பெயரை நினைவில் வைத்திருப்பவர் எவரேனும் உண்டா?
இக்கேள்வியை நான் இங்கு எழுப்புவதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் எண்ணலாம்.
ஒரு எழுத்தாளனின் எழுத்து நன்றாயிருந்தால் மட்டும் போதாது; அதிர்ஷ்டத்தோடு, தூக்கிவிட ஆளும் தமுக்கடிக்க ஊடகங்களும் இருக்கவேண்டும் - அன்றேல் அவரைத் தமிழுலகம் சுத்தமாக மறந்துவிடும்  என்பதனை இந்த ஒரு நபரை வைத்தே சொல்லிவிடலாம் போலிருக்கிறது.     
எழுத்தாளர்  தாமரை மணாளன் இன்று மறக்கப்பட்ட மனிதர். அந்தப்புரம், இதயவல்லி, இந்திரவிழா, தேன்மலைக்கன்னி - இந்த நாவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிப் போந்தவர் - பெயர்போன ஒரு செய்தித் தாளின் துணை இதழான வாசுகி எனும் இருவாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இதய மலர் திரைப்படத்தின் கதை வசன கர்த்தா= “விலைக்கு வாங்கியிருக்கிறேன்” என்பது போன்ற சின்னத்திரைத் தொடர்களின் படைப்பாளர்! ஆனால் இன்று அவரை எவரும் அறியார்.
வலைதளத்தில் அவரைப் பற்றி அறிய தரவுகள் ஏதும் இல்லை. தாமரை மணாளன் இவ்வாறு மறக்கடிக்கப்படுவதா? அதிர்ச்சியுற்ற நான் - “விவரங்களைத் திரட்டுவேன் - இம்மனிதரை வருங்காலத் தலைமுறையினர் அறியுமாறு செய்வேன்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு. தேடலைத்துவக்கினேன்.
தினகரன் பத்திரிக்கை - அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றேன் - இப்போதுள்ளப் பணியாளர்கள் எவருக்கும் அவரைத் தெரியவில்லை. விடாமல் முயற்சித்தேன் - கடைசியாகக் கொஞ்சம் விஷயம் தெரிந்தநபர் ஒருவர்  லைனில் வந்தார். “ஹி ஈஸ் நோ மோர்” என்றார். வாசுகிப் பத்திரிகை மூடப்பட்டு எத்தனையோ வருடங்களாகி விட்டது என்றார். அவரது சந்ததியினருடைய  தொலைப்பேசி - முகவரி ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டபோது “இல்லை” என்றார்.

அடுத்ததாக, அவரது நாவல்களை வெளியிட்டிருக்கிற பதிப்பாளர்களைப் பிடிக்கலாம் எனத் தொடர்பு கொள்கிறேன்: “ரொம்ப நாளாயிடிச்சே! அவர் போயி!" 
"ராயல்டி அனுப்புவீங்களே அவரோட சந்ததி- அட்ரஸ் - போன நம்பர் கிடைக்குமா?" "
அவர் காலத்திலேயே அதெல்லாம் முடிஞ்சு போச்சு - அவரோட நாவல் எதுவும் இப்ப மார்க்கட்ல இல்லியே”

1994-1996 காலக்கட்டத்தில் அவருடன் எனக்குக் கொஞ்சம் தொடர்பு இருந்தது, வாசுகியில் என்னை எழுத அழைத்து இனிய இல்லறம் எனும் புரட்சிகரமானதொரு தொடரை எழுதவைத்தவர். வாசுகி அலுவலகத்தில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நானே சென்று எனது கட்டுரையைச்  சேர்ப்பித்துவிட்டு வருவேன். அப்போது பெரும்பாலான சமயங்களில், அவர் இருப்பார். அவரைச் சந்தித்து, கட்டுரையை வாசிக்கவைத்து அவரது விமரிசனத்தை அறிந்து கொள்ளுவது எனக்குப் பிடிக்கும். சில நிமிடங்கள் மட்டுமே நடக்கும் இந்த சந்திப்பில், வயதில் மிகப் பெரியவரான அவரது நிதானம், ஆரவாரமற்ற அவரது பேச்சு, சங்கிலித்தொடர் போன்ற சமஅளவிலான எழுத்துக்களில் அமையும் அவரது கையெழுத்து. தனது கரிய நிறத்தைச் சமப்படுத்தும் படியாக அவர் அணியும் வெள்ளை உடுப்பு ஆகியனவற்றைக் கவனித்திருக்கிறேன்.    

இவ்வாறான சந்திப்புகளின் போது, அவர் நடந்துகொண்ட விதம் நாகரீகமான பேச்சு  ஆகியனவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். எவ்விதமான தனிப்பட்டதான கேள்விகளையும்  கேட்க மாட்டார் அத்தகைய விஷயங்களை  வெளிக்கொணரும் எந்த உரையாடலிலும் அவர் ஈடுபடமாட்டார். அத்தனைக் கண்ணியம் இருக்கும். 

வாசுகியின் ஒவ்வொரு இதழிலும் அவர் எழுதும் தலையங்கம் மிகவும் சுவையாக இருக்கும். ஒரு தலையங்கத்தில், தனது மனைவி தாமரை புஷ்பம் பற்றிப் பேசியிருந்தார். அந்த இதழ் வெளிவரும் அன்று, மதுரையில் இருந்தேன். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தவள், அங்கு தாமரைமணாளன் -  தாமரை புஷ்பம் பெயரில் அர்ச்சனை செய்து  குங்குமப் பிரசாதம் கொண்டு வந்த நான், சென்னை திரும்பிய அன்று அவரிடம் நேரில் சென்று  பிரசாதம் கொடுத்து அவரது அன்பு மனைவியிடம் தருமாறு சொன்னேன். தன்  இருக்கையிலிருந்து சட்டென எழுந்து நின்று, “மொதல்ல ஏம் பொண்ணுக்குத் தரப்போறேம்மா! ஒன்னைபோல தான் அது - அவ நல்லபடியா இருக்கணும்மா!!” என்று நெகிழ்ந்தார். எவரிடமும், சொந்தப் பிரச்சனைகள் பற்றிப் பேசக் கூடாது எனும் நல்ல நெறியைப்பற்றி வாழும் அவரிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று அமைதியாக விடை பெற்று வந்துவிட்டேன்.

இது நடந்து பலமாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் தொலை பேசி அழைப்பு வந்தது அவரிடமிருந்து. இரண்டு வருடத்தொடர்பில் அவர் என்னை அழைத்த ஒரே   தொலை பேசி அழைப்பு அதுதான். மிகுந்த பணமுடையில் இருப்பதாகவும், ஏதேனும் பணம் கடனாகத் தந்து உதவினால் நன்றி செலுத்துவேன் என்றார். நான் எந்த விவரத்தையும் அவரிடம் கேட்கவில்லை. எப்போது வேண்டும் என்றேன் அன்றே தந்தால் சிறப்பு என்றார். இன்று ஞாயிற்றுக் கிழமையாயிற்றே என்றேன். யாரையாவது உடனே அனுப்பி வாங்கிகொள்ளுகிறேன் இல்லை இல்லை நான் புறப்பட்டு வருகிறேன் என்றார். வயதானவர் அலைய வேண்டாமென நானே கிளம்பினேன் பெருங்களத்தூர்- ரயில் நிலையத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.   “ரெண்டு சின்னக் கொழந்தைகளாச்சே! அதுகள விட்டுட்டு வீட்டு வேலைய போட்டுட்டு வந்து எனக்கு உதவி பண்ணியிருக்கிக! நீங்க -- நீ நல்லா இருக்கணும்” என்றார். அன்று அவரைப் பார்த்தபோது “சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்” என்கிற வாசகம் நினைவுக்கு வந்தது, நான் அவரிடம் பணம் பற்றிப் பின் எப்போதும் பேசவே இல்லை, வாசுகி அலுவலகத்தில் நான் சந்திக்க நேரிட்ட வேளைகளில் எல்லாம் அவர் கண்களில் உதித்த  நன்றி தெரிவிப்பினை என்னால் உணரமுடிந்தது.

இடமாற்றம் ஏற்பட்டுக் காலம் உருண்டோடிவிட்டது. ஆயினும் எளிமையான அந்தப் பெரியவரிடம் நான் கண்ட பண்பாடு மட்டும் நிலைத்ததாக இருக்கிறது.  

தமிழ் மீது தனக்கு இருந்த காதலுக்காகவே அரசாங்க வேலையைத் துறந்து எமக்குத்தொழில் எழுத்து எனப் பல இடர்பாடுகளுக்கு இடையே எழுத்தாளனாக வாழ்ந்து காட்டியவர் தாமரை மணாளன். எளியோரை மறந்து வலியோரை வாழ்த்தும் போக்காகத் தமிழுலகம் மாறிவிடக்கூடாது. இந்த நல்ல மனிதருக்கு நல்லதொரு நினைவுப் பதிவை ஏற்படுத்துவது நல்லது. இவரது வரலாறு, மற்றும் விவரங்கள் பிறருக்குக் கிடைக்குமாறு செய்யவேண்டும். இவரது படைப்புக்கள், எல்லோருக்கும் கிடைக்கும்படியாக மின்வடிவில் தயாராகவேண்டும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு - எவரேனும் இப்பொறுப்பான பணியை மேற்கொள்வார்களா?  
    
