Subscribe:

Pages

Saturday, February 12, 2011

செரியாமைப் பிணிக்கும் ஏலாதி ! அறியாமைப் பிணிக்கும் ஏலாதி !!

செரியாமைப் பிணிக்கும் ஏலாதி ! அறியாமைப் பிணிக்கும் ஏலாதி !!

பதினெண்கீழ்க் கணக்கு நூலகளுள் ஒன்றான ஏலாதி எனும் நூல் அறநெறிக் கருத்துக்களைக் கூறுகிற நூலாகும். சோதிடத்தில் வல்லவராகக் கருதப்பட்ட கணிமேதாவியார் ஏலாதியை இயற்றிய ஆசிரியராகும். இவரது ஆசிரியர் மாக்காயனார்; கணிமேதாவியாரோடு உடன் பயின்ற இன்னுமொரு தமிழ்ப் புலவர் சிறுபஞ்ச மூலத்தை இயற்றிய காரியாசனாகும்,  கடைச் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவராகக் கொள்ளப்படும் கணிமேதாவியார், திணைமாலை நூற்றைம்பது எனும் நூலையும் இயற்றியுள்ளார்.
ஏலாதி எனும் பெயர் ஒரு காரணப்பெயராகும்: உடலில் ஏற்படும் செரியாமைப் பிணியைப் போக்கவல்லது ஏலாதி* எனும் மருந்துப் பொருள்; அதுபோன்றே மக்களின் மனதிலே ஏற்படுகிற அறியாமைப் பிணியைப் போகவல்லது ஏலாதி எனும் நூல். இந்நூல கூறும் அறிவுரையானது  வறட்சிக் கடுமையில்லாமல் தமிழ்ச்சுவையோடும் ஒலிநயத்தொடும்  அமையப்பெற்றுள்ளதால், நவீனயுகமாகிய இன்றைய காலகட்டத்திலும் இப்பாக்களைக் கொண்டு பழகு பாங்கியல், ஆளுமைத்திறன், உணர்வாளல், ஆகிய மனிதவளக் கலைகளை, நம் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வழங்கலாம்.          
எடுத்துக்காட்டாக ஒரு பாடல்: அரிது எது எளிது எது எனக் கணிமேதாவியார் கூறுவதைப் பாருங்கள்
பாடல்
சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிது அரிது மெய்ப்போற்றல் -- ஆவதன்கண்
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியராய்
வேறல் எளிது அரிது சொல்.

பாடலின் பொருள்
  
இறந்து போவது என்பது எளிமையான செயல்; ஆனால் கற்றறிந்து, சான்றாண்மை கொள்வது கடினமான செயல். வாழ்க்கையை எப்படியோ வாழ்தல் எளிது;  ஆனால் உண்மையைப் போற்றி வாழ்தல் அரிது; துறவறம் பூணுதல் எளியது; ஆனால் துறவற நிலையில்  நிற்றல் அரியது. சொல்லுதல் எளியது; ஆனால் சொல்லிய  ஒன்றைத் தெளிவாகச் செய்து வெற்றி பெறுதல் அரிது.     

பிற்குறிப்பு
*ஏலம் துவங்கி, இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்துப்பொருட்கள் ஏலாதியில் அடக்கம்.

அவ்வைமகள்
  

0 comments:

Post a Comment