வடிவுக்கரசி: நடித்தலில்லா நடக்கை
எனக்கும் வடிவுக்கரசிக்கும் என்ன பூர்வஜெனம் பந்தமோ தெரியாது. ஒரு கால கட்டத்தில் அவரும் நானும் எப்படியேனும் சந்த்தித்து விடுவோம். குசலம் விசாரித்துப் பேசுவோம். விடைபெறுவோம். ஆனால் எந்த ஒரு சந்திப்பும் திட்டமிடப்படாதது. எதேச்சையாக மட்டுமே நிகழ்ந்தது.
எனது பள்ளிப் பருவத்தில் இராணிப் பேட்டையில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். வாலாஜா அறிஞர் அண்ணா பெண்கள் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கிறார். அந்த சமயம் நான் எனது பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.
பக்கத்து வீட்டில் ஏகப்பட்ட கலாட்டாவாக இருந்தது. எக்கச்சக்கமான வால்யூமில் ஆங்கிலப் பாடல், அதற்கேற்றார்ப்போல இளம்பெண்கள் அரைகுறை உடையில் நாட்டியம் எனத் தெருவே அதிர்ந்த கதையாய் அங்கு ஒரு சத்தம்.
என் பாட்டி வீட்டு ஜன்னல் வழியாக அடுத்தவீட்டை ஆர்வத்துடன் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். பாட்டி ஒரு அதட்டல் போட்டார். "அந்த அறுதல்களைப் பார்த்தைய்னா, ஒனக்கும் மரை கழண்டு, கிறுக்குப் பிடிக்கும். ஜன்னலை மூடு. ஸ்ரீரங்கத்து ஒலக்கை மாதிரி ஒருத்தி இருக்காப்பாரு அவ தான் இதுகளுக்கு லீடர். பட்டண த்துலேந்து வந்து அவ இங்க பண்ற ரவுசு தாங்கல"
நான் ஜன்னலை மூடும் முன் கடைசியாக அந்தப்பெண்ணைப் பார்த்தேன். நெடு நெடு வென வாட்டம் சாட்டமான பெண். ஸ்ரீரங்கத்து உலக்கையை நான் பார்த்ததில்லை. பாட்டி சாடிய பெண் அவள் தான் என்று மட்டும் புரிந்தது. உயரத்திற்கேற்ற பருமனா அல்லது பருமனுக்கேற்ற உயரமா என்று
புரியவில்லை. கருப்பு நிறம். அச்சசல் ஆண் உருவம். டி ஷர்ட்டில் பிதுங்கிய எடுப்பான மார்பகங்கள் மட்டுமே பெண் என்று சொல்லின.
ஜன்னலை மூடினாலும் அவள் உருவம் மட்டும் மனதிலேயே நின்றது.
அடுத்த நாள் கோயில் சென்று திரும்பும்போது வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அவள் வாசலை நான் தாண்டும்போது என்னை அழைத்தாள். அறிமுகம் செய்து கொண்டாள். என்னைப் பற்றி அறிந்துகொண்டாள்.
சென்னையில் எனது வீட்டுக்கு அருகில் அவளது தாத்தாவின் பங்களா இருப்பதைக் கூறினாள். எனது முகவரியை வாங்கி கொண்டாள். வீட்டிற்குள் நுழையும்போது ஒரு குற்ற உணர்வாக இருந்தது. பாட்டியிடம் அனுமதி வாங்காமல் அப்பெண்ணிடம் பேசியிருக்கக் கூடாது என்று தோன்றியது. . அதுவும் முகவரி தந்தது பாட்டிக்குத் தெரிந்தால் வானத்துக்கும் பூமிக்கும் அல்லவா குதிப்பார் பாட்டி! நல்ல காலம் பாட்டி அடுக்களையில் பிசியாக இருந்தாள். பாட்டியிடம் சொல்லிவிடவேண்டும் என்று நாக்கு துடித்தது. ஆனால் அப்பெண்ணை பாட்டி வைவதைக் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை.