  

  
    
  

    
          

         

Saturday, January 15, 2011

மங்கலமாய்ப் பொங்கிடுவோம் கும்பிடுவோம் கூடி

மங்கலமாய்ப் பொங்கிடுவோம் கும்பிடுவோம் கூடி


பொங்கல் என்றாலே நாட்டுப்புற மொழிதான் நம் நினைவுக்கு வரும். பொங்கல் குறித்து என்றோ நான் எழுதிய கவிதை ஒன்று என் நினைவுக்கு வந்தது. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


ஒருகலமா ரெண்டுகலமா புத்தம் புது நெல்லு புத்தம்புது நெல்லு
பொங்கலுக்குப் பொங்கிவைக்க அரைக்க வேணும் சொல்லு

ஒரு  நெலையா ரெண்டு நெலையா ஆலப்பாகுவெல்லம் ஆலப்பாகு வெல்லம்
இடிச்சித்தூளாக்கி நான் போடவேணும் சீக்கீரமா நீ சொல்லு

ஒரு கட்டா ரெண்டு கட்டா நாமக்காரக்கரும்பு நாமக்காரக்கரும்பு
பூஜையில வைக்கவேணும் எடுத்துவந்து கட்டு

ஒரு படியா ரெண்டுபடியா மொச்சகொட்ட சொல்லு மொச்சகொட்ட சொல்லு
தோலஉறிச்சி நானு வெச்சிடணும்  காயிகூட்டுலதான் போட

ஒருமுழமா ரெண்டுமுழமா மஞ்சசாமந்தி பூவு மஞ்சசாமந்தி பூவு
சூரியனுக்கு பிடிச்சதது நீளமா நீ கட்டு

தைப்பொறந்தா வழிபொறக்கும் நம்மகவலையெல்லாம் போகும் கவலையெல்லாம் போகும்
கை நெறைய துட்டு வரும் மகிழ்ச்சி வந்து சேரும்

பொங்கலோ பொங்கலுன்னு வாய் நெறயக்கூவி வாய் நெறயக்கூவி
மங்கலமாய்ப் பொங்கிடுவோம் கும்பிடுவோம் கூடி

அவ்வைமகள் (பாமரம் கவிதைத்தொகுப்பிலிருந்து)

தமிழ்ப்பொங்கல்

தமிழ்ப்பொங்கல்

பொங்கல் என்றாலே அது தமிழர்களின் விழா என்பதனை உலகே அறியும். அறுவடைத் திரு நாளான தைப்பொங்கல் ஒவ்வொவொரு ஆண்டும் தை முதல் நாளன்று துவங்கி மூன்று நாட்கள் அனுசரிக்கப்பபடுகிறது. முதல் நாள், கதிரவனுக்கும், இரண்டாம் நாள் கால் நடைகளுக்கும், மூன்றாம் நாள், சுற்றம்- நட்பு-சமுதாயத்திற்கும் என நன்றி நவிலும் விழாவாக நமது தைப்பொங்கல் அமையப்பெற்றுள்ளது.

நம் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்கும் இயற்கைக்கூறு ஒவ்வொன்றிற்கும், நமக்கு உதவிசெய்யும், ஒவ்வொரு உயிரிக்கும்  நன்றி செலுத்தவேண்டும் என்கிறதான விரிந்துபரந்த பண்பாட்டின் முத்தாய்ப்பு தான் தைப்பொங்கல் விழா! அபரிமிதமான விளைச்சல் ஈந்து வயல் வரப்புக்களில், செழுமை கொப்பளிக்க, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற பொய்யாமொழியின் விளக்கவுரையாக மக்கள், மாடு, கன்று, கழனி, தானியம், காய்-கனி எனப் புத்தாடை புனைந்து, மங்கலப் புன்னகையோடு வலம் வரும் வைபவம் தான் பொங்கல்.

அறுவடை செய்த புத்தம்புது நெல்லைப் பயன்படுத்தி மட்டுமே சோறும் பொங்கலும் ஆக்குவது, பச்சை மொச்சை, புதிதாய்ப் பறித்த பூசனி, அப்போதுதான் பிடுங்கி வந்த மஞ்சள் கொத்து, புத்துருக்கு வெல்லம் - இவை மட்டுமே பயன்படுத்துவது, எனப் பயன்பட்டுப் பொருள் ஒவ்வொன்றிலும் தமிழ்மண்ணின் வாசனை இருக்கவேண்டும் என்ற நியதியோடு, இயற்கைக்குப் பூசனை எடுக்கும் உறுதியானதொரு தமிழ் மரபாம் பொங்கல், உலகுக் கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.
நான் சிறுமியாக இருந்த பருவத்தில், ஒரு பொங்கல் பண்டிகையின்போது என் பாட்டியைப் பார்த்துக் கேட்டேன்: "ஏம்பாட்டி! இந்த முட்டகோசைப் போட்டுப் பொறியல் செஞ்சு தாங்களேன்!" நான் கேட்டதுதான் தாமதம்! பாட்டி பொங்கியெழுந்தாள்! "என்னது? சீமக்காயப் போட்டு சமைக்கச் சொல்றியா? நாக்கு நீண்டு போச்சாக்கும்! பொங்கல் நம்ம பண்டிகை! நாட்டுக் காயை மட்டுந்தான் சமைக்கணும்! இந்த மண்ணுடீ - இதலத் தாண்டீ நம்ம அப்பன், பாட்டன், முப்பாட்டன்னு வாழ்ந்துருக்கோம்! இந்த மண்ணுலப் பூர்வீகமா வளர்ந்துவரக் காய்கறியை மட்டுந்தாண்டீ பொங்கலுக்கு உபயோகிக்கணும்! சீமக்காயச் சேர்த்தோம்னா, எரிஞ்சிகிட்டுப் போறானே சூரிய பகவான், அவன் நம்மைச் சும்மா விடமாட்டாண்டீ!"

சம்மட்டியாலடித்தது போன்று பாட்டி பேசினாள். அவள் பேசியபோது அவள் கண்ணில் கோபம் கொப்பளித்த அதே வேளையில்,  நீர் பனித்ததையும் நான் பார்த்தேன். மண் பற்று, மாநிலப்பற்று, நாட்டுப் பற்று, தெய்வப்பற்று என்பதையெல்லாம், "நாட்டுக் காய்" என்று பாட்டி சொன்ன அந்த ஒரு சொல்லே பறைசாற்றியது!  எட்டு வயதுப் பெண்ணுக்கு அன்று கிடைத்த ஞான "தீட்சை"யை எனது உயர்கல்வி - ஆய்வுப் படிப்புக்களோ அல்லது மாபெரும் கவிகளின் எழுத்தோ, தேசத்தலைவர்களின் கொந்தளிக்கும் பேச்சோ இதுகாறும் தந்ததில்லை!!

பொங்கல் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சியன்று! நமது குருதியிலும், மூச்சிலும் ஓடிக்கொண்டிருக்கிற தமிழ்மரபின் தார்மீக விழா!!  பொங்கலின் முக்கியத்துவத்தை நமது குழந்தைகள் உணருமாறு கொண்டாடுவது நமது பொறுப்பு!!
  

நாம் விடாது கடைபிடிக்க வேண்டியது போகிப் பண்டிகை

போக்கிப் பண்டிகை

நாம் விடாது கடைபிடிக்க வேண்டியது போகிப் பண்டிகை 

பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும். பண்டைமரபு  விட்டுப்போகாமல் தொடர்ந்துவரும் ஒரே பண்டிகையாக, போக்கிப் பண்டிகையாம் "போகி" விளங்கிவருகிறது. இப்பண்டிகையின் முக்கியத்துவத்தை நம்மில் பலரும் புரிந்து கொள்ளவில்லை.

போகிப் பண்டிகை ஏன் வந்த்து என நாம் ஆராய்ந்தோமேயானல், அது மூட நம்பிக்கையன்று மாறாக அது ஒரு உயர்ந்த சமுதாய ஏற்பாடு என்பது நமக்குப் புரியும்.  

தெரிந்து கொள்ளுங்கள்
"சுத்தம் சுகம் தரும், சுத்தம் சோறு போடும்" என்று வாய்வழியாகச் சொல்லியதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வீட்டிலும்  அதனைக் கட்டாயம், நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற  உறுதியோடு ஒருங்கிணைந்த தூய்மைப் பணியினை ஒட்டுமொத்த மக்களும் ஒரேநேரத்தில் செய்ய்யவேண்டும் என்பதற்கான ஏற்பாடுதான் போகிப் பண்டிகை.

குறிப்பாகச்  சொல்ல வேண்டும் என்றால்   தொற்றுநீக்கம் வீடுதோறும்  செய்யப்படவேண்டும் என்பதில் அசைக்கமுடியாத ஒற்றுமையை மக்கள் அனைவரும் போகியிலே காட்டினர்  எனபதே  போக்கிப் பண்டிகையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் மிகச்சிறந்த பாடமாகும். சமுதாயத்தில் தொற்றுநீக்கம், வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமெனில்  அதை ஒரே சமயத்தில், சமுதாயத்திலுள்ள அனைவரும் தெரிந்தெடுத்த ஒரு வழிமுறையின் மூலம் ஒன்றுபோல் செய்யவேண்டும்  என்கிற ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டம்  (Integrated  Sanitation Movement) தான் போக்கிப்  பண்டிகையின்  அடிப்படையாகும்.

இதனை நமது  முன்னோர்கள் செய்துகாட்டியவிதம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது! வீட்டிலே முக்கியமாகத் தொற்றுக்கள் வளரும் மூலவாய்களை அவர்கள் அடையாளம் கொண்டு அவற்றை  அறிவியல் முறைப்படி அழித்து, தனி வீடு மற்றும் பொதுச் சுகாதாரத்தை நிலைநிறுத்தினர். 

தலையணை, படுக்கைப் பொருட்கள், பாய், துடைப்பம், கால்மிதிக்கும் கோணிப்பைகள்மிகக்குறிப்பாக, பழைய உள்ளாடைகள், பெண்கள் பயன்படுத்திவந்த தீட்டுத்துணி, இனிமேல் துவைத்தாலும் அழுக்கு நீங்காது  எனும்படியாய்ப் பழையதாகிப்போன  கைத்துடைப்பான்கள், கந்தைகள், அடுப்படியில் தொடர்ந்து பயன்படுத்தியதால் தேய்ந்து போன (அதனால் கழுவ இலாயக்கற்றுப்போன) அகப்பைகள், மரத்தட்டுக்கள். தொழுவ எச்சங்கள்,ஆகியனவற்றை எரித்துப்  பொசுக்கி அவற்றில் தேங்கிச் செறிந்து நின்ற அனைத்துத்   தொற்றுக்களையும், நம் முன்னோர்  நீக்கினர் என்பது பேருண்மை.

 ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டம் எனும்போது, அது முழுமையாய் அமையவேண்டும், என்பதிலே நமது முன்னோர்களுக்கு இருந்த சிரத்தையும் பொறுப்புணர்ச்சியும் நம்மை வியப்படைய வைக்கின்றது.

வீட்டின் தரை மற்றும் சுவர்களில் உள்ள ஓட்டைப் பொத்தல்களை அடைத்து, வெள்ளையடிப்பது, வாயிற்படிகளை மராமத்து செய்து  வண்ணமடிப்பது,    வீட்டுவாசலை மண்ணடித்து உயர்த்துவது என்கிற ஒவ்வொன்றுமே ஒருங்கிணைந்த சுகாதாரத்திட்டத்தின் கூறுகளாகும். 

பாக்டீரியாக்கள் சேர்ந்த பொருட்கள், வைரஸ் தோற்றுவாய்கள், ஆகியனவற்றை ஒழிக்கவேண்டுமேன்றால், Incineration என்று நாம் அழைக்கும் எரியூட்டலே  மிகச்சிறந்தவழி என்கிற  அறிவியல் பேருண்மையை  அவர்கள் அந்நாளிலேயே அறிந்திருந்தார்கள் என்பது மட்டுமல்லாது vectors என்று நாம் இன்று அழைக்கக்கூடிய  தொற்றுக்களைப் பரப்பும்  ஊடகங்களை வளரவிடாது கவனித்து அவற்றை மட்டுப்படுத்தவேண்டும் என்றும் அவர்கள் மிகநன்றாகவே அறிந்துவைத்திருந்தார்கள்.  நுண்ணுயிரிகளின் ஊடகங்களான மூட்டைப் பூச்சி, எலி, பெருச்சாளி. கொசுஉண்ணி, சீலைப்பேன், ஆகியனவற்றை காலத்தே ஒழிப்பது என்கிறது என்கிற ஒழுங்குக் கட்டுப்பாடு "போக்கி" பண்டிகையை அனுசரிப்பதன் மூலம் கட்டாயமாக்கப்ப் பட்டது எனலாம். 

