அன்றொரு நாள்: ஏப்ரல் 19
விர்ரென...!
அமெரிக்காவுக்கும், ஸோவியத் ரஷ்யாவுக்கும் கடும் போட்டி.
செயற்கைக்கோள் விண்கலம் (சாட்டிலைட்) முதலில் செலுத்தி, ஜன்மசாபல்யம் பெறப்போவது யாரு என்று. 1957ல் முதலில் விர்ரெனெ... பறந்து ரஷ்யா அந்த புகழை வாங்கிக்கொண்டது. அக்காலம், விடுதலை பெற்று பத்து வருடங்கள் கூட ஆகாத நிலையில், இந்தியா பின்தங்கிய நாடாகத்தான் இருந்தது. ஏப்ரல் 19, 1975அன்று, அருமை நண்பர் ரஷ்யாவின் அரவணைப்பில், 358 கிலோ எடையுள் ஆர்யபட்டா’ என்ற செயற்கைக்கோளை, ரஷ்யாவிலிருந்து, விர்ரென ஏவி விட்டு, தன்னுடைய கீர்த்தியை கொடி நாட்டியது. அக்காலம், இதையெல்லாம் கேலி செய்த ஈஸி-சேர் (என்னது?) அறிவுஜீவிகளை தெரியும். அந்த ‘கன்னி முயற்சி’ (தனித்தமிழ் சரியா?)யில் மூன்று விஞ்ஞான ஆய்வுகள் திட்டமிடப்பட்டன. நமது விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் அதிகரித்தனர். ஆனா! பாருங்கோ! மின் வெட்டு/ மின் தட்டுப்பாடு வந்து தொந்தரவு செய்ய, மூன்று ஆய்வும் அரோஹரா. மற்றபடி, ஆடியோ ஓட்டம், சீதோஷ்ண விவர விவரணை, இரண்டும், நடந்தன, பர்த்தியாக. ஶ்ரீஹரிக்கோட்டாவில் ஒரு தளம் அமைத்தது, அப்போது தான். ஒரு வாரம் பொறுக்கக்கூடாதோ? பிறந்த நாள் கொண்டாடி இருக்கலாம். ஏப்ரல் 11, 1981 அன்று இது காலாவதியாயிற்று. வீடியோ இணைக்கப்பட்டுளது. கண்டு களிக்கவும்.
இன்னம்பூரான்
19 04 2012
உசாத்துணை
*
![]()
Ads – Why this ad?
100 + Locations & Online Programs Official ITT Tech Site. Get Info!
|
Saturday, April 21, 2012
அன்றொரு நாள்: ஏப்ரல் 19 விர்ரென...இன்னம்பூரான்
மருப்பிலே பயின்ற பாவை: இன்னம்பூரான்
மருப்பிலே பயின்ற பாவை
அன்னை என்றவுடன் வணங்குவது இயல்பே. வருடாவருடம் ஏப்ரல் 22ம் தேதி பூமாதேவியை தொழுது வரும் சம்பிரதாயத்தை, சில வருடங்கள் முன்னால், ஐ.நா. தொடங்கி வைத்தது. அது பற்றி எழுதுவதற்கு முன், தமிழ்த்தாய் பற்றிய ஒரு சில கருத்துக்கள். வில்லி பாரதம் பாடிய வில்லிப்புத்தூராரின் திருமகனின் அழகிய பெயர்:‘வரம் தருவார். அவர் தந்தை வில்லிப்புத்தூரார் எழுதிய வில்லிபாரதத்துக்கு எழுதிய சிறப்புப்பாயிரத்தின் முதல் பாடல்:
பொருப்பிலே பிறந்து தென்னன்
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்துஓ ரேன
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்துஓ ரேன
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்
(வில்லி பாரதம். சிறப்புப் பாயிரம். 1)
பொதிகை மலையின் திருமகள், தமிழ்த்தாய். நீவிர் பாண்டியனை புகழ்ந்தாலும், அது தமிழ்த்தாயின் புகழே. மூன்று சங்கங்களும் அவளது இருப்பே. ஆற்றிலும், தீயிலும் இட்ட இலக்கியத்தை காப்பாற்றிய எதிர்நீச்சல்காரி, இந்த தமிழன்னை. அவள் பூமா தேவியின் பாங்கி என்க. இந்த பீடிகைக்கும் ஐநாவுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு தமிழ்த்தாயின் ஆதரவுடன், மருப்பிலே பயின்ற பாவையாகிய பூமாதேவியை அணுகி, அவளையும் தொழுது நன்றி நவின்று, விடை பெறவேண்டும் என தோன்றியது. அதான்.
உசாத்துணையில் மேலதிகவிவரங்களை காணலாம்.
இன்னம்பூரான்
22 04 2012
உசாத்துணை:
Wednesday, April 18, 2012
பரிதாப நிலையில் பாயின்கேர்கள்
படத்திற்கு நன்றி:claymath.org
பரிதாப நிலையில் பாயின்கேர்கள்
பாயின்கேர் எனும்
கணித மேதை யார்? அவரது சாதனைகள் யாவை
அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் யாவை என்பது அன்று- புத்தொளிப் பயிற்சிக்கு
வந்திருந்த நாற்பது ஆசிரியர்களில் ஒருவருக்குக் கூடத் தெரியவில்லை!
ஒருவர் மட்டும்
பாயின்கேர் எனும் பெயரை எங்கோ கேள்விப் பட்டிருக்கிறேன் என்றார்.
இது ஒரு சாம்பிள்
அவ்வளவே!
பாயின்கேர் எனும்
கணித மேதையின் சிறப்பான கண்டுபிடிப்புக்கள் வெகு பிரபலமானவை. அதற்கு மேல்
பிரபலாமனவை அவரது ஒப்பற்ற சிந்தனைத் திறன் – ஈடுபாடு – கற்பனா சக்தி ஆகியன. இம்மூன்றையும் விடப் பிரபலமானது அவரது
அலாதியான போக்கு.
இந்த அலாதியான போக்குதான் மிகவும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
பாயின்கேர் தனது சுய
விருப்பத்தின் பேரில் வெகு சிரமமான கணிதச் சிக்கல்களை தாமே தேடி அவற்றிற்குத்
தீர்வு காணத் துவங்குவார்.
கணிதச் சிக்கல் ஒன்று
அவரது சிந்தனையிலே உதித்து விட்டதென்றால், கற்பனை ராக்கெட்டில் அவர் ஏறிவிடுவார்.
அந்த ராக்கெட்- உயரே உயரே - செல்லலாகும் -
செல்லலாகும் – செல்லலாகும்!
விண் விதானம் போன்ற –
சிந்தனைக் கண்ணொளித் திரையிலே - சமன்பாடுகளும் – குறியீடுகளும் – கணிதச்செயல்
முறைகளும் –அவர் முன்னே அடுத்தடுத்து – வரிசைக்கிரமமாய் தோன்றும்
இந்தத் தோற்றக்
காட்சிகளைப் பின்னியும் பிணைத்தும் – வகுத்தும் பகுத்தும் – சுருக்கியும்
குறித்தும் – வளர்த்தும் நீட்டியும் என பாயின்கேரின் மனதுக்குள் தொடர் இயக்கம் நிகழ்ந்தவாறிருக்க -
நின்ற இடமா – அமர்ந்த
இடமா என்பதெல்லாம் கணக்கில்லை – நடக்கிறாரா – உண்ணுகிறாரா என்பது –பொருட்டில்லை –
கடற்கரையா - கட்டாந்தரையா என்பது விலக்கில்லை – கழிவறையா – நூலகமா என்பது
பொருளில்லை படிக்கட்டில் ஏறுகிறாரா –
அல்லது பாதாள அறைக்குள் இறங்குகிறாரா என்பது முக்கியமில்லை – எனக் கணிதச் சமையல்
பாயின்கேரின் சிந்தனையிலே நிகழ்ந்தவாறிருக்கும்! மணிக்கணக்கில்! விடாது தொடர்ச்சியாக!
அடுத்து- தாட்கள்
மடமடவென நிரம்பும் – ஆடாது – அசையாது – அடித்தல் – திருத்தல் இல்லாது – பக்கம் –
அடுத்த பக்கம் – அடுத்த பக்கம் – அடுத்த பக்கம் – என பக்கம் பக்கமாய்க் கணக்கு
கட்டவிழும்!! கைவிரல்கள் எழுதித் தள்ளும் - அத்தருணங்களில் அவர் தாகமறியார் –
பசியறியார் – சுற்றிலும் எழும் சப்தங்கள்
அறியார் – சுற்றி நடக்கும் – நிகழ்வுகள் அறியார் – காலின் மீது பாம்பு ஊர்ந்தாலும்
அறியார் – தோளின் மீது பல்லி வீழ்ந்தாலும் அறியார்!
இவ்வாறு தானே
எடுத்துக்கொண்ட ஒரு கணக்கை – தானே ஆய்ந்து – தானே அறிந்து – அக்கணக்கின் தீர்வை
பாயின் கேர் எழுதிக்கொண்டு வரும் வேளையில் ஒரு நொடி – அந்த ஒரு நொடி – வந்து விடும்!