வாலாஜா கல்லூரியில் ஆண்டுவிழா எனது உறவுப்பெண் ஒருத்தி என்னை அழைத்துச் சென்றாள். அங்கு வடிவைப் பார்த்தேன். மேக் அப் சகிதம் தனது குழுவுடன் தயாராகிக் கொடிருந்தார். ஒரு ஆங்கில நாடகம் அவர் இயக்கத்தில் .அரங்கேறப் போகிறது.
என்னைப் பார்த்த மட்டில் ஓடிவந்து அழைத்துச் சென்றார். "இதப்பாரு உண்மையைச் சொல்லட்டுமா? நானே ஒன்ன இன்வைட் பண்ணனுன்னு நெனச்சேன். ஒங்க பாட்டியப்பாத்தா எனக்கு பயம். சாரி!!
சரி! எனக்கு ஒண்ணு சொல்லு!
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தெறமை இருக்கும். எனக்கு டிராமா, பாட்டு --- நீ என்ன செய்வ?
நானா?
நல்லா பேசுவேன்! எந்த தலைப்பு கொடுத்தாலும் சமாளிப்பேன்!
இன்னொரு பெண் ஓடி வருகிறாள். ஏய் வடிவு அந்த தலப்பா பொயட் - யாரு அவரு இப்ப இருந்தா நம்பளப் பாத்து என்ன சொல்லுவார்னு பேசச்சொல்லு.
பேசுகிறேன் ---
"ஆணைப் போல் உடையணிந்து ஆணுக்குப் பெண் நிகரெனக் காட்டி சுற்றித் திரிந்தலையும் ஹிப்பிகளாய்ப் பிறழ்வதற்கோ உமக்காய் மன்றாடினேன் - போராடினேன்?" -- எனது கர்ச்சிப்பு
அத்தருணம் வடிவின் கண்களில் நீர்ப் பனித்ததை அறிந்தவர்கள் நானும் வடிவும் மட்டுமே.
அடுத்தடுத்து ஏ பி நாகராஜன் தோட்டத்திற்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்க்க நேரிடும் வடிவு. நான் எஸ் ஐ இ டி கல்லூரியில் படிக்கும்போது, சாலையில் நான் நடந்து செல்ல - திடீரென என் பக்கத்தில் காரை நிறுத்தி விசாரிக்கும் வடிவு -
நந்தனம் டவர்ஸ் அருகில் நான் ஒரு நாள் டூ வீலரில் போக, என்ன என்ன ஓவர் டேக் பண்ணப் பாக்கறியா? என்ற மிரட்டலுடன் கேட்டுவிட்டுப் போன வடிவு.
கள்ளம் கபடமில்லாமல் மிக எளிமையாக நடந்துகொள்ளும் வடிவு.
ஆங்கில உச்சரிப்பிலும் புலமையிலும் தூள் கட்டும் வடிவு.
என்னை விட வயதில் மூத்தவர் எனினும் மரியாதை தந்து எட்டத்தில் வைக்க முடியாத வடிவு.
நிறைய படிக்க வேண்டும் என்று உள்ளுக்குள்ளே ஓராயிரம் கனவுகள் வைத்திருந்த வடிவு.
இயற்பெயருடனேயே நடிக்க வந்த வடிவு.
திரைப்படத்துறையோடு தனக்குப் பரம்பரைத் தொடர்பு இருந்த போதிலும் அலட்டிக்கொள்ளாத வடிவு.
நடிப்புகலவாத நடக்கை கொண்ட வடிவு.
நான் சந்தித்துப் பழகிய பெண்களுக்குள் என்னை அதிகம் சிந்திக்கவைத்த வடிவு.
இக்கணம் என்னுள் எழும் வாசகம்: "ஆயிரம் கோடி மலருண்டு - அவளோ அபூர்வ ஒற்றைச் சம்பங்கி!"
0 comments:
Post a Comment