அந்நாளையக் காலகட்டத்தில், மனிதர்கள் வாழும் வீடுகளில் கால்நடைகள் தவிர்க்கமுடியாத அங்கமாக, விளங்கிவந்த நிலையில், அவற்றின் சுகாதாரத்தை மிகுந்த சிரத்தையுடன் கவனித்துத் தொழுவத்தை மராமத்து செயவதோடு நின்றுவிடாமல், கால் நடைகளை முழு அக்கறையுடன் சுத்தம் செய்து, தொற்றுக்கள் சேரும் மூலவாய்களான கொம்பு, மற்றும் கொளம்பு  இணுக்குக்களைத்  தூய்மைப்படுத்தி, உரசல் மற்றும் சிராய்ப்புக்களால் அடிக்கடி சேதாரப்படும் கொம்புகளுக்கு  புறப்பரப்பு கெடாமலிருக்க வண்ணம் தீட்டி, அவற்றின் தோலிலே உள்ள புண்,  உண்ணிகள் ஆகியனவற்றைக்  கவனித்து உரிய சிகிச்சையளித்து     தூய்மைக்குத் தூய்மை, அழகுக்கு அழகு எனும்படியாக  அலங்கரித்துச்  சுகாதாரம் காத்த அக்காலக் கட்டுப்பாட்டை எவ்வாறு பாராட்டுவது?

இன்று விலங்குகளின் நலம் பற்றி அதிகம் பேசுகிறோம். அனால் அன்றே இதனை நம் முன்னோர்கள்  நடைமுறைப்படுத்தியிருந்தார்கள்!  நமக்காக மட்டுமே வாழ்ந்து, வாழ்நாள் உழைப்பையும் நமக்காகவே அளிக்கும் கால்நடைகள்வேலையற்ற உல்லாசமான ஒய்வு நாள்  ஒன்றை  அனுபவிக்கவேண்டும். அக்கால்நடைகள், ஊரைவேடிக்கப்பார்த்தபடி, ஓடிவிளையாடி மகிழ்வுறவேண்டும், இளைப்பாரவேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் மாட்டுப்பொங்கல், இதற்கானத்  தயாரிப்பிற்கு, போக்கிப் பண்டிகையிலே பிள்ளையார் சுழி போட்டுவிடுவார்கள். 

சொல்லப்போனால், இன்று நாம் மேலாண்மையிலே எடுத்தாள்கின்ற சித்தாந்தங்களை அன்றே நடைமுறையாக நிலைப்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள் என்பதே சரி.

இந்த ஏற்பாடுகளின் உண்மைப்பொருளை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். மூடநம்பிக்கைகள் யாவை, உறுதியான ஏற்பாடுகள் யாவை என்பதை அடையாளம் கண்டு, சிறப்பானவற்றை நாமும் விட்டுப்போகாமல் சரியானப் புரிந்துகொள்ளளோடு கடைபிடித்து வரவேண்டும்.

போகிப் பண்டிகை என்றால் குப்பைகொளுத்துவது என்று குருட்டாம்போக்காக எண்ணிக்கொண்டு, டயர், ப்ளாஸ்டிக், மற்றும்  தர்மொகோல் எச்சங்களை எரிப்பது நாம் செய்த குறைபாடே தவிர, போகிப் பண்டிகையின் குறைபாடன்று.
     
இன்று நாம், நம் பெரியவர்களின் சிந்தனையை புரிந்துகொண்ட வாக்கில், நம்முடைய இன்றைய சூழ்நிலைக்கு  ஏற்றார்ப் போன்ற ஒருங்கிணைந்த சமுதாயச் சுத்திகரிப்பு மற்றும் தொற்று நீக்கலை மேற்கொள்ள வேண்டும். போகி சொல்லும் சமுதாயச் சிந்தனையை, நம்மில் படித்தவர் பலரும்பிறருக்கு, மிகக் குறிப்பாகக்  குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல  வேண்டும். இதை நாம் தப்பாமல் செய்தோமேயானால் அதுவே நாம் நம் முன்னோர்களுக்குச்  செய்யும்  நன்றி  நவிலலாகும்.   
 

மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்பதும் கூட  விலங்கு-உளவியலின்  வெளிப்பாடாகும்.  விலங்குகளுக்குள்ளே பொதிந்துகிடக்கின்ற திறமைகள் வளர்க்கப்படவேண்டும், மாக்களும் மக்களிடைய தம் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு தரவேண்டும் என்கிற பரந்துபட்ட உயிரியல் சிந்தனை  நம் முன்னோர்களின் ஒரு சீரிய பழக்கமாக இருந்தது என்பதை நாம் அறியுமாறு விளக்குவன அவர்கள் ஏற்படுத்திய பொங்கல் போன்ற பண்டிகை.

இனியொரு விதிசெய்வோம் அதை  எந்த நாளும் காப்போம் எனும்படியாக, பண்டிகைகளை விடாது கொண்டாடுவோம், சரியான புரிந்துகொள்ளலோடு கொண்டாடுவோம் என உறுதி கொள்வோமா?  

    



.








 
 
 




     

 
 












 

Tuesday, January 11, 2011

கண்டுபிடித்தேன்! அமெரிக்காவில் வெங்காய பஜ்ஜி!!

கண்டுபிடித்தேன்!
அமெரிக்காவில் வெங்காய பஜ்ஜி!!


இங்கு வந்த புதிதில், நம்ம ஊர் ரேஞ்சுக்கு நொறுக்குத்தீனி ஏதாவது இங்க கெடைக்காதான்னு மனசுஏங்கி வீங்கிப்போய்க்கிடந்த நாட்கள் அவை.

அன்று எனக்கு அடிச்சது யோகம்!  "யுரேகா" அதிர்ஷ்டம் கிட்டியது என்று சொல்ல வேண்டும்!! இடம் டயரி குவின்!

சுற்றுவட்டாரங்களில் ஏறி இறங்காத ரெஸ்டாரண்ட் இல்லையெனும் அளவுக்கு வெண்டி, மெக்டொனால்ட்ஸ், வாஃபிள் ஹவுஸ், டாகோபெல், ஆப்பிள் பீ, க்ரிஸ்டல், சப்வே, லாங்க் ஹார்ன், கெட்டுகி என  எல்லாவற்றிலும் கையை நனைத்துவிட்டு வந்தாகிவிட்டது. பஜ்ஜி, பகோடா  ரேஞ்சுக்கு பச்சென வாயில் விறுவிறுப்பாய் மென்று கரைக்க எதுவுமே அம்படவில்லை.

தினந்தோறும் டிகேட்டரில் உள்ள சரவணபவன், உடுப்பி ரெஸ்டாரண்டுகளுக்குப் போவது அத்தனை சுலபமானது அல்ல.  போக வர ட்ரைவிங்க் மட்டும் இரண்டு மணி நேரமாகும்.

சின்ன சின்ன நொறுக்குத்தீனிக்குகூட இத்தனை ஆலாய்ப்ப்பறக்கணுமா? என்னடா இந்த அமெரிக்க வாழ்க்கைன்னு அலுத்துப்போன போது, இந்த அலுப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமான்னு பனிப்பொழிவு அபாய எச்சரிக்கை வந்தது!

பனிப்பொழிவுஎன இங்குஊரெங்கும் லீவு. ரோட்டில் காரை நகர்த்தமுடியாமல் ஐஸ் உறைந்து போயிருந்தது. எத்தனை நேரம் தான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது!

பாதுகாப்புக்கவசங்களுடன் சர்வஜாக்கிரதையாக நடந்து கொஞ்சம் போகலாம் என முடிவு செய்து நடக்கலானேன்!

தத்தி-புத்தி என்பார்களே அது போலவே நடந்தேன்! ஒரே த்ரில் தான் போங்கள்! நாங்கு மைல் நடந்து விட்டேன்! (இங்கு மைல் தான் நம்ப ஊர் மாதிரி இண்டர் நேஷனல் ஸ்டாண்டர்டுக்கு கிலோமீட்டர் இல்லை!)

க்ரோகர் ஷாப்பிங்க் காம்ப்ளஃக்ஸ் கண்ணூக்குதெரிய, ஒரு ரைட், ஒரு லெஃப்ட், ஒரு ரைட் என "டர்ன்" அடித்து அந்த வணிக வளாகத்துக்குள் நுழைந்தேன்!

இவ்வாறு காலாற வழுக்கி நடந்து வந்த நான் பனி மழைக்காக ஒதுங்கியது  டயரி குவினுக்குள்.
பால்கடையாச்சே ! நிச்சயம் ஒருவாய் சூடாகக்காப்பி கெடைக்கும்னுதான் நுழைஞ்சது!

நம்ம ஆவின் பார்லரைப்போல இங்கு பாலால் செய்த வகைவகையான குளிப்பதார்த்தங்களும், ஐஸ் க்ரீம், ப்ளிஸ்ஸார்ட்,  ஷேக், வகைகள், காம்போ மீல், மற்றும் நொறுக்குத்தீனிகளும் இருப்பதாகத்த்தெரிந்தது. நம்ப ஊரைப் போலவே, கையால் போட்ட காஃபி! நடந்து வந்ததுக்கு ஒரு பலன் இல்லாம இல்லை! ஓகே!

காப்பிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, அட இங்கவேற என்ன நொறுவல் விக்கற்றாங்க பாக்கலாமேன்னு நோட்டம்விட்டேன் - வழக்கம் போல - ஃப்ரென்ச் ஃப்ரை  தென்பட்டது.  இதுதானா சீன்னு போச்சு! இதப்பாக்கிறதக்காட்டிலும் முகத்தைத்திருப்பிக்கலான்னு நெனைக்கிறபோதுதான் அது  கண்ணிலபட்டது: "ஆனியன் ரிங்க்"   மெனுவில இது ஒரு அயிட்டத்தோட பேர்.

என்னதான் அதுன்னு பார்த்திடுவோம்னு ஆர்டர் பண்ணி வாங்கி வாயிலபோட்டாக்க அச்சசல் நம்ம வெங்காயபஜ்ஜி!!
பொறுபொறுன்னு வெங்காய மணத்தோட வாயில மசிஞ்சுது! ருசின்னா ருசி! "பேஷ்! ரொம்ப நன்னாயிருக்குன்னு" சொட்டுதட்டவேண்டும் போல இருந்தது!!