அந்த நொடி - அந்தக்
கணிதச் சிக்கலின் அது – அது - பளிச்செனத் தெரியும் –நொடி!
அந்த நொடியில்
தோன்றும் அந்தப் பிரகாசம் (illumination)
அற்புதப் பிரகாசம்! அதோ பாயின் கேருக்கு அது
தெரிந்துவிட்டது!
அது எதுவென்றால் –அது
- அக்கணக்கின் தீர்வு (அதாவது இறுதி விடை)!
அந்த நொடியிடை
வெளிச்சம்! அதுதான் உச்சஸ்தாயி! அதுதான் ஞான ஜனன கணம்!
அந்த உச்சஸ்தாயியை –
அந்த கணத்தை அவர் கண்ட அம்மாத்திரம்
பாயின் கேரின் கைகள் எழுதுவதை நிறுத்தும்
- தாட்கள் அவரது கைகளிலிருந்து தானே கீழே விழும் – அவர் உடம்பில்
சலனமுண்டாகும் - அவர் அப்படியே அத்தாட்களைச் சுருட்டிப் பொட்டலமாக்கி ஒரு மூலையில்
வீசி எறிந்து விடுவார். கண்ணுள் ஒரு
பிரகாசம் ஜொலிக்கும் – உடம்பு இளகும்! தான் இதுகாறும் செய்த அந்த ஒருமித்த சிரத்தை
– தவத்தை அப்படியே முடித்துக் கொண்டு - அங்கிருந்து கிளம்பி விடுவார்!
பாயின்கேரின் மனத்துக்குள்
வெளிச்சமாய்ப் புலப்பட்ட அந்தத் தீர்வுக்குச் செல்லுவதற்கு நிறைய வழிப்பாடு (steps) இருக்கும் – கூற்று (lemma) இருக்கும் - இணைப்புரை (corollary) இருக்கும்- இவற்றிற்கெல்லாம் அடிப்படையாய் –
நாடித்துடிப்ப்பாய் ஓடக்கூடிய விதி (axiom)
இருக்கும். ஆனால் பாயின்கேர் – இன்றியமையாததான
இவற்றில் எந்த ஒன்றையும் எழுதியிருக்கமாட்டார் – இறுதி விடையும் கூட அங்கே இராது!
பாயின்கேர்
வழிமுறைகள் எழுதவில்லை – இது உண்மை
பாயின்கேர்
இறுதிவிடையை எடுத்து எழுத வில்லை – இது உண்மை
பாயின்கேர் கணக்கை
அரைகுறையாய்ச் செய்திருக்கிறார் – இது உண்மை
பாயின்கேர் தான்
போட்ட கணக்குகளில் இது எத்தனையாவது கணக்கு எனக் கேள்வி எண்ணைக் (question number) குறிப்பிடவில்லை – இது உண்மை
கணக்குபோடும் நபர் தான்
போடும் கணக்கு இதுவென கேள்வியை எழுதவேண்டும் அல்லவா? – அதனையும் பாயின்கேர் எழுதவில்லை.
எனவே இது எந்த கணக்கிற்கான தீர்வு என்று
தெரிந்துகொள்ளவும் முடியவில்லை.
பாயின் கேர் தனது
விடைத்தாளை உரிய முறையில் “documentation”
பதிவு
செய்யவும் இல்லை.
மேற்சொன்ன
இவையாவையுமே உண்மை!!
இந்த உண்மைகளின்
அடிப்படைகளில் – இந்த அத்தாட்சிகளின் அடிப்படையில் வைத்துப் பார்த்து, பாயின்கேரின்
இந்த கணக்கு – விடைத்தாளை நாம் திருத்துவதாகக் கொள்வோம்!
நமது தேர்வுத்
தீர்மானங்கள் எவ்வாறிருக்கும்?
( 1)
பாயின் கேர் கணக்கு போடும் வழிமுறை தெரியாத ஒரு
நபர்!
( 2) முதலும் முடிவும் இல்லது மொட்டையாய்க் கணக்கு
போட்டிருக்கிற ஒரு நபர் – இக்கணக்கிற்கான முழு மதிப்பெண் பெற இலாயக்கற்றவர்!
( 3)
மேலும் – விடைத்தாளை முறையாக சமர்ப்பிக்காததால்
அவர் நெகடிவ் மதிப்பெண்கள் பெறத் தகுதியாகிறார்!
4)
முறையாக சமர்ப்பிக்காததோடு மட்டுமல்லாது விடைத்
தாளைச் சுருட்டி விட்டெறிந்து சென்றதன் காரணத்தால் அவர் ஒழுங்கீனமாய் நடந்து
கொண்டிருக்கிறார் என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தேவை
ஏற்பட்டிருக்கிறது!
5) எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் எவரது – முன்
அனுமதியும் பெறாமல் – அவர் தன்னிச்சையாக வெளியேறிச் சென்றதும் குற்றமே!
இந்தக் குற்றச்
சாட்டுகளை – அவற்றின் உண்மையை வைத்து பார்க்கின்றபோது – கீழ்க்காணும் தீர்ப்பு
எழுதப்படும்:
பாயின் கேர் பூச்சியத்திற்கும் கீழான நெகடிவ் மதிப்பெண்
பெறுவதோடு – கல்வியில் முறைப்படி நடந்துகொள்ளத் தவறிய குற்றங்களுக்காக
தண்டனைகளும் பெற வேண்டியவராகிறார்.
அழகான மதிப்பீடு –
அசைக்கமுடியாத தீர்ப்பு!!–
இது சரியல்ல என
எவரும் மறுக்க முடியாத ஆணித்தரமான சான்றுகள்!
உண்மையில்
பாயின் கேர் அரைகுறை
செயல்தான் செய்திருக்கிறார்!
அவர் பொறுப்பில்லாமல்
தான் நடந்து கொண்டிருக்கிறார்!
எடுத்த காரியத்தை
நிறைவுக்குக் கொண்டுவராது அவசரமாய் விடுத்துப் போயிருக்கிறார்.
நக்கீரர் மொழியில்
சொன்னால் இது, “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!”
ஆனால் உண்மையான உண்மை
எது?
பாயின் கேர் கணக்கு
தெரியாதவரா?
கணக்கு போடும்
வழிமுறைகள் தெரியாதவரா?
அவருக்கு விடை
தெரியாதா?
அவர்
தண்டனைக்குரியவரா?
மொத்தத்தில் பாயின்
கேர் கணக்கு வராத ஒரு நபர்! என்றும், பாயின் கேரை, கணக்கின் பால் அக்கறை இல்லாத நபர்
என்றும் இங்கே காட்டுவது எது?
பாயின் கேர்
பின்படுத்தியிருக்கிற நடைமுறைகளா?
அல்லது
கல்வியிலே
பின்படுத்தப்பட்டிருக்கிற நடைமுறைகளா?
இங்கு குறைபாடு
பாயின்கேருடையதா?
பாயின்கேரின் நடைமுறையை எடைபோடும் நடைமுறையினுடையதா?
பாயின்கேரின் நடைமுறையை எடைபோடும் நடைமுறையினுடையதா?
இதல் தவறு எவருடையது
என சிந்திப்பது நல்லது!
சிந்தியுங்கள்-
அறிவொளி என்பதும்
ஞானம் என்பதும், சிந்தனைப் பிரவாகம் என்பதும் தொட்டுப் பார்க்கும் தன்மையுடையனவா?
ஞானத்தைப் பொட்டலம் போடும் சாத்தியம் உண்டா? அறிவொளியைப் பெட்டிக்குள் அடைக்கும்
வாய்ப்புண்டா?
புளியை நிறுத்திப்
பார்ப்பதைப்போல் – பூசனிக்காயைத் தூக்கிப் பார்ப்பதைப்போல் – துணியை அளந்து
பார்ப்பதைபோல் – நெல்லைத் துழாவிப் பார்ப்பதைப்போல – மோரை முகர்ந்து பார்ப்பதைப்
போல – மாவைத் தொட்டுப் பார்ப்பதைப் போல – ஒரு மனிதனின் ஞானத்தை எவ்வாறு நீங்கள்
சராசரி அளவைகளால் – அளக்க முடியும்?
கலசத்துக்குள்
முகர்ந்து வந்த நீர் கங்கை நீரென்றாலும் அது கங்கையில்லையே! முகர்ந்த நீரில்
கங்கையின் வேகமுண்டா? ஆழமுண்டா,? அகலமுண்டா? இன்னபிற சலங்களும் இயக்கங்களும்
உண்டா? இந்தக் கலசத்துக்குள் முகர்ந்த கங்கை நீரை வைத்துக் கொடு கங்கையின்
மூலத்தையும் முடிவையும் அதனது போக்கையும் நீங்கள் சொல்லிவிட முடியுமா?
கங்கை நீரும் உண்மை
தான் – கலச நீரும் உண்மை தான் – கங்கையே தான் கலசத்துக்குள் முகரப்பட்டது என்பதும்
உண்மைதான் ஆனால் – இரண்டு நீரும் ஒன்றே என்பது உண்மையில்லையே!!