ஒத்த ஒத்தையா வெங்காய வட்டங்களை எடுத்து ஒத்த ஒத்தையா மாவுலதோய்த்துஎடுத்து எண்ணையில பொரிச்சுத்தயாரிக்கறாங்க! மாவு கடலைமாவு இல்லை!! இங்கக்கெடைக்கிற ஆல்பர்பஸ் ஃப்ளார் பயன்படுத்தியிருக்கிறாங்க போல!

பஜ்ஜியைப்ப்பொறுத்தமட்டில், அமெரிக்க ரசனைக்கேற்ப பதார்த்த டிசைனில் கொஞ்சம் மாறுதல் - பரிமாறலில் மாறுதல்!

இத்தனை இதமாய்ப்பதமாய் இந்திய வாசனையோட ஒரு பதார்த்தம் தயாரிச்சுத்தர அந்த அமெரிக்கக்கடைகாரரைப் பாராட்டியாக வேணுமென போய் விசாரித்தேன்! அவருடன் பேசினேன்! நம்ம நாடு குஜராத் மாநிலத்திலிருந்து இங்குவந்து வாழ்பவர்! வந்து முப்பது வருடங்களாயிற்று என்றார். வயதில் மூத்தவர்! மொழியில் கொஞ்சம் அமெரிக்க வாடை தெரிந்தாலும், இந்திய லுக்கோடு இந்தியப்பண்பாட்டின் முத்தாய்ப்பான விருந்தோம்பலோடு இனிதாய், இதமாய்ப் பேசுகிறார். பெயர்: ஹமீத் மாமின்


ஹமீத் சொன்ன தகவல்கள்:
அமெரிக்கர்களுக்கு இந்த ஆனியன் ரிங்க்ஸ் மீது மோகம். நிறைய விற்கிறது.

சொல்லப்போனால், டயரி குவின் ஒரு ஃப்ரான்சைஸ் கடை. இதில் யாரும் எந்த மெனுவையும் மாற்றிவிட முடியாது. அமெரிக்கா முழுவதும் டயரி குவின் கடைகளில் ஒன்றே போல் தான் உணவுகள் கிடைக்கும். உண்மையில், இந்த மெனுவில் ஆனியன் ரிங்கை சேர்த்தது நான் இல்லை!
இக்கடையின் முதல் முதலாளியான ஒரு அமெரிக்கர்!
இந்தியாவந்திருந்தபோது தான் ரசித்துருசித்த வெங்காயபஜ்ஜி தனது மெனுவில் இருக்கவேண்டும் என விருப்பப்பட்டு ஆனியன் ரிங்க்ஸ் என உருமாற்றி - பெயர் மாற்றி டைரி குவின் மெனுவில் சேர்த்திருக்கிறார்.
அவர் செய்த புண்ணியம், இன்று பொருளாதார வீழ்ச்சியில் எல்லா இடங்களிலும் வியாபாரம் குறைந்து போய்விட்ட நிலையிலும் இங்கு ஆனியன் ரிங்க்ஸ் நிறையவே விற்கிறது என்றார் புன்னகையோடு.

வெங்காய வட்டங்கள் மாவில் தோய்க்கப்பட்ட நிலையில் ஒரு நிறுவனம் சப்ளை செய்கிறதாம்!

"அதை அப்படியே வாங்கி வைத்துக்கொண்டு, இங்கு பொரித்து மட்டும் தருகிறோம்." 

இது நிற்க -
ஓ வடிவத்தில் இங்கு விற்கும் ருசியான பஜ்ஜிக்கு ஒரு "ஓ" போட்டுவிட்டேன்!
பாரத நாட்டிலிருந்து வெவேறு காலகட்டங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக வந்திருக்கிற  நானும் ஹமீதும் அந்நியமண்ணில் - அமெரிக்க மண்ணில் வெங்காய பஜ்ஜியால் இணைந்தோம்!
வாழ்க ஓ பஜ்ஜி!
வளர்க பாலரசி நாமம்!!  (டைரி குவினைப் பாலரசி எனலாமா?) 
வருடங்கள் ஓடினாலும், இந்த ஆனியன் ரிங்க்ஸ் சலிப்பு தட்டவே இல்லை!
எங்கள் நட்பும் அதுபோலவே!!
நான் கடையில் நுழைந்தால், எனக்கும் என் குழந்தைகளுக்குமாக மூன்று ஆனியன் ரிங்க்ஸ் பேக் பண்ணிவிடுவார்கள்.

நம்ம ஊரிலும் ஓட்டல் மற்றும் டீக்கடைக்காரர்கள் ஆனியன் ரிங்க் தயாரிக்கலாமே!
தாய்மார்களில் வீடுகளில் இதை செய்து அசத்தலாமே!
செய்து பாருங்கள் - சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆனியன் ரிங்கிற்கே ஓட்டு என்பார்கள்
நொறுக்குக்குதீனிகளின் முடிசூட்டிய ராணியாக ஆனியன் ரிங்க்ஸ் வளைய வருவது நிச்சயம்.

அவ்வைமகள்

Monday, January 10, 2011

காதலா? காமமா?

காதலா? காமமா?

காதலா காமமா என்னவென்று கேள்வி
இரண்டிற்கும் வேறுபாடு என்னவென்று கேள்வி
எது முதலில் எது பிறகு என்பதெந்தன் கேள்வி
எதைக்கொண்டு இதைக்கண்டு கொள்வதெந்தன் கேள்வி
பின்னதை முன்னதுதான் விளைத்திடுமா கேள்வி
முன்னது பின்னதைத்தான் விலக்கிடுமா கேள்வி
விடலை ஈர்ப்பு நேசமெல்லாம் வெற்றுக்காமமென்று சொன்னால்
அடலேறும் உறவுப்பற்று எந்தவகையில் சேர்த்தி?
வயோகிதத்தில் வருவதுதான் பாசம் என்று சொல்வீர்
வாலிபத்தில் வருவதை மோசமென்றும் கொள்வீர்
காதல் பித்தலாட்டமென்று பிதற்றிடுவோர் எல்லாம்
போலிப்பசப்பில் காலமோட்டும் விந்தை நல்ல விந்தை
வாலிபத்தில் வருவதுதான் காதலென்று ஆனால்
வயோகிதத்தில் வருவதைக் காமமென்னலாமே!
வாலிபமா வயோதிகமா இதுஅல்ல கேள்வி
காதலா காமமா என்பதுதான் கேள்வி
எது உயர்வு எது இழிவு என்பதுங்கள் கவலை
இது புனிதம் அது புனிதம் என்பதுங்கள் குழப்பம் 
வயதானால் முதிர்ச்சிவரும் எனபதுங்கள் பேதம் இள
வயதிலும்தான் மனமுதிர்ச்சிவரும் என்பதெந்தன் வாதம்
அசைவைப்பார்க்கும் இசைவைப்பார்க்கும் காதலென்று கேள்வி
வயதைப்பார்க்கும் உடலைப்பார்க்கும் காமமென்று கேள்வி
வயதைப்பார்த்து உடலைப்பார்த்து ஆசைவந்ததானால்
அசைவும் இசைவும் இல்லையென்றால் காமம் வெற்றுத்தோல்வி
அசைவைப்பார்த்து இசைவைப்பார்ததுக் காதல் வந்ததானால்
வயதும் உடலும் பொருந்திவந்தால் காமமணம்மலரும் காணீர்
காமம் மோசம் என்பதைச் சொல்லிவிடும் யாரும்
காமம்தேடும் சோரப்ப்போக்கைத் தடுப்பதில்லை காணும்
சமயம் பார்த்து வசதி பார்த்து ஒப்புக்கொள்ளும் போக்கில்
சமயம் பார்க்கும் உயர்வுபார்க்கும் வெளிப்போக்கிற்கென்ன வேலை?
மனதும் பரிவும் இல்லையென்று ஆகிவிட்டபோதும்
காமப்போர்வை சேர்க்கையிலே நாட்டமேன் என்கேள்வி
காதலுக்கும் காமத்திற்கும் என்னமாறுபாடு? எண்ணமாறுபாடே!
காதல்தேடும் வழிவழக்கில் காமம் விளைச்சல் காணும்
காமமெழக் காதல் தேவையில்லையென்று சொன்னால்
காதலெழக் காமம் எழக்கூடாதென்று இல்லை!
காதலுக்கு என்னதேவை என்னதேவை கேட்பீர்
இணக்க நிலை இறுதிவரை இருக்கவேண்டும் கேட்பீர்
காதலற்ற காமம் ருசிப்பதில்லை என்றும்
காமமின்றி காதல்முடிவதில்லை என்றும் 
காமமற்ற காதலுக்கு நல்காலம்கனிய வேண்டும்
காதலற்ற காமத்திற்கோ நல்புத்திபுகட்ட வேண்டும்

                              அவ்வைமகள்

அம்மா போட்டாள் கொள்ளி

அம்மா போட்டாள் கொள்ளி


சரோஜா அத்தைக்கு மொதல்ல தெரிவிக்கணுண்டா!
கூடப் பொறந்த அக்கா வராம பாடியை எடுக்கமுடியாதுனு பெரியவங்க சொல்லுவாங்க, ஒடனே பொறப்பட்டு வரச்சொல்லு!
துபாய்க்கு நீ அனுப்பற மெயிலத் தப்பில்லாம அனுப்பிட்டு வா!


அப்புறம், ப்ரௌசிங்க் செண்டர்லேர்ந்து வரச்சே ஃப்ரீசர் பெட்டிக்குச் சொல்லிடு!

ஜகன், கோபாலின் பையன் டூ வீலரில் கிளம்புகிறான்.

ஏண்டா சரோஜாவுக்குத் தெரிவிச்சுட்டயா?  கோபாலின் அம்மா கேட்கிறாள்.

இதோ ஜகனை அனுபியிருக்கேன் சரோஜாவுக்கு மெயில் அனுப்பறதுக்கு!

அவ இங்க எப்ப வந்து சேருவா?

ஏம்மா! அங்க அவளுக்குப் புறப்படக் கொஞ்சம் நேரமாகதான்னா?
வீட்ட ஏரக்கட்டி, டிக்கெட் எடுத்து, ஃப்ளைட் பிடிச்சு வர எப்படியும் நாளைக்கு ஆயிடும்! பெரும்பாலும் அவ மட்டுந்தான் வருவா! குழந்தைகளும் அவரும் அங்கேயே இருக்கவேண்டியிருக்கும் அவர் வேலைக்குப் போயாகணும். பசங்களுக்குப் படிப்பு!