கங்கை நதியில்,
நமக்கு வசதியான ஏதோ ஒரு இடத்தில் – நமக்கு வசதியான நேரத்தில் - நமக்கு வசதியான ஏதோ
ஒரு அளவில் – நமக்கு வசதியான ஏதோ ஒரு பாத்திரத்தில் நாம் முகர்ந்து வந்த அந்தத்
துளியூண்டு கங்கை நீரை வைத்துக் கொண்டு – அதில் நாம் அளவிடக் கூட்டிய சில பண்புகளை
வைத்துக் கொண்டு – நாம் கங்கையை அளவீடு செய்து விட்டோம் – கங்கையின் பண்புகள்
யாவற்றையும் மதிப்பீடு செய்து விட்டோம் என்று சொன்னால் எத்தனை சிரிப்பு வருமோ –
எத்தனை – எரிச்சல் வருமோ –- அத்தனையும் கல்விமுறைமையில் வெளிப்படுகின்றன!
நமது கல்வி
முறைமைகளில் எத்தனை அறிவீனம் புலப்படுமோ – எத்தனை எதேச்ச்சாதிகாரம் வெளிப்படுமோ –
எத்தனை அலட்சியம் காட்டப்படுமோ அத்தனையும் நிகழ்ந்தபடி தான் இருக்கிறது- இந்த
அனைத்துக் கூத்தையும் ஏற்றபடி – பல மாணவர்கள் இடிதாங்கிகளாக – இறுகிப்போய் - இருந்தும்
இயலாது – கையலாகதவர்களாகக் கிடக்கிறார்கள்! அவர்களது பெற்றோர்களும் அவ்வாறே!
கணக்கு வராதவர்கள்
எனக் கழித்துத் தள்ளப்படும் மாணவர்கள் ஏராளம் தாராளம் - இவர்கள்
தள்ளப்பட்டிருக்கும் பள்ளம் – ஒரு நாடு –
ஒரு சமுதாயம் – தனக்குத் தானே குழி பறித்துக் கொள்ளுகிற – இழிவே தவிர
வேறொன்றுமில்லை!
இத்தருணத்தில் உலகின்
இரு முக்கிய கணித மேதைகளான பாயின்கேர் மற்றும் இராமானுஜனின் வரலாற்றுச் சிந்தனைகளைக்
கவனிப்பது நல்லது.
மேலும் பேசுவோம்
அவ்வைமகள்
(வல்லமை இதழில் வெளிவந்தது)
டியூஷன் வகுப்பை எதிர்ப்பார்ப்புடன் எண்ணியபடியே!!
படத்திற்கு நானறி: tutoring-expert.com
டியூஷன் வகுப்பை எதிர்ப்பார்ப்புடன் எண்ணியபடியே!!
பள்ளி முடிந்த பின்பு டியூஷன் செண்டரிலோ அல்லது
தன் வீட்டிலோ தான் எடுக்கும் டியூஷன் வகுப்பிற்காய் பள்ளியில் பரிதவிப்புடன் காத்திருக்கும்
கணித ஆசிரியர்கள் தாம் பணிபுரியும் பள்ளியில் மாணவர்களுக்கு எட்டும் வகையில்
கணிதத்தைக் கற்பிக்கும் கடைமை துறந்து – சதாசர்வகாலமும் வேறெந்த சிந்தனையிலோ
செயலிலோ ஈடுபட்டவராய் மெய்மறந்த நிலையில் தென்படும் – அற்புத காட்சி கண்டோம்.
ஆசிரியர்களின் நிலை இவ்வாறனதென்றால் மாணாக்கரின்
நிலையும் இவ்வாறானதே! அவர்களும் கூட டியூஷன்
வகுப்பை எதிர்ப்பார்ப்புடன் எண்ணியபடியே தான் வகுப்பில்!
ஆக ஒட்டுதல் இல்லாமலேயே ஒரு கபட நாடகத்தில் ஆசிரியரும்
மாணவரும் இருவரும் என பள்ளியில் வகுப்பறைகள் இயங்குமென்றால் இந்நிலைமையை என்னென்று
சொல்வது?
“அட்டண்டன்ஸ் மாத்திரம் வேண்டாம்னு ஆயிடிச்சுனா –
நாங்க ஏன் ஸ்கூலுக்கு வரப் போகிறோம்?” என்பதே பல மாணாக்கர்களின் நிலை!
ஆசிரியர்களுக்கு பற்றும் வரவும் டியூஷனில்
இருப்பதால், மாணாக்கர்கள் டியூஷன் வருவதென்பது கட்டாயமாக்கப்படுகிறதல்லவா?
இதனை வர்த்தக சூட்சுமம் எனலாம்!
சமுதாயத்திலே தேவையில்லாமல் (unnecessary) தேவையை (demand)
ஏற்படுத்தி வெகு சாமார்த்தியமாக தனது வர்த்தகப்
பொருளை வணிகர்கள் சமுதாயத்தின் மீது திணிப்பர்.
இவ்வாறு செய்பவர்கள் சொல்வதோ வேறுவிதமாக
இருக்கும்!
“ஜனங்க கிட்ட டிமாண்ட் இருக்கு!” – அவங்க
தேவைக்கு நாங்க சேவை செய்கிறோம்.
இது ஒரு சினிமா தந்திரம் என்று கூடச் சொல்லலாமே!
மக்கள் கேட்கிறார்கள்! நாங்கள் தருகிறோம்! எனறு
திரைப்படத் தயாரிப்பாளர்கள் – இயக்குனர்கள் சொல்வதுண்டு!
பொதுமக்களில் எவராவது ஒரு இயக்குனர் அல்லது –
ஒரு தயாரிப்பாளரின் வீட்டுக்குச் சென்று – கதவிடித்து – எங்களுக்கு இந்தத்
திரைப்படம் வேண்டும் என்று கேட்கிறார்களா?
கன்னாபின்னாவென்று, படு ஆபாசமாய் – வக்கிரமான
உரையாடல்கள – வன்முறைக் காட்சிகள் உள்ளடக்கிப் படம் எடுத்து வெளியிட்டுவிட்டு –
மக்கள் கேட்கிறார்கள் தருகிறோம் என்று அவர்கள் ரீல் விடுவதற்கும் டடியூஷனைக்
காட்டி இவர்கள் ரீல் விடுவதற்கும் – வித்தியாசம்?
செண்டம் சுந்தரம்
ஹன்ட்ரட் ஆறுமுகம்
நூத்துக்கு நூறு கிரி
என தனக்குத் தானே பட்டங்கள் சூட்டிக்கொண்ட இந்த
டியூஷன் சக்கரவர்த்திகள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே “fees” வாங்கும் பரோபகாரிகள் – பெற்றோர் மாதாமாதம் பணம்
செலுத்தவேண்டிய அந்த மாபெரும் பாரத்தை இறக்கிவைப்பவர்கள்!
அடுத்தவருட டியூஷன் படிப்புக்காக இந்த வருடமே
இவர்களைப் பணம் கட்டி அட்வான்னஸ் புக்கிங் செய்யவேண்டும் – அன்றேல் அம்பேல் தான்!
பேட்ச்
- அடுத்த பேட்ச் – அடுத்த பேட்ச் – என, தொழிற்கூடங்களில்- ஒரு எந்திரம்,
பொருட்களை – பற்பல எண்ணிக்கையில் - வெளியே கொட்டுவதைப் போல – இவர்களது – இல்லம் –
அல்லது டியூஷன் மையம் – குழந்தைகளை உமிழும்!
இவர்கள் குடியிருக்கும் தெருக்களில்
டியூஷனுக்காய் வரும் – வந்து போகும் மாணவர்கள ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலும்
– அவர்களது வண்டி வாகனங்களின் அடைசலும் அப்பப்பா!
பணம் கட்டிக் குழந்தையைச் சேர்த்துவிட்டால் –
இவர்களைப் பார்ப்பதென்பது இயலாத ஒன்று! இவர்களைப் பார்க்கவேண்டுமேன்றால் –பெற்றோர்
ராபர்ட் ப்ரூசாக மாறி தொடர் முயற்சி – விடாமுயற்சி என – மிகப்பெரிய வைராக்கிய
வாதியாக உருமாற வேண்டும்!
அப்படியே நீங்கள் அந்த டியூஷன் வாத்தியாரைப்
பார்த்து – குழந்தை சரியாக மார்க் வாங்கவில்லையே என்று கேட்டுவிடமுடியாது –
அவ்வாறு ஒரு வேளை நீங்கள் கேட்டீர்கள் என்றால் – அலட்டல் இல்லாத சன்னமான குரலில்
வக்கணையாய் பதில் வரும்.
“குழந்தை படிக்கவில்லையே என நீங்கள் என்ன
முயற்சி எடுக்கிறீர்கள்? கொடுத்தனுப்புகிற அசைன்மெண்ட் செய்யவைக்க வேண்டாமா?
நீங்கள் நல்ல முன்மாதிரியாக இருந்தால் தானே நடக்கும்?– மற்ற பெற்றோர்கள் எவ்வவளவு
அக்கறையோடு – தன் குழந்தை எல்லாவற்றையும் செய்தாலொழிய படுக்க முடியாது என்று
பார்த்துக் கொள்கிறார்கள்! பக்கத்தில் பெற்றோர் உட்கார்ந்தால் தான் இந்தக்
காலத்துப் பங்களுக்கு! நீங்க ஒங்க ஜோலின்னு போனா எப்படி? டெஸ்ட் பேப்பர்ஸ் நீங்க வாங்கிப் பார்த்திருப்பீங்களே?
ஒவ்வொரு பேப்பர்லையும் எழுதியிருக்கேனே! “poor performance – must work hard” பாருங்க – டெஸ்ட்
கமன்ட்சை ரெஜிச்டர்ல எழுதி வெச்சிருக்கேன்! ஓங்கள மாதிரி பிசி பேரண்ட்ஸ் கையில குழந்தையோட டேட்டா இல்லாம வந்துடுவாங்க – அதுக்குத் தான்
ரெஜிஸ்டர். நீங்க வீட்டுக்குப் போய் பாருங்க exact ஆக
இதத்தான் எழுதியிருக்கேன் “poor
performance – must work hard” சரி நீங்க தான் பிஸி! உங்க மேடம் என்ன
பண்றாங்க! அவங்க குழந்தைக்கு ஹெல்ப் பண்லாமே!”
ஆக – தந்தை “கோழியும் போய் குரலும் போன கதையாக” தொங்கிய
முகத்தோடு – வெளியேறும் அதே நேரம் இரவு பையனை (பெண்ணை) எப்படி வெளாசுவது என்று தீர்மானம் செய்வதோடு – “இந்த
ஓதவாக்கரைப் பொம்பளை ஒண்ணையுமே ஒழுங்கா செய்யறதில்ல – அவளையும் விடக்கூடாது” – என
மனதில் தான் வீட்டில் இரவு போட வேண்டிய சண்டையை உருவேற்றிக் கொள்வார்.
அன்று இரவு அவர்கள் வீட்டில் நடந்த குருஷேதரக்
காட்சியை அவர்கள் அக்கம் பக்கத்து வீட்டார் மிகக் கவனமாகப் பதிவு
செய்திருப்பார்கள்! சாப்பிடாமலேயே அனைவரும் படுக்க அடுத்த நாள் காலை அந்த மிகுந்த
உணவை வீட்டைவிட்டு எப்படி வெளியேற்றுவது எனத்தெரியாமல் அந்த அம்மாள் பட்ட வேதனையை
எழுதத் தனி அத்தியாயம் வேண்டும்!
இப்பொழுதெல்லாம் டியூஷன் போக்கு மாறிவிட்டது!
டியூஷன் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை – வெறும் டெஸ்ட் மட்டுமே
வைக்கிறார்கள்! இறுதிப் பரிட்சைக்கான தொடர் பயிற்சியாம்! கற்றுக்கொள்வது
மாணவர்களின் பொறுப்பாம்! அவர்களை எடைபோடுவது மட்டுமே இவர்களது வேலையாம்!
இது என்னடா கொடுமை?
2009ல், தாயகம் வந்த போது
பல்கலைக் கழக Academic Staff College ஏற்பாடு செய்திருந்த ஒரு பயிற்சி வகுப்பில் என்னைப் பயிற்றுனராக
அழைத்திருந்தார்கள். அனைவரும் கல்லூரிக் கணித ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் –
அவர்களைச் சந்தித்த அந்த அரைநாள் நிகழ்ச்சியில் இடையிலும் இறுதியிலும் அவர்களுடன்
உரையாடினேன்! இதில் டியூஷன் பற்றிய பேச்சும் வந்தது. பயிற்சியின் போது ஒரு “சிறு குழுப் பணியாக” (small-group assignment) அவர்களுக்கு ஒரு
வேலை கொடுத்தேன்-
நான்கு நான்கு பேராக – குழு அமைத்து,
கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடையளிப்பது அந்த அசைன்மெண்ட்டின் நோக்கம்.
(1)
டியூஷனில் உங்கள் மாணவர்கள் நல்ல ரிசல்ட்
காட்டும்போது உங்கள் பள்ளி அல்லது கல்லூரி
வகுப்புகளில் ஏன் அவர்களால் மதிப்பெண் வாங்க முடிவதில்லை?
( (2)
டியூஷனில் நீங்கள் காட்டும் ரிசல்டை வைத்து –
நீங்கள் சிறப்பாகப் பயிற்றுவிக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம் - டியூஷனில் சிறப்பாகக் கற்பிக்கும் நீங்கள் உங்கள்
பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் ஏன்
சிறப்பாகக் கற்பிப்பதில்லை?
(3)
டியூஷனில், குழந்தைகளுக்குக் கற்றுக் கொள்வதில்
இருக்கும் குறைகளை உன்னிப்பாய் கவனித்து நீங்கள் அதன் நிவர்த்தி செய்வதாக ஏற்றுக்
கொள்கிறோம். அவ்வாறு என்னென்ன கற்றல் குறைகளை நீங்கள் உங்கள் டியூஷனில், மாணவர்களிடையே
கண்டீர்கள்?
(4)
கேள்வி
மூன்றிற்கு நீங்கள் தந்துள்ள பதிலில் நீங்கள் பட்டியலிட்டிருக்கிற கற்றல் குறைகள்
உங்கள் பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில்
காணப்படுவதுண்டா?
(5)
கேள்வி
நான்கிற்கு உங்களது பதில் (ஆம் / இல்லை எதுவாக இருப்பினும்). ஏன் “ஆம்” ஏன்
“இல்லை” என விளக்கவும்.
( (6)
உங்களுக்குத் தெரிந்த நான்கு கணிதமேதைகளின்
பெயரைக் குறிப்பிடவும். அவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்க சிறப்பான காரணம் - தலா ஒன்று – பதிவு செய்யவும்.
(7)
கணித்ததில் மொழி வழக்கு முக்கியமானது – நீங்கள்
கணித மொழிவழக்கை எப்படி அணுகுகிறீர்கள்?
(8)
பாயின் கேர் என்பவர் யார்? அவரது கண்டு
பிடிப்புக்கள் எவைஎவை?
இவரது குழந்தைப் பருவம் – இவருக்கிருந்த
முக்கியக் குறைபாடு இவற்றைப் பற்றி – சிறு குறிப்பு வரைக.
(9)
கார்ட்னர் பல்நிலை அறிவுத்திறன் (multiple
intelligence) பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பல்நிலை அறிவுத்திறன் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என நீங்கள்
எண்ணுகிறீர்களா? ஆம் எனில் – அது எவ்வாறு உங்களது கற்பிக்கும் திறனை பாதிக்கிறது?
(10) Drill and Practice என்பது கணிதக் கல்வியில் அதிகமாக எடுத்தாளப்படும் வாசகம்.
இந்த யுக்தியை நீங்கள் எவ்வாறு உங்கள் வகுப்புகளில் பயன்படுத்துகிறீர்கள்? இந்த யுக்தியின் நிறை குறைகள் யாவை?
இந்த வினாக்களுக்காக
அவர்கள் தயாரித்த விடைகள் கண்டு - எத்தனைப்
பின்னிலையில் நம் ஆசிரியர்கள் இயங்கி வருகிறார்கள் - நாம் எத்தனைப் பின்னிலையில் நம் மாணவர்களை வைத்திருக்கிறோம் எனப்
புரிந்தது!
மேலும் பேசுவோம்
அவ்வைமகள்
(வல்லமையில் வெளிவந்தது)
உலகு தொழும் கற்புக்கரசி -- மும்தாஜ் மகல்
படத்திற்கு நன்றி: saffroninfo.blogspot.com
உலகு தொழும்
கற்புக்கரசி -- மும்தாஜ் மகல்
(உலக மகளிர் தின உரை; நாள்: மார்ச் 4, 2012)
அன்புத்
தோழிகளே! தோழிகளுக்குத் தோழமையாய் – துணையாய் வந்திருக்கும் என்னருமை சகோதரர்களே! தாய் தந்தையர்களே!
குழந்தைகளே!
இவ்வருட
மகளிர் வாரத்தின் விழாவிற்கு நேரம் ஒதுக்கி
நீங்கள் திரண்டு வந்திருக்கும் இந்த நல்லதொரு சாட்சி என்னுள் – மனிதம் எனும் நீரோட்டம் வற்றாது என்றும் எனும் நம்பிக்கை வெளிச்சத்தை
மீண்டும் தோற்றுவிக்கிறது.
உமக்கு -
உமது வரவுக்கு - எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
இந்த மிகச்
சிறந்த நாளில் இல்லத்தரசி எனும் தலைப்பில் என்னைப் பேசப்
பணித்திருக்கிறீர்கள்.
இவ்வகையில்
உலகின் தலை சிறந்த இல்லத்தரசியான – ஒரு அரசியைப் பற்றிப் பேசுவோம்.
குடும்பப்
பெண்களை இல்லத்தரசிகள் எனும் பண்பாடு நம் இந்திய மண்ணின் பாரம்பரியம்.
சரி, இல்லத்தரசி என்னும் “Definition” அரசிகளுக்குப் பொருந்துமா? என்ற கேள்வியை எழுப்புவோம்.
அவர்கள்
ஏற்கனவே அரசிகள் தாம்!
இருப்பினும்
அவர்களுக்கு இல்லம் எனும் ஒரு முறைப்படியான அமைப்பு உண்டா?