கோபால், அம்மாவின் கேள்விக்கு அவள் காதில் கேட்கும்படியாகச் சத்தமாய்ச் சொன்னார்.

அழுவது - அவ்வப்போது இப்படிக் கேள்வி கேட்பது என்று அவள் ஏதோ செய்துகொண்டிருக்கிறாள். கொஞ்சம் அவளுக்குத் தண்ணி தந்து குடிக்கச் சொல்லித் தடவிவிட்டு கோபால் திரும்ப ஜகன் வாசலில்.

வண்டியை நிறுத்தாதடா!
வெட்டியானுக்குச் சொல்லிட்டு வந்துடு!
அவன் வந்தபிறகு சொல்லிக்கலாம் நாளைக்கு ஆயிடுன்னு, இப்ப ஒண்ணும் சொல்லாதே!
சரி பெட்டி என்னாச்சு?


கொஞ்ச நேரத்துல வந்துடும்.

கோபால் பார்க்கிறார் - மரபெஞ்சில் அசைவற்று அண்ணாந்து கிடக்கும் தம்பி - சீனிவாசன்!

இன்னைக்கெல்லாம் பார்த்தா முப்பத்தி நாலு வயசு! சாகற வயாசா இது!
ஏண்டா இப்படிப் போயிட்ட?

தம்பியின், உதட்டை இன்னமும் கொஞ்சம் விரித்து மூடி, இமைகளைச் சரி செய்து விடுகிறார்.

தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியிலிருந்து பொட்டலம் கட்டி அனுப்பும்போதே சொன்னார்கள். இன்ஃபெக்ஷியஸ் என்று!
"தொடவேண்டாம்!" உஷா, கோபாலின் மனைவி முணுமுணுத்தாள்.

சும்மா இருடீ! இவனை இப்பக் கூடத்தொடலேன்னா! நா தழுக்க கண்கள் சுரக்கின்றன!
 
பெட்டி வந்தது! பின்னாடியே வசந்தா, சீனிவாசனின் மனைவி, அவனது இரு பெண் குழந்தைகள் -  தம்பியின் மாமனார், மாமியார்  என வந்து சேர்கிறார்கள்!

வசந்தா விசும்பினாள்! குழந்தைகள் அழவில்லை;  அமைதி மட்டுமே நிலவியது!!

உடல் பெட்டிக்கு மாறியது!
மீண்டும் அமைதி! அம்மா கூட அமைதியாகி விட்டாள்!

போன் அடிக்கிறது! கோபால் எடுத்துப் பேசுகிறார். கால் முடிகிறது!

யாருடா?

சரோஜாதாம்மா!

எப்ப வராளாம்?

வரலேன்னுட்டா!

ஏனாம்? உஷா கேட்கிறாள்.

எம் முகத்தைப் பாத்தா என் தம்பியோட பொணம் வேகாதுன்னுட்டா!
அவ சொல்றதும் சரிதாண்டா!
இவன் அவளக் கொஞ்சமாவாப் படுத்தியிருக்கான்!
ஒரு நாள் கூட அக்கான்னு ஆசையாப் பாசமா நடந்துக்கவே இல்லையே!
அப்படியென்னப் பிறவிப் பகையோ?
அது மட்டுமா? அவளோடப் பணம், நகைன்னு எல்லாம் ஸ்வாகா!
இந்த மொகத்தப் பாக்க அவ அங்கேர்ந்து வரணமாக்கும்?

அம்மா தொடர்கிறாள்!
அது சரி! இவன் யார் கிட்டதான் இணக்கமா இருந்திருக்கான்?
பொண்டாட்டிக்கு ஒரு மொழம் பூ? ஒரு நல்ல பொடவை?
வசந்தாவும், அவள் பெற்றோரும் குலுங்கி அழுகிறார்கள்.
ஏதோ ஒத்தப் பொண்ணப் பெத்துட்டோமேன்னு, எப்படியோ ஒங்க பொண்ணக் காப்பாத்திட்டீங்க! எனக்கு வாச்ச புள்ள அப்படி!
அவர்கள் காலில் விழுந்து கதறுகிறாள் அம்மா!

அம்மா! நீங்க இதையெல்லாம் செய்யக் கூடாது!
வசந்தா பதறுகிறாள்! அம்மாவைத் தூக்க முயற்சிக்கிறாள்!
அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்!
உஷா  அவர்களைச் சமாதானப் படுத்துகிறாள்!

ஒன்னையும் அவன் விட்டு வைக்கலியேம்மா!
ஒன்னோட பத்து சவரன் நகையையும் கூட கப்ளீகரம் பண்ணிட்டானே பாவி! உஷாவைப் பார்த்துக் கதறுகிறாள் அம்மா!

உஷாவின் அப்பா வீட்டிற்குள் வந்து நிற்க அவரின் காலில் போய்
விழுகிறாள் அம்மா!
யெப்பா! இந்த வயிறு மோசமான புள்ளயப் பெத்த வயிறுப்பா! மன்னிச்சுடுப்பா!

கோபால் பிணத்தை ஆச்சரியமாய்ப் பார்க்கிறார்!

இறப்பிலும் கூட இரக்கம் உருவாக்காதப் பிறவியா நீ?
பெத்த அம்மாவ இப்படிக் கதறவச்சுட்டியேடா!
உள்ளுக்குள் கரைகிறார் கோபால்!

சின்ன வயசிலிருந்தே பிடிவாதக்காரனான உன்னை நன்றாகப் படிக்கவைத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, நல்லப் பெண்ணாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சு என ஒரு விதவை சாதிச்சதுடா!
ஏண்டா இப்படியான? குடி - கூத்தி - திருட்டு- எய்ட்ஸ்!
- கோபால் உள்ளுக்குள் நினைத்தபடியே தம்பியைப் பார்க்கிறார்.

அம்மா உரக்கப்பேசுகிறாள்-
டேய்! இப்படியே வச்சுகிட்டு வேடிக்கப் பாக்கத்தேவையில்ல! எடுத்துடுங்கடா! அக்காகாரியும் வரமாட்டேன்னுட்டால்ல!

அம்மா!
பேசாத! வந்தவங்க போதும்! எடுக்க ஏற்பாடு பண்ணு!
சரிம்மா!

ஏ ஜகன் ஓடு!

வெட்டியானப் போய் உடனடியாக் கூட்டிட்டு வா!
மாமா நீங்க அவனோட  வண்டியிலப் போங்க! அப்படியே மத்த எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணுங்க! நான் இங்க வீட்டுல இருந்தாகணும்.
வசந்தாவோட அப்பா முடியாமப் படுத்துட்டாரு! நீங்க தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். ம்ம்- கெளம்புங்க!


மடமடவென வேலையாகிறது!
சித்தப்பாவிற்குக் கொள்ளிபோட ஜகன், வீட்டின் ஒற்றைப் பிள்ளை தயாராகிறான்!

வாய்க்கரிசி போட்டு நமஸ்காரம் பண்ணிக்கோங்க!
ப்ரோகிதர் கட்டளையிடுகிறார்!

நிற்க முடியாதவளாக அம்மா கொஞ்சம் உட்கார்ந்தாள்!
ஆபத்துக்குப் பாவமில்லை!
பெத்த வயிறு பதைக்காதா என்ன?
அந்த அம்மா அப்படியே உட்காரட்டும்; நமஸ்காரம் பண்ணலேன்னா தோஷம் இல்லை! ப்ரோகிதர் சொல்கிறார்.

ஒருவினாடி தான் அம்மா அப்படியிருந்திருப்பாள்! திடீரென அசுரபலம் வந்தவள் போல் அம்மா கம்பீரமாக எழுந்தாள்!
பக்கத்திலிருந்த ஒரு குடம் நீரைத் தலையில் சரேலென ஊற்றிக்கொண்டாள்!
சொட்டச் சொட்ட ஈரத்துடன்  நடந்து வந்தவள்
பேரனின் கையிலிருந்து நெருப்புச் சட்டியைப் பிடுங்கிகொள்கிறாள்!

பாட்டீ!

நகருடா!

தூக்குங்க!

பொம்பள கொள்ளிப் போடற பழக்கம் கெடையாதும்மா!

அது அந்தக் காலம்!
அம்மா உள்ளப் போ! ஊர்க் கூடி வேடிக்கைப் பார்க்கிறதும்மா!கோபால் கதறுகிறார்.

இந்த ராட்சசனைப் பெத்தவடா நான்! இவனுக்குக் கொள்ளிபோட நான் யார் கிட்டயும் அனுமதி கேட்கத் தேவையில்லை.

இந்த ஜென்மத்துக்குக் கொள்ளி போட்ட பாவம் ஏம் பேரனுக்குப் போக வேண்டாம். எந்தக் கையாலச் சீராட்டி, சோத்தப்போட்டு வளத்தேனோ அதே கையாலக் கொள்ளியும் போட்டுடறேண்டா!

எடுங்க! கம்பீரக் குரல் கொடுத்து, அம்மா கொள்ளிச்சட்டியுடன் அடியெடுத்துவைக்கப், பாடை எழுந்தது!

ஆலயத்தில் பிறந்த அறிவியல் புரட்சி!

ஆலயத்தில் பிறந்த அறிவியல் புரட்சி!

ஒரு கருத்தின் மீது வாதம் என்று வந்துவிட்டால், அதனது அறிவியல் பக்கத்தை ஒருவரும், அதன்  ஆன்மீகப் பக்கத்தை இன்னொருவருமாக அலசுவது வழக்கம். வகுப்பில் மாணாக்கர்களாகட்டும், வீட்டில் பிள்ளைகளாகட்டும், பெரியவர்கள் எதையாவது சொன்னால், "சயண்டிஃபிக்கா ப்ரூஃப் பண்ணு" என்றே சவால் விடுவார்க்ள்!

விஞ்ஞானம் எங்கு நின்றுவிடுகிறதோ அங்கிருந்து தொடர்வது மெய்ஞானம் என்றே பாமரர்களின் கவியான கண்ணதாசனும் சொன்னார்.

ஆக, அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரணியில் செயல்படுவதான நிலைமையே நிலவி வந்ததானதொரு காலக் கட்டத்தில்,  அறிவியல் பலம் தந்து ஆன்மீகத்தையும்,  ஆன்மீக உரமிட்டு அறிவியலையும் ஒருசேர வளர்த்து, மாபெரும் புரட்சியை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் நிகழ்த்திப் போந்தவர் குன்றக்குடி அடிகளார்.

இவர் செய்து காட்டியிருக்கிற புரட்சி இன்று குன்றக்குடி எனும் கிராமத்தை, இந்திய தேசிய வரைபடத்திலே, முக்கியப் புள்ளியாகக் காட்ட வைத்திருக்கிறது. அரசியல் ஜாம்பவான்களாகட்டும், அறிவியல் ஜாம்பவான்களாகட்டும், குன்றக்குடிக்கு வந்துபோவதைப் பெருமையாகவும், கடமையாகவும் கருதினர் என்றால் அவர்கள், அடிகளாரால் - அவரது சீரிய பணியால் எத்தனைக் கவரப்பட்டிருப்பார்கள் என்பது விளங்கும்.

சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல் என்கிற நான்கு நிலைகளிலும், அவர் குறைகாண முடியாத, முற்போக்குத் தீவிரவாதியாக இருந்தார். எளிமை - தூய்மை - கடமையுணர்வு -  நம்பகத்தலைமை ஆகிய நான்கு குணங்களிலும் குன்றம் போல உயர்ந்து நின்றார்!

1984ல், தேசிய அளவிலான, அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களின் மாநாடு   காரைக்குடியிலே கூடப்படுகிறது; மாநாட்டு மேடையிலே புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானிகள், நாட்டின் நிதியமைச்சர், தமிழக அமைச்சர்கள், அரசாங்கப் பெரும்புள்ளிகள் வீற்றிருக்கிறார்கள், இவர்களுக்கு  நடுவிலே கம்பீரமாகக் காவியுடையில் அடிகளார்! அவரது முறை வந்தபோது, அவர் ஆற்றிய ஆங்கில உரை, நாமொழி வித்தகர் என்று பட்டம் பெற்றவரான நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பேச்சை ஒன்றுமில்லையென்றாக்கி விட்டது. அறிவியலும், ஆன்மீகமும் எவ்வாறு ஒன்றை ஒன்று இட்டு நிரப்புவனவாக இருக்கின்றன - நாணயத்தின் - இரு பக்கங்கள் போல - ஒரு வித்தின் இரு வித்திலைகள் போல - முகத்தின் இரு கண்கள் போல என எடுத்துக்காட்டுக்களுடன் அவர் விளக்கிய பாங்கை, இருக்கையின் நுனிக்கு வந்து - உள்வாங்கிகொண்டனர் மாணாக்கர்கள்; தேசக்கட்டமைப்பிலே ஆன்மீகத்திற்கும், அறிவியலுக்கும் இருக்கின்ற தனித்தனிப் பணிகளையும், கூட்டுப் பணிகளையும், அவர் கூறுபோட்டு விளக்கியபோது, அமைச்சர், எழுந்து நின்று கைதட்டத் துவங்க, மேடையிலிருந்த அனைத்துப் பிரமுகர்களும் எழ, கீழே அரங்கத்தில் வீற்றிருந்த மாணாக்கர்களும், இன்னபிறரும், எழுந்து நிற்க, அந்த அரங்கத்தில், பாரதமே எழுந்து நின்று புதியதொரு பயணத்தைத் தொடங்கப் புறப்பட்டது புரிந்தது.

தேசத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்திருந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு அன்று ஏற்பட்ட  உணர்வு நிலையை மாணவியாக அம்மாநாட்டிற்குச் சென்றிருந்த நானறிவேன்! அன்றொரு நாள், காந்தியைக் கண்டு எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்களாம் உலகத் தலைவர்கள். அந்தக் காட்சி என் மனத்திரையில் ஓடியது.

சுதேசி என்கிற காந்தியக் கொள்கையை, குன்றக்குடி திட்டத்தில் இணைத்த நவீன காந்தியாகவே அடிகளார் விளங்கினார். சுதேசி அறிவியல் இயக்கம் என்கிற எளிமையான சித்தாந்தம் கொண்ட வலிமையானதொரு இயக்கத்தை நிறுவியவர் அடிகளார். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது - தேசத்தை கிராமங்களிலே  வலுப்படுத்தவேண்டும் என்கிற காந்தியத் தீவிரம் அடிகளாரது அசைவுகள் ஒவ்வொன்றிலும் வெளிப்பட்டது!

முதல் நாள் மாநாட்டின் போது, பிற்பகல் குன்றக்குடியைச் சுற்றிப்பார்ப்பது, அங்கு நடக்கும் அறிவியல் பணிகள், தொழிற்கூடங்கள் பற்றி அறிந்து கொள்வது - இரவு குன்றக்குடி மடத்தில், அடிகளாரைச் சந்திப்பது, அனைவருக்கும் மடத்தில் உணவு என்று ஏற்படாகியிருந்தது. மற்ற சாமியார்களைப் போல அடிகளார் ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டிருப்பார், ஒவ்வொருவராகச் சென்று வீழ்ந்து வணங்க அடிகளார் ஆசி வழங்குவார் என்றே பல மாணாக்கர்களும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இதிலே, கிறித்துவ, முகமதிய மாணாக்கர்கள், மடத்திற்குள் நுழையமாட்டோம் என முடிவு செய்து, வெளியே நிற்கலாயினர்.

உள்ளே மாணாக்கர்கள், தரையின் மீது அமர்ந்திருக்கிறார்கள்; அடிகளார், தன் கையில் இருந்த மாணாக்கர்களின் பட்டியலிலிருந்து, முகமதிய, கிறித்துவ மாணாக்கர்களின் பெயரை வாசித்து அவர்களைத் தன்னிடம் வருமாறு கூப்பிடுகிறார் - "அவர்கள் உள்ளே இல்லை - வெளியே" என்று பதில் வருகிறது. 

"மதம் அல்லவா வெளியே நிற்கவேண்டும்! மாணாக்கர்கள் அல்லவே!" என அடிகளார் தனக்கே உரித்தான அழுத்தத்தில் கூற, கைத்தட்டல் குன்றத்தின் பாறைகளில் எதிரொலித்து விண்ணைப் பிளந்தது.

"வெளியே நிற்கும் மாணவர்களுக்கு உள்ளே வரும் உரிமையுண்டு; அந்த உரிமையை நீங்கள் மறுக்கிறீர்களா?" என அடிகளார் கேட்கிறார் - "இல்லையே" என உள்ளிருக்கும் அனைவரும் ஒட்டுமொத்தமாய்க் குரல் கொடுக்கிறார்கள்."

வெளியே நின்றவர்கள் உள்ளிருப்பவர்களொடு ஒன்றாய் இணைகிறார்கள். காந்தியடிகளின் மதபோதனை சித்தாந்தத்தைப் பிசகின்றி நடத்திக்காட்டிய ஒரு மாவீரனை அன்று மடாதிபதியின் உருவத்திலே காணமுடிந்தது. கத்தியின்றி - இரத்தமின்றி சத்தியப்போர் வென்ற அஹிம்சாவாதியைக் கண்டு தமிழ்த் தெய்வமாம் குன்றக்குடிக் குமரனும் குளிர்ந்திருப்பான்  என்பதில் ஐயமில்லை!

ஆணோ பெண்ணோ எந்த ஒரு மனிதருக்கும், மூன்று விஷயங்கள் அடிப்படையாகும்: மொழி பக்தி; தேசபக்தி, தெய்வ பக்தி. இவை மூன்றையும், தனது வாழ்வில் குன்றாதுக் கடைபிடித்து,  ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து போயிருப்பவர் அடிகளார். இதிலே முன்னுதாரணம் என்பது என்னவென்றால் - மிகையினும் குறையினும் தீங்கு செய்யும் மருந்தைப்போன்றது மதம் என்கிறதான உறுதியான விழிப்புணர்வுடன், அவர் இயங்கிய - பிறரை அவர் இயக்கிய - பாங்கு  சரித்திரம் முன்னெப்போதும் கண்டிராத ஒன்று.

அன்று - மடத்தில் அடிகளார் - தனது பேச்சுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை; குன்றக்குடி திட்டம் மற்றும் சுதேசி அறிவியல் இயக்கம் ஆகியனபற்றி சுருக்கமாகப் பேசிவிட்டு, மாணாக்கர்களுக்கு ஒரு போட்டி அறிவித்தார். "அறிவியலும் ஆன்மீகமும் என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில பேசவேண்டும்; பேச்சுக்கான கால அளவு ஐந்து நிமிடம்."

பேச்சுப் போட்டிக்குப் பெயர் கொடுத்தவர்கள் மூவர் மட்டுமே; இவர்கள் தமது பேச்சுகாகத் தம்மைத் தயார் செய்து கொள்ளும்போது மற்ற மாணாக்கர்களைக்  குழுக்களாகப் பிரித்து, குன்றக்குடி திட்டத்தில், வேறு என்னென்ன செய்யலாம் - சுதேசி அறிவியல் இயக்கத்தை, தேசம் முழுதும் பரப்ப என்ன செய்யவேண்டும் என்று கருத்துக்கள் திரட்டவைத்தார்.

அவர் அன்று மாணாக்கர்களை ஊக்குவித்த விதம், குழுக்களுக்கு இடையே சென்று அவர்கள் செயலாற்றும் விதத்தைப் பார்வையிட்டு, நெறிப்படுத்தியவிதம், ஆகியன போதனா முறைகளில் தேர்ச்சிபெற்ற, ஒரு சிறந்த ஆசிரியராக அவர் விளங்குவதைக் காட்டியது.

பேச்சுப் போட்டிக்குப் பெயர் தந்திருந்த மூவரில் நானும் ஒருவர். குலுக்கல் முறையில் முதலில் பேச அழைக்கப்பட்டதும் நான் தான். தமிழக மாணவி நான்; வேறு இருவரும் வடமாநிலைங்களைச் சேர்ந்தவர்கள்; ஒவ்வொருவர் பேசுவதையும் உன்னிப்பாகக் கவனித்து, குறிப்பெடுத்துக் கொண்டு, இறுதியாக அவர் தொகுப்புரை வழங்கினார். மூன்று மாணாக்கர்களும் தெரிவித்த முத்தாய்ப்பான கருத்துக்களை தாராளமாகப் பாராட்டி, முரண்பாடான கருத்துக்களுக்கு அதிக அழுத்தம் காட்டாமல் விட்டுச்சென்றது, அவருக்கிருந்த உளவியல்  தெளிவையும், நிர்வாகச் சூட்சமத்தையும் காட்டியது.

என்னைப் பற்றிப் பேசும்போது வானொலிப் பெண் எனக் குறிப்பிட்டு, சென்னையில் நல்ல தமிழ் பேசும் அறிவியல் மாணவி என்றார். நான் வியந்துபோனேன்! ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு, சிவனே என்று மடத்துடன் ஐக்கியம் ஆகிவிடாமல், நாட்டு நடப்பை ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து கவனிக்கும் அவரது  அடிப்படை தர்மம் கண்டு நெகிழ்ந்தேன்; காலை நிகழ்ச்சியாக, வானொலியில், நான் அறிவியல் சபை நடத்திவந்ததை, அவர் குறிப்பிடுவது புரிந்தது;  அது மட்டுமல்லாது அகில இந்திய வானொலியின் ஒலிப்பதிவு அரங்கிலே அவரை ஒருமுறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றியும் சொன்னார்; என்னைப்பற்றி அவர் அறிந்து வைத்திருந்த நல்ல சேதிகளையும் அவர் நினைவு கூர்ந்தார் - நான் எஸ்ஐஇடி கல்லூரியில் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியது - நிறைய போட்டிகளில் - படிப்பில் பரிசுகள் வாங்கிக் குவித்திருப்பது என  அவரது பட்டியலில் பலவற்றை அவர் குறிப்பிட்டார் - அவரது  நினைவாற்றலையும், வயதில் சிறியவர்களையும் குறையாது பாராட்ட வேண்டும் என்கிற அவரது உயர்ந்த சிந்தனையையும் கண்டு வியந்து போனேன்.