சாதாரணப்
பெண்களைப்போல அவர்கள் இல்வாழ்க்கை வாழுவதுண்டா? (வாழ்ந்ததுண்டா?)
சிந்திக்கிறீர்கள்.
நன்று.
நாடாளும்
மன்னனுக்கு வாக்குப்பட்டு வாழும் அரசிகள் - எடுக்கவும் பிடிக்கவும் ஏவலாளிகள் என்ற
படி - செல்வமும், செல்வாக்கும்,
அதிகாரமுமாய் வாழ்பவர்கள் - உண்மைதானே!
இவர்களுக்கு
அடுக்களை என்பது அறியாத ஒன்று. கேட்ட மாத்திரத்தில் எது வேண்டுமானாலும் அரசி
இருக்கும் இடத்திற்கு வரும். சாதாரணக் குடும்பப்பெண்களைப் போன்று கணவனோடு இயல்பாக
வாழ்வு நடத்தும் பாக்கியமும் இவர்களுக்கு இல்லை. ஆயிரம் வேலைகளுக்கு நடுவில்
அந்தப்புரத்திற்கு அவ்வப்போது வரும் அரசனுடன் உறவாடுவது மட்டுமே முடியும் என்பதான
நிர்ப்பந்தம் இவர்களுக்கு! - உண்மைதானே!
இத்தகைய
அரசிகளுக்கு இல்லறம் என்று ஒன்று உண்டா? என்பதே கேள்வியல்லவா!
ஆம்
என்கிறீர்கள். நன்று!!
சாதாரண
இல்லத்தரசிகளுக்கு இருக்கின்ற சுதந்திரமும், இயல்பான சுகமும் கூட இல்லாதவர்கள் அரசிகள்!!
இத்தனைப்
பற்றாக்குறைகளுக்கும். இடைஞ்சல்களுக்கும் இடையில் ஒரு அரசி இல்லற தர்மம் தவறாது வாழ்ந்து காட்டி மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறாள். அவளது
சரித்திரம் இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகிலும் பிரசித்தி!
அர்ஜுமான்ட்
பானு பேகம் எனும் அவள் செய்து காட்டியிருக்கிறது சர்வசாதாரணமான சாதனை இல்லை!
இல்லற
தர்மத்தோடு நடந்துகொள்ளவேண்டியத் தேவையோ கட்டாயமோ இல்லாத ஒரு சூழலில் இருந்து
வருபவள் அவள்.
ராமனைப்போல
அவள் புருஷன், குருகுல
வாழ்க்கையேகி ஆசான் போதித்த தனிமனித ஒழுக்கம் எனும் பாடம் படித்து – அந்தக் குறிக்கோளைக் கட்டாயம் - கொள்ளவேண்டிய தேவை இல்லாதவன்.
ஹாஜஹான்
முகலாயப் பரம்பரையிலிருந்து வருபவன் பலதார மணம் என்பது பழக்கமாகவும் – சல்லீசான
விஷயமாகவும் – இருந்துவரும் தர்மம் கொண்ட குல ஒழுக்கம் அந்நாளில்
அவனுடையது.
பலாதாரங்கள்
வைத்திருந்தும், அதையும் தாண்டி –
ருசிக்காகவும் – அந்நேரப் பசிக்காகவும் அப்போதைக்கப்போது புதுப் புதுப் பெண்களைத் துய்க்கவும் சுதந்திரம் கொண்டவர்கள் மன்னர்கள். எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்
கிடைக்கச் செய்யும்படியான அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவன் மன்னன்.
புருஷன்
என்றால் அவனுக்குப் பல பெண்களுடன் தொடுப்பு இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டேதான்
முகலாயப் பெண்களும் – ஏன் முகலாய அரசிகளும்
வாழ்வதான காலம் அது! – இதனை எதிர்க்கவும் முடியாது – தடுக்கவும் முடியாது – முதலாவதாக – இது ஒரு தவறு என்று கூட நினையாத காலம் அது.
நிச்சயதார்த்தம்
முடிந்து – திருமணம் நடத்த -
நல்ல ஒரைக்காக ஐந்து ஆண்டுகள் திருமணத்திற்காய்க் காத்துக் கொடிருந்தவள் பானு பேகம்.
அதுவும் அந்த
இடைக் காலத்தில், ஷாஜஹான் இரு
பெண்களுடன் தொடர்பு வைத்து அவர்களுக்குத் தலா ஒரு குழந்தைவேறு உற்பத்தி செய்து
தந்து விட்டான் என்று வேறு கேள்வி.
இத்தகையதொரு
சூழலில், அவனைத் திருமணம்
செய்து கொண்ட பானு பேகத்திற்கு நான் இனி “ஏக பத்தினி விரதனாக
இருப்பேன்” என அவள் கணவன் ஒரு முகலாய
மன்னன் சத்தியப் பிரமாணம் செய்கிறான் என்றால் – பானு பேகம் எனும் பெயர் கொண்ட அந்தப் பெண்
- அந்த மனைவி எத்தனை அற்புதமானவளாக இருந்திருக்க வேண்டும்!
அவளது அழகு
ஒப்பற்றது – அவளது அழகைப்
பற்றி சரித்திரப் பதிவுகள் நிறையவே பேசுகின்றன.
ஆனால் குர்ராம் எனும் ஷாஜஹான் அவளது அழகுக்குக் கட்டுப் பட்டு அவளுக்கு இந்த
சத்தியத்தை வழங்க வில்லை. அவனைக் கட்டிபோட்டது அவளது அழகு இல்லை –
நடத்தை ஒன்று மட்டுமே!
நன்னடத்தை
பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பானு பேகத்தின் வாழ்வில் நாம் காணுகிறோம்.
நான் ஏற்கனவே
சொன்னது போல பானு பேகம் பேரழகி! அவளது ஒவ்வொரு
அசைவும் கூட அத்தனை அழகு தான்! அவள் அழகை மட்டுமே காப்பியங்களாக வடிக்க முடியும்
தான்! அதுவும் அவளுக்கு இருக்கின்ற வசதி வாய்ப்புக்களுக்கு – அவள் தனது பட்டுடல் மேனியைக் கட்டு போகாது -யௌவனம் குன்றாது பலப்பல ஆண்டுகள்
காக்கவும் முடியும்!
ஆனால் – அவள் சிந்திக்கிறாள் – அழகு என்பது பிறக்கும் போதே எனக்கு இயற்கையாய் அமைந்து போன ஒன்றில்லையா?
– இதில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது? நான்
எனும் இவ்வுடல் நானா? இது என் தாய் தந்தை போட்ட பிச்சையல்லவா?
இவ்வாழ்வில் எந்தாய் எந்தை தந்த இந்த அழகையும் அவர்கள தந்த இன்னபிற
சீதனங்களையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினால் – அந்த
வாழ்க்கை என் சொந்த வாழ்க்கையாக இருக்க முடியுமா? அதை எனது
வாழ்க்கை என்று நான் உரிமை கொண்டாட முடியுமா?
“நான்” என்கிறது என் தனிப்பட்ட ஜீவன் அல்லவா – அந்த ஜீவனுக்குரிய அடையாளம் யாது? அந்த ஜீவனுக்குரிய கடமை யாது?” என வினவுகிறாள் – தனது ஆன்மாவைத் தானே குடைந்தெடுக்கிறாள்.
அதே நேரம்
அவளது இன்னொரு உள்மனப் பரிமாணம் இன்னொன்றையும் காட்டுகிறது – “உன் குடும்ப்பப் பாரம்பரியம் முழுவதிலும்
உன் வீட்டுப் பெண்கள் – கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு –
அதிகார வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு – அட்டகாசமாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே – அதுபோல நீயும் போக
வேண்டியதுதானே? அது சுலபமாயிற்றே! ஏன் இந்த வறட்டுப்
பிடிவாதம் – தேவையற்ற சிந்தனை?” எதிர்
நீச்சல்?
எதிரும்
புதிருமாய் எண்ண அலைகள் – எது உண்மை எனத்
தேடும் வீரிய வேகம் – பானு பேகம் எண்ண அலைகளினுள்ளே புரண்டு –
புரண்டு எழுகிறாள் – விழுகிறாள்.
திருமணமாகி, தனது வாழ்க்கையை
எந்த நோக்கில் – எதனைக் குறித்து –
வளர்க்க வேண்டும் என்கிற இந்த விசாரத்திலே ஐந்து ஆண்டுகள் தன்னை முழுவதுமாக
அவள் ஈடுபடுத்திக் கொள்கிறாள்.
இந்த விசாரம்
– சுய அலசல் –
இது சொந்தப் பிரக்ஞை –
அரண்மனை
வாசத்தில் பானு பேகம் எனும் பெண் செய்த – ஆன்ம அக்கினிப் பரிட்சை இது. வேறெவர் கேட்டோ அல்லது வேறு ஏதோ ஓர் நிகழ்வு
நிர்ப்பந்தித்தோ அவள் இந்த சுய வேள்வியில் ஈடுபடவில்லை.
இந்த அரண்மனை
வாழ்க்கையில் – அதிகாரம்
முக்கியமா – அந்தஸ்து முக்கியமா – அல்லது
இவை நழுவிப்போகாமல் பாதுகாக்க வேண்டிய கடமை முக்கியமா என்கிற ஆய்வில் தன்னை
ஈடுபடுத்திக் கொள்ளுகிறாள். அங்கு விரிந்து நிரவிக்கிடக்கும் ஒராயிரம்
செல்வங்களிலும் உயர்ந்த செல்வம் எது என அவள் தேடுகிறாள்.
அடுத்தடுத்து
அவள் சிந்தனை விரிவடைகிறது!
அரண்மனை – அரசாட்சி – அங்குள்ள
மாபெரும் பரபரப்பு – பாதுகாப்பு – பெருத்த
சுற்றம் – அதிகாரம் – அந்தஸ்து –
அவளுக்கு வாழ்வில் மிகப்பெரிய பலம் தான் என்பது புரிகிறது.
ஒருவேளை
அவளுக்கு வாழ்வில் எதிர்பாராத சோதனைகள் வந்தாலும் கூட – அவள் கவலைப் படவேண்டியதில்லை – கணவனே இறந்தாலும் கூட – அவளுக்கு எவ்விதத் துன்பமும்
வந்து விடாது – நிலைத்த சொத்துக்களும் – பொன்னும் – மாணிக்கமும் – வைரமும்
– பணமும் என பத்து பரம்பரை உட்கார்ந்து சாப்பிடும் செல்வச் செழிப்பு அவளுக்கு ஏற்கனவே உறுதி செய்யப்
பட்டிருக்கிறது! - இதையும் அவள் காண்கிறாள்!
வேறொரு
பெண்ணாய் இருந்தால் – என்னை எவராலும்
அசைக்க முடியாது என்கிற நினைப்பே தோன்றியிருக்கும் ஆனால் பானு இவ்வித சந்தோஷத்திலே
தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை.தொடர்ந்து தனது சிந்தனைப் பார்வையைச் செலுத்துகிறாள்.
தனக்கு அமைந்துள்ள வசதி வாய்ப்புகளுக்குப் பின்னால் – மெல்லிய
பின்புலமாய்ப் பின்னல் வலை என அமானுஷ்யமாய்ப் பின்னப்பட்டுக் கண்ணிகள் புதைக்கப்பட்ட வகையாய் மாயங்கள் நிறைந்த –
மனுஷயங்கள் மறைந்த - அந்தக் காட்சியை அவள் மனத்திரை - மனைத்திரை காட்டுகிறது!
அந்நிலையில்
தனது உறவுக்காரர்கள் ஒவ்வொருவரையும் தனது மனக்கண் முன்னே கொண்டுவந்து
நிறுத்துகிறாள் – அந்த உறவின்
தராதரத்தை எடை போட்டுப் பார்க்கிறாள். இவ்வாறு உறவுகள் அத்தனையையும் அவள் அலசி
முடித்தத் தருணத்தில் அவளுக்கு ஒன்று உறுதியாய்ப் புரிகிறது: ஒரே உறவு மட்டும்
தான் தனக்கு முக்கியமானது என்பது.
அதே நொடி, தான் ஒரே ஒரு உறவுக்கு மட்டுமே பரிபூரணமாய்
பாத்யதைப் பட்டவள் என்பதும் பிற உறவுகள் யாவும் இரண்டாம் பட்சமே என்பதும்
அவளுக்குப் புரிகிறது.
அந்த உறவு
எத்தனை உயர்வானதோ அத்தனைக் கத்தனை பொறுப்புக்கள் நிறைந்த்தது என்பதையும், அந்த உறவை நம்பி எத்தனை ஜீவன்கள் நாட்டில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன - அந்த உறவு எத்தனை – அபாயகரமான
சூழல்களில் பொருந்தியிருக்கிறது என்பது.
இத்தனை ஆய்வு
நிகழ்த்தியபோது அவளுக்கு எத்தனை வயது தெரியுமா? பதினாலிலிருந்து பதினெட்டு!
பதினாலில்
நிச்சயதார்த்தம் பதினெட்டில் திருமணம் – இந்த இடைப்பட்ட காலம் – – இவை எல்லாவற்றையும் அவள் புரிந்து
கொள்ளுகிறாள். அவளது உடலில் – பருவத்தில் – முதிர்ச்சி இல்லை – ஆனால் – உள்ளத்தில் முதிர்ச்சி – ஆன்ம பலம்!
கம்பளிப்
புழு கூட்டுப் புழுவாகி – கூட்டுக்குள்
இருந்தபடியே எதிர் கால சிந்தனைகளோடு இயங்கும். கம்பளிப்புழுவாய் இருந்தபோது ஒரே
பாதுகாப்புக் கவசமாய் இருந்த அந்தக் கம்பளி ரோமங்கள உதிர்த்து – முழுமையான நிர்வாணமாகி – எதிர்கால வாழ்வைச்
சிந்தித்தபடி – சுயம்புவாய் புதுவிதமாய் பிறக்கும் -
எழும்பும் அந்தப் பட்டாம்பூச்சியைப் போல அவள் அரண்மனை
எனும் கூட்டில் ஐந்து ஆண்டுகள் – தனது வாழ்க்கைக்காக
– தனது கணவனின்
வாழ்க்கைக்காக – அவனை நம்பி வாழும் நாட்டு
மக்களின் வாழ்க்கைக்காகத் தன்னைத் தயார் செய்து கொள்ளுகிறாள்.
இந்த, சுயத் தயாரிப்பை அவள் எவர் சொல்லியும்
செய்யவில்லை. சொல்லப்போனால் அவளது சூழலில் அவளை தர்மத்துக்கு எதிராகச்
சிந்திக்கவைக்கும் தூண்டிவிடும் உறவுகளே அதிகமாக இருந்தன. குறிப்பாக அவளது அத்தை
நூர்ஜஹான் – ஷாஜஹானின் அன்னை.
பிள்ளையையும் விட அவள் செல்வத்தினையும் அதிகாரத்தையுமே அதிகமாக நேசித்தாள் –
இன்னமும் இன்னமும் செல்வம் வேண்டும் – இன்னமும்
இன்னமும் அதிகாரம் வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவள் நூர்ஜஹான்.
இதைக்
காண்கிறாள் பானு பேகம். அரண்மனையின் ஆர்ப்பரிப்புக்களிலோ – சஞ்சலங்களிலோ அவள் ஆர்வம் காட்டவில்லை – அவளது அத்தை நூர்ஜஹான் அதிகாரத்தைக்
கைப்பற்றும் எத்தனையோ தந்திரங்களை – சாகசங்களை நிகழ்த்துகிறாள்
– இவை எதிலும் தான் மாட்டிகொள்ளதவாறு தள்ளி நிற்கிறாள் பானு
பேகம்.
அரண்மனை
வாசம் என்றால் – அங்கு
படாடோபங்களும் – சாங்கியங்களும் – ஏராளம்!
ஆனால் பானு இவற்றுள் எதை விடுப்பது, எதைத் தாண்டுவது – எதனை மட்டும் எடுத்துக் கொள்ளுவது
என்பதிலே அதிகமாகச் சிந்தனையைச் செலவிடுகிறாள்.
ஆக மனக்குகையில் அவள் நிகழ்த்திய
மனப்போராட்டம் முடிவுக்கு வருகிறது குகையின் இறுதியில் வெளிச்சம்!!
இவ்வாறு, பானு பேகம் ஒரு முறையான வகையில் – முழுமையான வகையில், மனைவியாகத் தான் பதவியேறத்
தேவையான அத்தனைத் தார்மீககத் தேவைகளையும் சுய
வேள்வியால் – அறிந்து கொண்டு அவ்வகையிலேயே இயங்குவேன் என்ற
உறுதி கொண்டு உருமாறுகிறாள்.
திருமணம்
நடந்தேறிய காலை அது ஒரு சடங்கே தவிர – ஏற்கனவே மொத்தமான ஒரு மனைவியாய் – சுத்தமான ஒரு
மனைவியாய் – நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு மனைவியாய் –
பதிவிரதையாய் – அவள் தனக்குத் தானே ஷாஜஹானுடன்
சுயம் வரம் நிகழ்த்திக்கொண்டாகி விட்டது!
தெய்வம்
தொழாது கொழுநன் தொழுதே அவள் எழுந்தாள். அவளது சொல் செயல் சிந்தனை யாவிலும் ஷாஜஹான்
மட்டுமே! அவள் உறங்கிய நேரம் வெகு சிறிதானது. அந்தச் சிறு போதும் கூட அவள் எண்ணம்
யாவும் ஷாஜஹானையே பற்றி நின்றது. இந்த ஒருமித்தநிலையை அவள் அடைந்து விட்டது மாபெரும் முதல் வெற்றி!
பானு
பேகத்தின் நடத்தை – சிரத்தை –
அன்பு – உண்மை - அபிமானம் – கவனிப்பு – ஆதரவு – பற்றுதல் –
இவை கண்டு குர்ராம் (ஷாஜஹான்) இளகிப் போகிறான் கரைந்து போகிறான் –
“மும்தாஜ் மகல்” என்று அவளுக்குப் பட்டப்
பெயர் சூட்டுகிறான். “மும்தாஜ் மகல்” என்றால்
“அரண்மனைக்கு என்றே பொருத்தமாய் அமைந்தவள்” (Chosen
One of the Palace) என்பது அவனது விளக்கம்.ஏற்கனவே மும்தாஜ்
என்றால் “பிரமாதத்தின் தொட்டில்” (Cradle of Excellence) என்பது பொருள்.