சுதேசி அறிவியல் இயக்கத்தின் வெளியீடான அறிக அறிவியலில் என்னையும் ஆசிரியக்குழு உறுப்பினராக்கி - பொறுப்பளித்து, என்னுள் எழுத்துத் திறன் வளர அவர் ஊக்குவித்து வழி நடாத்திச்சென்ற தலைமையை என்னால் மறக்க முடியாது. குறிப்பாக ஒரு நிகழ்ச்சி, அறிக அறிவியலில் என்னை ஆசிரியக்குழு உறுப்பினராக்கிய புதுசு; காரைக்குடி மையமின்வேதியியல் ஆய்வகத்திற்கு அலுவலக அலுவலாகச் சென்றிருக்கிறேன். அடிகளாரை ஒரு வினாடி பார்த்தேன் அதுவும் எப்படி என்றால் அவர் விருந்தினர் இல்லத்திலிருந்து காரில் வெளியேறுகிறார்; நான் அப்போது விருந்தினர் இல்லத்திலிருந்து வெளியே வருகிறேன் நடந்து ஆய்வகம் செல்வதற்காக.

அன்று மதியம் கேண்டீனில் உணவுக்காகச் செல்லுகிறேன்; மையமின்வேதியியல் ஆய்வகத்தின் அறிவியலாளரான சுப்பையா அவர்கள்
என்பெயரிட்ட உறையைத் தருகிறார். முதிர்ச்சியான சிறு எழுத்துக்களில் அடிகளாரின் கையாலேயே என் பெயர் எழுதப்பட்டிருந்தது. அன்றே தனக்கு
சுற்றுச்சூழல் தொடர்பான அறிவியல் கட்டுரை எழுதி ஒப்படைக்கவேண்டும் எனப் பணித்திருந்தார். நானும் மிகுந்த பொறுப்புடனும், கவனத்துடனும், கட்டுரை எழுதி முடித்தேன். விருந்தினர் இல்லத்தில் அடிகளாரின் உதவியாளரிடம் தந்து அடிகளாரிடம் சேர்த்துவிடுமாறு சொல்லிவிட்டு, மையமின்வேதியியல் ஆய்வகத்தின் வெளியரங்கிலே ஏற்பாடாகியிருந்த ஒரு பட்டிமண்டப நிகழ்சிக்குச் சென்று விட்டேன்.  

கட்டுரை சமர்ப்பித்து ஒரு அரைமணி  நேரம் கூட ஆகியிருக்காது - தன்னை வந்து சந்திக்குமாறு, ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார் அடிகளார். விரைந்தேன். எனது கட்டுரையில், இருந்த வடமொழி மற்றும் ஆங்கிலப் பதங்களைக் கோடிட்டுக்காட்டி, அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களால் அவற்றை இடப்பெயர்ச்சி செய்யுமாறு சொன்னார். நான் எடுத்துக் கொள்ளக் கூடியு கால அளவையும் கூறினார். என் மூளையின், மூலை முடுக்குகளில்லாம் சுரீரென இரத்தம் ஓடியது, நரம்புகள் முடுக்கப்பட்டன!

முன்பு தெரியாத தமிழ்ச் சொற்களெல்லாம் கண்ணுக்கு முன்னே சாரியாய் வந்தன. உனக்கு நான் பயன்படட்டுமா? என்று என்னை ஒவ்வொரு சொல்லும் வினாவியது. தமிழ்ச் சொற்களை இட்டதோடு, கட்டுரையின் பொருண்மையையும், தொனியையும் கூட மாற்றினேன்! அடிகளாரிடம் சம்ர்ப்பித்தேன். கட்டுரையைப் படித்துவிட்டு அவர் என்னைப் பார்த்த அந்தப்பெருமிதப் பார்வை, "உன்னால் முடியும் பெண்ணே! பெண்ணே!" என உத்வேகம் தந்தது. அன்று அடிகளார் எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை நான் இறப்பினும் மறவேன்! நெஞ்சகம் நைந்து, நினைவில் நாள்தொறும் இந்நிகழ்ச்சியை நான் மீண்டும் மீண்டும் திரையோட்டிப் பார்க்கிறேன்.

பின்னொரு நாள், அவரைச் சென்னையில் சந்திக்க நேர்ந்தபோது, தமிழகத்தின், தலை நகரான சென்னையிலே சுதேசி அறிவியல் இயக்கத்திற்கு ஒரு அலுவலகம் வேண்டும், தகவல் தொடர்பு, ஊடகத் தொடர்பு, மற்றும் இயக்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு, சென்னை அலுவலகம் ஒரு மையமாகச் செயல்பட முடியும் என்று கூறினேன். அமைதியாகக் கேட்டார். பதிலேதும் சொல்லவில்லை; முகத்தில் ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமும் தெரியவில்லை; அவரைச் சந்திக்கப் பலபேர் காத்துக்கொண்டிருந்தார்கள்; நான் சட்டென விடைபெற்று வெளியே வந்தேன். மனதை ஏதோ நெருடியது- கிராமங்களை வலுப்படுத்த நினப்பவரிடம், நகரத்தின் வசதிகள் பற்றி அதிகப் பிரசிங்கியாகப் பேசிவிட்டேனோ என ஓயாமல் சிந்தித்தேன்.

மூன்றாவது நாள், குன்றக்குடியிலிருந்து, அடிகளாரிடமிருந்து கடிதம் வந்தது. சென்னையில் சுதேசி அறிவியல் இயக்கத்திற்கு ஒரு அலுவலகம் வேண்டும் என்கிற உங்களது கருத்து எமக்கு ஏற்புடையதே! இம்மையம் நிறுவப்பெற்றால், அதன் முழு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று நடத்தி இயக்கத்தை வலுப்படுத்தத் தயாரா? என்று சவாலானதொரு வினா எழுப்பியிருந்தார்!  - ஆட்சிமைத் திறனிலே, ஒரு சந்நியாசிக்கு இத்தனைப் பாண்டித்தியமா எனும்படியாக, அவரது தலைமைப் பண்பும் எழுத்தும் இருந்தன. ஒருவரிடத்திலே மறைந்திருக்கக் கூடிய திறமைகளைச் சற்றும் சேதப்படாமல் வெளிக்கொண்டுவருவதிலே அவருக்கு நிகர் அவரே! இதிலே அவர் வயதையோ ஆணா பெண்ணா என்பதையோ கருத்தில் கொள்ளாத விரிந்த கண்ணோட்டத்துடன் செயலாற்றினார் என்பது நாம் பின்பற்றவேண்டியதொரு கொள்கையாகும்.

இதற்கு இன்னுமொரு சான்று, சைவ சித்தாந்தம் தொடர்பானதொரு மாநாட்டை, அடிகளார் கூட்டியிருந்தார். அந்த மாநாட்டில் நான் ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்ற வேண்டும், என அவரிடமிருந்து கட்டளை வந்தது. மாநாட்டில் பங்கேற்போரின் உரைகள் தொகுக்கப் பட்டு ஒரு நூலாக வெளியிடப்படுவதாகவும் ஏற்பாடு. அன்றைய கால நிலையில், தமிழ் - சமயம் என்கிற இரண்டிலும் ஜாம்பவான்களாகக் கொடிகட்டிப் பறந்தவர்களுக்கு இணையாக, மிகவும் இளைய பெண்ணான என்னையும் மேடையேற்றிப் பேச வைத்து, "அறிவியல் காட்டும் இறையருள்"  என்ற தலைப்பிட்ட எனது கட்டுரையை, நூலில் வெளியிட்டு என்னைப் பெருமைப்படவைத்தது அவர் செய்த மாபெரும் உதவி என்பேன். நீதியரசரான தமிழ்ப் பெரியவர், எம் எம் இஸ்மாயில் அவர்களும், பலகலைக் கழகத் துணைவேந்தர் வசெ குழந்தைசாமி அவர்களும் எனது உரையையும் கட்டுரையையும் மனம் திறந்து பாராட்டினார்கள்! இத்தகையதொரு வாய்ப்பை எனக்கு அளித்தவர் குன்றக்குடி அடிகளார் அவர்களே!

அடிகளாரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொன்று, கடிதத்தை எவ்வாறு முடிப்பதென்பது. "எல்லா நன்மைகளும் சிறக்க இறையருளைச் சிந்திக்கிறேன்" என்பதாக அவரது கடிதங்களை முடிப்பார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது அனுமதியுடன், அதே வாசகத்தை நானும் எனது கடிதங்களில், மின்னஞ்சலில் இன்றளவும் பயன் படுத்திவருகின்றேன்!

அன்று அடிகளார் என்னுள் வளர்த்த தமிழ்த் தீயும், அறிவியல் தீயும் என்னுள் குன்றாமல் கொழுந்துவிட்டுப் பிரகாசிக்கின்றன. அவருக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்துவது எனப் புரியவில்லை.

அமெரிக்காவில் வசித்துவரும் நிலையில், அடிகளாரைப் பற்றிய தரவுகளை இங்குள்ள தமிழ்க்குலக் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லலாம் என நினைத்து, வலைதளத்தில் தேடினால்,  மிகவும் குறைவான அளவே தகவல் கிடைக்கிறது. விக்கிபீடியாவில் அடிகளாரைப்பற்றிய தொகுப்பு இல்லை.
மிக்கேல் நோயல் அடிகளாரைப் பற்றி இரு நூல்கள் எழுதியிருக்கிறார் அவற்றின் மின்புத்தகங்களும் வலைதளத்தில் இல்லை. சென்ற வாரம், குன்றக்குடி மடத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். இந்நிலைமையை இப்போது மடாதிபதியாய் விளங்கும், இளைய அடிகளாரிடம் நேரடியாகத் தொலை பேசி வழியாகப் பேசியிருக்கிறேன்.