மனைவி
மும்தாஜ் மகல் தந்த பலம்
ஷாஜகானுக்குள்ளே மாபெரும் பலத்தை வளர்க்கிறது – அரச
வாழ்க்கையின் – அலைச்சலிலே – “நான்
தோற்றுப் போய்விடுவேனோ” எனும் பலவீன எண்ணம அவனை விட்டு
ஒழிகிறது – வாழ்விலே முதன் முதலாகப் புதுத் தெம்பும்
நம்பிக்கையும் அவன் பெறுகிறான். இளங்கோவடிகள் சொன்னது போல் கற்புக்கடம் பூண்ட இத்
தெய்வம் அல்லது பொற்புடை தெய்வம் யாம் கண்டிலமால்” என்றே
ஷாஜஹானின் உள்ளம் மும்தாஜ் மகலைத் தொழுதேத்துகிறது.
மும்தாஜ்
மகல் எனும் இந்த
ஒப்பற்ற உண்மைக்கு – நானும் உண்மையாய் இருப்பேன் என உறுதி
கொள்ளுகிறான் – அவள் அழகு செய்ய இயலாத சாதனையை அவளது நடத்தை
செய்கிறது.
“மும்தாஜ் மகலிடம்
சத்தியம் செய்கிறான், “உன்னை விட்டு வேறு பெண்களை நான் நினையேன்” என்று
ராமனிருக்குமிடம்
சீதை என்பார்களே அதை அப்படியே வாழ்ந்து காட்டியவள் மும்தாஜ். ஷாஜஹான் சென்ற
இடமெல்லாம் அவனுடன் சென்றாள் - வனவாசம் போனாலும் பிரியாத சீதையாக – அவனை விலகாது
நின்றாள். முகலாயப் பேரரசு முழுவதும் அவள் ஷாஜஹானுடன் பயணித்திருக்கிறாள்
மும்தாஜ். கணவனுக்குப் பணிவிடைகள் செய்வதோடு அவனுக்குத் தோழியாக – ஆலோசகராக – மந்திரியாக – தாயாக
என அவளது சேவைப் பரிமாணங்கள் பலப்பலவாகும்.
அவளது
பொறுப்பும் – விவேகமும் கண்டு
தனது ராஜாங்கத்து முத்திரையை மும்தாஜ் மகலின் பொறுப்பில் வைத்திருந்தான் ஷாஜஹான்
என்றால் அவளிடம் அவன் எத்தனைப் பாதுகாப்பு உணர்வு கொண்டிருந்திருப்பான் என்பதைப்
பாருங்கள்!
அன்றைக்கு
இருந்த நாட்டுச் சூழல் – அரண்மனைச் சூழல் –
பிரத்யேகமான அவளது உறவுச் சூழல், வித்தியாசமான
அவளது கலாச்சாரச் சூழல் இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கிறபோது இவ்வாறு தனது
கணவனை நிழல்போல் பாதுகாக்க அவள் எத்தனையோ இடர்பாடுகளைச்
சந்தித்திருக்க வேண்டும் என்று தெளிவாய்த் தோன்றுகிறது.
அதுவும் அவள்
தொடர்ச்சியயாய்க் கருத்தரிக்கிறாள் – தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள் – மடியில்
குழந்தை – கையில் குழந்தை – நடக்கும்
குழந்தை – வளரும் குழந்தை என அவள் குழந்தைகளைச் சுமந்து
கொண்டு – தொடர்ப் பிரயாணம் மேற்கொண்டிருக்கிறாள் – இன்றஈகு இருப்பதைப் போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லாத – மின்சாரம் இல்லாத காலம் அது - பதினான்கு
குழந்தைகள் பிறந்து – நான்கு குழந்தைகள் இறந்து வேறு
போயிருக்கின்றன!
காடு – மேடு – மலைகள் –
பள்ளத் தாக்குகள் பாலைவனங்கள் – ஆறு – குளம் ஏரி - எனக் கணவனுடன் அவள் எங்கும்
துணைக்கு நின்றிருக்கிறாள். இவ்வகையில் அவள்
பட்டிருக்கும் பாடு இவ்வுலகில் வேறெந்த பெண்ணும் பட்டிருப்பாளா என்பது சந்தேகமே! அதுவும் அவள் அரசி – சாதாரணப் பெண்ணல்ல – ராமனுடன் காட்டுக்குசென்ற
சீதைக்கு இருந்த தார்மீகச் சிந்தனைகளை நிர்ப்பந்திக்காத சமயம் அவளுடையது!
எல்லாப் போர்
முனைகளிலும் அவள் ஷாஜஹானுடன் கூடவே இருந்தாள். பிறருடன் நடந்த போர்கள் மட்டுமா – ஷாஜஹானுக்கும் – அவனது
தந்தையாகிய ஜகாங்கீருக்கும் நடந்த சண்டையின் போதும் கூட அவள் அவனுடன் இருக்கிறாள்.
1631 ல்
தக்காணப் பீடத்தில் பர்ஹான்பூரில் ஷாஜஹான் ஒரு போரில் இருக்கிறான். அவனுடன்
மும்தாஜ் சென்றிருக்கிறாள், நிறைமாத கர்ப்பிணி. பதினைந்தாவது
குழந்தையைப் பிரசவிக்கிறாள் – இயலவில்லை - பதினான்கு குழந்தைககள் பெற்று
பலவீனமான உடம்பு – கடுமையான வானிலை - முறையான மருத்துவ
வசதிகள் இல்லாத சூழல் – போர் வேறு நடந்து கொண்டிருக்கிறது –
பிரசவப்போரில் தோல்வி - உயிர் நீக்கிறாள் மும்தாஜ்.
பர்ஹான்பூரில், அவளது உடல், தபதி
நதிக்கரையில், ஜெயின்பாத் எனும் அழகிய சோலையில்
அடக்கம் செய்யப் படுகிறது.
மும்தாஜின்
மறைவால் ஷாஜஹான் நொறுங்கிப் போகிறான். அவனை எவராலும் தேற்ற இயலவில்லை. தன்னைத்
தானே தனி அறையில் பூட்டிக் கொண்டு தனிமையிலே இருக்கிறான். எவருடனும் ஒரு வாரத்தை
கூடப் பேசவில்லை!
பதினோரு
மாதங்கள் கழித்து, ஷாஜஹான்,
தானே தனக்கு உருவாக்கிகொண்ட தனிமைச்
சிறையிலிருந்து வெளிப்படுகிறான். அவ்வாறு வெளிப்பட்டபோது அவன் அப்படியே நேரெதிராய்
உருமாற்றம் அடைந்திருந்தான். அவனது தலை முடி நரைத்துப் போயிருந்தது – முதுகு கூன் போட்டிருந்தது – முகம் பழுத்த கிழம்
போல் இருந்தது!
அவனை – மூத்த மகளான – ஜகானாரா
பேகம் அரவணைத்துக் கவனித்து – அவனை மெல்ல மெல்ல
இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறாள்.
தனிமைச்சிறையில்
இருந்த போது தனது மனைவியும் உலகின் ஒப்புயர்வற்ற பெண்ணுமான மும்தாஜ் மகலுக்கு –உலகின் ஒப்புயர்வற்றதான நினைவுச் சின்னம்
அமைக்க வேண்டும் என விரும்பியதோடு – அது எவ்வாறு அமைய
வேண்டும் என மிகமிக நுணுக்கமாக் ஆய்வு செய்திருக்கிறான் ஷாஜஹான்.
தாஜ் மகல்
யமுனை நதிக்கரையில் இந்த இடத்தில் இருக்கவேண்டும் – என்பதனை அத்தனைத் துல்லியமாக
தீர்மானித்திருக்கிறான். அந்த இடம் அப்போது ஜெய் சிங் மகாராஜாவுக்கு சொந்தமாய்
இருந்தது. தனது விலை மதிப்பற்ற ஆக்ரா அரண்மனையை அந்த இடத்திற்குப் பிரதியாய்க்
கொடுத்து அவ்விடத்தை வாங்கினான் ஷாஜஹான்.
1631 டிசம்பரில்
மும்தாஜ் மகலின் சவப்பெட்டி – பர்ஹாம்பூர் தோட்டத்திலிருந்து
அகழ்ந்தெடுக்கப்பட்டு - ஒரு தங்கரதத்தில் – ஏற்றப்பட்டு –
ராஜ மரியாதையுடன் – சகல பாதுகாப்புக்க்களுடன் –
வெகு கவனமாக ஆக்ராவிற்குக் கொண்டு வரப்பட்டது – மீண்டும் – புதைக்கப்பட்டது – தாஜ்
மகல் – சிரஞ்சீவியானாள்.
தாஜ் மகலைக்
கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆயின. உலகின் உயர்தரமான பொருட்களும் – உயர்தரமான
கட்டுமானர்களும் மட்டுமே இதில் பயன்படுத்தப் பட்டன – பட்டனர்
. உலகின் நம்பர் ஒன் சலவைக் கற்கள் – நவரத்தினங்கள் – கட்டிட வடிவம் – நுண்ணிய வேலைப்பாடுகள் ஆகியன - குறிப்படத்தக்கவை. மொத்தம் இருபதாயிரம் பணியாளர்கள் தாஜ் மகல் கட்டுமான வேலையில் ஈடுபட்டனர்.
தாஜ் மகலின்
கட்டிட நேர்த்தியைப் பற்றிப் பேசத் தனி அத்தியாயம் வேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் கட்டாயம்
சொல்லியாக வேண்டும். அது என்னவென்றால் – தாஜ் மகலை அனைவரும் ஒரு காதல் சின்னமெனவே நம்பிவருகின்றனர். ஆனால்
தாஜ்மகால் உண்மையில் காதல் சின்னமல்ல அது கற்பின் சின்னம். உலக அதிசயங்களில் ஒன்றான இச்சின்னத்தைக் காண - உலகம் முழுவதிலுமிலிருந்து
மக்கள் வருகிறார்கள் – வியக்கிறார்கள்!
கற்புக்கு
நாம் வைத்திருகின்ற உயரிய ஸ்தானம் தாஜ் மகாலில் நிலை பெற்றிருக்கிறது!
தாஜ் மகல்
என்பதை நாம்
தாஜ்மகால் என்கிறோம் – அதனை மகால் என்பதை விடப் பத்தினிக்
கோயில் என்பதே பொருத்தமானதாகும். தாஜ் மகல் நம்மிடையே தோன்றி வாழ்ந்து போயிருக்கிற
அசாதாராணமான பெண்.
அவள்
புவியரசி பெற்றெடுத்த பொன் மகள்! பின்பற்றும் சமயம் எதுவாயினும் அங்கே கற்பென்னும்
காப்பு தரும் பாதுகாப்பை வேறந்த ஒன்றும் தர இயலாது எனத் தனது சொந்த வாழ்க்கை
வாயிலாகப் பதிவு செய்து போயிருக்கிறவள் மும்தாஜ் மகல்.
அவள்
காட்டியிருக்கிற – நிலைநாட்டிப் போயிருக்கிற
– முன்னுதாரணம் உலகில் வேறெந்தப் பெண்ணும் இதுகாறும்
செய்திராத சாதனை.
இலக்கியங்கள்
இதுகாறும் காட்டிப் போயிருக்கிற அத்தனைப் பத்தினிப் பெண்களையும் பலவகைகளில் விஞ்சி
நிற்கிறாள் மும்தாஜ் மகல்.
அது
மட்டுமல்ல – அவள் ஒரு “ப்ரொபஷனால் உமன்” - குடும்பப், பொறுப்பு மட்டும் கொண்ட குடும்பப்பெண்
அல்ல – அரசுப் பணியிலே நேரிடையாக இருந்தவள் –
அதுவும்
அவளது பணி கடுமையான நிர்வாகப் பணி. அந்த நிர்வாகம் பலதிறப்பட்ட நிர்வாகத் திறமைகளை
உள்ளடக்கியது – தொடர்
பிரயாணங்களை உள்ளடக்கியது – பல நெருக்கடியான உறவுத்
தொல்லைகளை உள்ளடக்கியது. சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் தாய்மை எனும்
தலையாய பொறுப்பை உள்ளடக்கியது – இருப்பினும் மும்தாஜ் மகல்
எந்த ஒரு நொடியும் அலட்டிக்கொள்ளவில்லை – ஆர்ப்பாட்டம்
செய்யவில்லை.
பெண் எனும்
முதலாயக் கடைமையை அவள் முழுவதுமாக அறிந்திருந்தாள். மனைவி எனும் நுட்பமான உறவின்
தாத்பர்யங்களை அவள் முற்றிலுமாக உணர்ந்திருந்தாள் – தாய்மை எனும் – தவறவொண்ணாப்
பதவியை அவள் பெரிதும் போற்றினாள். அரசனின் துணைவி – நாட்டு
மக்களுக்குப் பாதுகாவலாய் – பொறுப்பான தலைவியாய் இருக்க
வேண்டும் என்கிற கடமையை அவள் பணிவோடு ஏற்றுக் கொண்டாள்.
“கற்பெனும் திண்மை
உண்டாகப்பெறின்” பெண்ணிற் பெருந்தக்க யாவுள?
எனும்
வள்ளுவர் “தற்காத்துத்
தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்று
பெண்ணின் இல்லறக் கடப்பாட்டுக்கு ஒரு இலக்கணம் கற்பிக்கிறார்.
இந்தக்
குறளுக்கு மாற்று மருவில்லாத உதாரணம் மும்தாஜ் மகல்.
சக்தி
இல்லையேல் சிவம் இல்லை எனும்படியான சிறப்பான வாழ்க்கையை ஷாஜகானுக்கு அமைத்துக்
கொடுத்தவள் அவள்.
பாரதி தொழுத
கண்ணம்மாவாக கணவன் போற்றும் – தொழும் தெய்வமாக அவள் வாழ்ந்து காட்டினாள். நின்னைச் சரணடைந்தேன் என்ற
பாரதிப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஷாஜஹானின் உளநிலையைத் தெற்றெனக் காட்டுவது சத்தியம்.
நீங்களே கேளுங்கள் –மனத்திரையில் பாருங்கள்!
நின்னை சரணடைந்தேன் , கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை , உயர்வை , புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று ..
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன , கொன்று அவை போக்கென்று
தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்து இங்கு..
நின்னை சரணடைந்தேன்
பொன்னை , உயர்வை , புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று ..
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன , கொன்று அவை போக்கென்று
தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்து இங்கு..
நின் செயல் செய்து
நிறைவு பெரும் வண்ணம்
துன்பம் இனி இல்லை , சோர்வில்லை
சோர்வில்லை , தோற்பில்லை
நல்லது தீயது நாம் அறியோம் நாம் அறியோம்
நாம் அறியோம் ....
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட , தீயவை ஒட்டிட
துன்பம் இனி இல்லை , சோர்வில்லை
சோர்வில்லை , தோற்பில்லை
நல்லது தீயது நாம் அறியோம் நாம் அறியோம்
நாம் அறியோம் ....
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட , தீயவை ஒட்டிட
இன்று
பெண்களுக்கு எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் உள்ளன.
அன்றைய காலம்
போலக் கூட்டுக்குடும்ப பிரச்சினைகள் கூட இல்லை .
அப்படியிருந்தும்
கூட – நான்கு
சுவற்றுக்குள்ளே அவர்களால் அமைதியாய்க்
குடும்பம்
நடத்த இயலவில்லை. ஓரே ஒரு மாமனார் – ஓரே
ஒரு மாமியார் – மொத்தத்தில் இருக்கும் ஒரே ஒரு நாத்தனார்
அல்லது ஒரே ஒரு மச்சினன் – அதிக பட்சம் சொந்தமாயிருக்கிற ஒரே
வீடு இவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் நிர்வகிக்கத் திணறுகிறார்கள். இவர்களுக்கு
இருப்பது ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே! தனக்கு
வாய்த்திருக்கிறதோ ஓரே ஒரு கணவன் -
அவனை அன்பு காட்டி ஆதரித்து – வழிகாட்டி – நெறிப் படுத்தி –ஊக்கம்
தர அவர்கள் தடுமாறுவதும் – தடம் மாறுவதும் – இவற்றைக் காண சகிக்கவில்லை!
இது
இல்லறமன்று – இல்லறமல்லது
நல்லறமன்று!
இல்லாள்
அகத்திருக்க இல்லாததொன்றுமில்லை என்பாள் அவ்வை பிராட்டி .
இல்லாள் அகம்
எனும் வீட்டில் இருந்தால் போதாது - கணவனின் உள்ளமெனும் அகத்திலே பொருந்தி வாழ்க்கை நடத்துதல் வேண்டும்.
இல்லல்
களைவது இல்லாளின் பணி – இல்லலை உண்டு
பண்ணுவது அல்ல. ஆடவர்கள் ஆடவர்களாக – செயல் வீர்ர்களாக –
ஒழுக்க சீலர்களாக – வாழ சார்பும், உதவியும், .ஒத்தாசை செய்ய வேண்டியவர்கள் பெண்களே
பெண்களே என்பதை இந்த உலக அரங்கிலே பதிவு செய்து போயிருக்கிறவள் மும்தாஜ் மகல்.
அவளது
வரலாற்றை நாம் மீண்டும் இன்று நினைவூட்டிப் பார்த்து, நம் நிலையை சீர்தூக்கிச் செப்பனிடுவது மகளிர் வாரத்தில் நாம் நமக்குக்
காட்டும் மதிப்பாகும்.
மகளிர்
உயர்ந்தால் – ஆடவர் உயர்வர்
எனும் எளிய – ஆனால் உறுதியான சிந்தனையை உங்கள் முன்னே
சமர்ப்பித்து – உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
வாழ்க
மகளிர்! தரணி வாழ்க! தமிழ் வாழ்க!
அவ்வைமகள்
(வல்லமையில் வெளிவந்தது)
http://www.vallamai.com/?s=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0
http://www.vallamai.com/?s=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0
Subscribe to:
Posts (Atom)