மடத்தின், திட்டக்குழு அதிகாரி, வெளியூர் சென்றிருப்பதாகவும், அவர் பணிக்குத் திரும்பியவுடன் இதனைக் கவனிக்குமாறு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இப்பணியில் இணைந்து செயல்பட விருப்பமிருப்பவர்கள் எனக்குத் தெரிவித்தால் கூட்டு முயற்சியாக, அடிகளார் பற்றிய விவரங்கள், உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்லாது , பிறருக்கும் கிடைக்கும்படி செய்யலாம். ஏனெனில், அடிகளாரின் பணிகள் உலகெங்கிலும் உள்ள பல்கலைக் கழகங்களிலே ஆய்வுப் படிப்பிற்குப் பொருத்தமானவை. காந்தி, தெவே போன்ற கல்வியாளர்களோடு பல வகைகளில் ஒப்பீடு செய்யும் வாய்ப்புக்களை அடிகளாரது வரலாறு காட்டுகிறது.

இந்தக் கல்விப் பணியில் உங்களாலான உதவிகளை வேண்டுகிறேன்.

தெரியுமா உங்களுக்கு ?

கேள்வி: திருவள்ளுவரின் வேறு பெயர்கள் யாவை ?


பதில்: வள்ளுவர், தெய்வப் புலவர், பொய்யாமொழிப் புலவர், வான்புகழ் வள்ளுவர்

Sunday, January 9, 2011

காணாமல் போன கணவன்

காணாமல் போன கணவன்

ஏர்ப்போர்ட்டில் இறங்கி செக் அவுட் முடித்து வெளியே வந்தாள்!
அவன் அவளுக்காகக் காத்திருப்பான் என்பது அவளுக்குத் தெரியும்.
வருமாறு சொன்னவள் அவள் தானே!
அவன் கண்டிப்பாய் வந்திருப்பான்!! காரியவாதி!!

அமெரிக்க பேங்க்கில் இருக்கும் பணம் அவனுக்குத் தேவை! தொடர்ந்து - கெஞ்சி- கெஞ்சி - இமெயில் அனுப்பியிருந்தான்! கார்ட் வேண்டுமென்று -
அவனது டெபிட் கார்ட் இவளிடம் இருந்தது! ஏர்ப்போர்ட்டில், நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளுமாறு இமெயில் அனுப்பியிருந்தாள்!

அவன் சும்மா வரமாட்டான். பெண்டாட்டியைக் கூட்டிகொண்டு வந்திருப்பான் என்றும் அவளுக்குத்தெரியும்.

எனவே தான் குழந்தையைப் பாலூட்டி, நன்றாகத் தூங்கவைத்த பின்னரே ஏர்ப்போர்ட்டிலிருந்து வெளிவந்தாள்!

அந்த முகத்தை, இந்தக் குழந்தை பார்த்துவிடக் கூடாது என்பதிலே அவள் உறுதியாக இருந்தாள்.

எதிர்ப்பார்த்தது போலவே, ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்தான்.   
திடீரெனக் கல்யாணம் நடந்தது; அழைப்பு அனுப்பமுடியவில்லை என்றான். அவன் பெண்டாட்டி, முகத்திலிருந்து கால் வரை ஏதேதோ மாட்டிக்கொண்டிருந்தாள். ஏர்ப்போர்ட் வருவதெற்கென்றே, அவசர அவசரமாக ஃபேஸியல் செய்து கொண்டு வந்திருப்பது தெரிந்தது.
பொருத்தமிலாத, உயர்விலை சுடிதார் அணிந்திருந்தாள். செயற்கையாகச் சிரித்தாள்.வயிறு மேடிட்டு, கர்ப்பம் துவங்கியிருப்பதைக் காட்டியது. இதுவும் கூட அவள் எதிர்ப்பார்த்தது தான்.


உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? என்று அவனைக் கேட்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு!

டாக்சி கூப்பிடட்டுமா? என்றான். வேண்டாமெனத் தலையசைத்தாள்!!
டெபிட் கார்டை நீட்டினாள்! அதற்கெனவே காத்துக் கொண்டிருந்தவன் போல படக்க்கென வாங்கிக் கொண்டான்.

எங்கே போவணும்? என்றான்.
நீங்கள் கிளம்பலாம் என்றாள்.
அவர்கள் நின்றார்கள்.  இவள் கிளம்பினாள்!!

கிளம்பும் முன் அவன் முகத்தை அழுத்தம் திருத்தமாக ஆழ்ந்து பார்த்தாள்.
தூவெனத் துப்பவேண்டும் என நா குழைந்தது - கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்!

தள்ளு வண்டியில் குழந்தை இலேசாக அசைந்தது. படுக்கென வண்டியைத் தள்ளி வேகமாய்க் கடந்து  போனாள்.

அவன் இவளைத் தொடர்வான்; குழந்தை அவனைப் பார்த்து விடக் கூடாது! வண்டியை இன்னமும் வேகமாகத் தள்ளினாள்.

அம்மா! ஆட்டோ வேணுமாமா? வயதான ஆட்டோக் காரர்.
ஏறினாள்! அவனும் அவனது மனைவியும், பிளாட்ஃபார்மில் நின்று இவளது ஆட்டோவையே கவனிப்பது கண்ணாடியில் நன்றாகத்தெரிந்தது!

"முதுகெலும்பில்லா மனிதர்கள்" அவளது வாய் முணுத்தது. என்னம்மா சொன்னீங்க? எங்கம்மா போகணும்? என்றார் ஆட்டோக் காரர்.

ட்ரைடெண்ட் என்றாள். ஓட்டலில் தங்கிக் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, என்ன செய்வது என்பது குறித்து திட்டமிடவேண்டும் என்பது அவளது யோசனை!

பழைய நண்பி, ஜெயாவை போனில் கூப்பிட்டாள்!
விஷயத்தைச் சொன்னாள்!

பின்னாடிக் குழந்தைப் பெரியவனாகி அப்பாவைக் கேட்பானே அப்போது என்ன சொல்வாய்? என்றாள்

"அமெரிக்காவில் காணாமல் போய்விட்டார் என்பேன்"

 அது பொய் இல்லையா?

அங்கு என்னைக் கோவிலில் தாலி கட்டித் திருமணம் செய்து, குழந்தை பெற்று, இதோ வந்துவிடுகிறேன் என்று இந்தியா வந்தது - அங்கு வேறு மணம் புரிந்து கொண்டது- இவையெல்லம் நியாயம்? நான் உண்மை சொன்னால் -- அதைப் பொய் என்கிறாயே!

அவன் சூழல் எதுவோ?
அவன் தரப்பிலும் நியாயம் இருக்கலாம் அல்லவா?

இவ்வாறு பேசிப்பேசித்தான் தவறுகளை நிலைப் படுத்துகிறோம்!
படித்த, வயதுவந்த ஒரு ஆணும் பெண்ணும், ஒப்புக்கொண்டு, ஏற்படுத்திய உறவை ஆண், தனது சுயவசதிகளுக்காக, விலக்கிக்கொண்டுவிடலாம்!
கணவன் - தந்தையெனும் இருபெரும் பொறுப்புக்களைக் கைவிடலாம்!
ஆனால் பாதிக்கப்பட்டப் பெண், குழந்தையெனும் பாரத்தைச் சுமந்து கொண்டு, இதைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்? இதுதானே நீ
சொல்லுவது?

படித்திருக்கிறாய்! சட்டப்படி நடவடிக்கை எடு!
நன்றாய் சொன்னாய்!
படித்திருப்பதால் தான் நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!

பிறகு வேறு என்னதான் செய்யப் போகிறாய்?

சட்டத்தை நானே ஆக்கித் தீர்ப்பையும் அளித்துக் கொள்ளுகிறேன்!
என் வாழ்வில் கணவனாக வந்தவன் காணாமல் போனானே! அவன் காணாமல் போனவனாகவே இருக்கட்டும்!

அதே பல்லவியா?

ஜெயா! பொய்யே உருவான, பொறுப்பில்லாத ஒரு மனிதனைக் காட்டி, "இவன் தான் உன் தந்தை என்று என்குழந்தையை அசிங்கப் படுத்த விரும்பவில்லை."

அப்ப ஆம்பளைத் துணையில்லாமயே வாழ்ந்துடுவியா?

நான் என் கணவனுக்காக இப்போது ஆசைப்படவில்லை! ஆத்திரப்படவில்லை!!  நான் இப்போது வேகப்பட்டால் அது என் குழந்தையைப் பாதிக்கும்!

எனக்குத்தெரிஞ்ச நல்ல வக்கீல் இருக்காங்க, வா பாக்கலாம்!

என் கணவன், என்னையும், குழந்தையையும் புறக்கணித்தான், என்பதற்காக, நான் கோர்ட் கேஸ் என்று நாயாய் அலைய விரும்பவில்லை, மலிவானப் பத்திரிகைகளில் எனது சுயமதிப்பை இழக்கவில்லை!!
மாறாக என் குழந்தையின் மீது முழு கவனத்தையும் செலுத்தி வளர்க்கப் போகிறேன்!

டெபிட் கார்ட் உன்னிடம் இருந்தது; பின்னும் உனக்குத் தெரியும் என்கிறாய்! மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அவனைப் பழிவாங்கியிருக்காலாமே! ஏன் கொண்டுவந்து கொடுத்தாய்!

அந்த எச்சிற்காசும், பாவப்பட்டப் பணமும் எனக்கும் என் பிள்ளைக்கும் தேவையில்லை!  அவனே எனக்குப் பணம் தந்துவிலகியிருந்தாலும் கூட நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன். அது மனைவி எனும் - தாய் எனும் தகுதிக்கு இழிவு. அவனது காசுக்காக அவனுக்கு நான் மனைவியாகவில்லை.
அவனது காசை அவனிடமே வீசிவிடவேண்டும் எனவே நினைத்தேன்!


அப்ப, அவன் செய்த தவறுக்கு என்ன தண்டனை?

தவறைச் செய்துவிட்டு, வெகுநாள் எவரும் நன்றாக வாழமுடியாது என்கிற இயற்கைச் சட்டத்தை மதிக்கிறேன்!

அப்ப இப்படியே இருந்திடப் போறயா?
என் குழந்தை பெரியவனாவான்!
நல்ல தந்தை அவனுக்கு வேண்டுமெனில், அவனே எனக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமையை  வழங்குவான்.

இப்படிபேச உனக்கு வெட்கமாயில்லை?

உடம்பு கூசாமல் ஒரு ஆணால் மறுமணம் செய்துகொள்ள முடிகிறபோது, ஒரு பெண்ணாலும் அதனைச் செய்யமுடியும்! இந்த பதிலை உனக்கு ஒரு நாள் என் பிள்ளை கூறுவான்! நான் அந்தப்பொறுப்பை அவனிடமே விட்டுவிடுகிறேன்!

நடக்கின்றதாகப் பேசு!
காலம் மாறும்!
நான் மனைவியல்ல!! தாய்
பார்க்கலாம் ஜெயா!