Subscribe:

Pages

Wednesday, April 18, 2012

பாதைகளும் மீள்பார்வைதரும் தமிழ்ப் புத்தாண்டு!

படத்திற்கு நன்றி: new-year.funmunch.com



பாதைகளும் மீள்பார்வைதரும் தமிழ்ப் புத்தாண்டு

சந்தமுறப்பாடுகிறேன்  முழுமனதாய் அந்தாதி
அந்தாதிச் சந்தமெந்தன் செல்கதிக்கு சிந்தைக்கு
சிந்தை துரகமெனவோடியப் பிந்தை நிலை
நிலையாடிப் படம் காட்டவென் சித்தாம்புயத்து
புயமிருந்தும் கால்கையிருந்துமன்றொன்றும் 
ஒன்றும் விலக்ககிலீர் வாலாபாக் குண்டுமழை
மழைக்குருதி மண்ணைச் செம்மைச் சூளையிட
சூளையிடம்பெயலாக் கரம் சுற்றக் கண்முன்னே
முன்னே ஆங்கெழுந்த மத்துகளில் துடித்தெழுந்து
எழுந்தழைக்கா மரணம் பிழைக்ககிலீர் பலி வீணே!
வீணேபோகுமோ அவர்தம் பாடுகளும் பாதைகளும்
பாதைகளும் மீள்பார்வைதரும் புத்தாண்டு பிறந்திடவும்
பிறந்திடவும் நந்தனத்தில் முந்தைநிலை  நினைவகற்றோம்
நினைவகற்றோம் வையத்து வாழ்வை அவ்வாண்டு இந்நாளில்
இந்நாளில் நாம் வாழ ஈந்தவரை சொந்த மண்ணில் வீழ்ந்தவரை
வீழ்ந்தவரை மாத்திரைப்போதுக்குள் மரணமேற்றவரை
ஏற்றவரை தோத்திரம் செய்தே தொழுதிடுவோம் குடில்கள்தொறும்
குடில்கள்தொறும் பாடிடுவோம் பல்லாண்டு இவ்வாண்டு
இவ்வாண்டுகளும் நம் முந்தையர் பாடறியப் பேசிடுவோம் வைசாகம்
வைசாக விழாவினிலே சித்திரைக்கு முகமன் சொல்லி
சொல்லில், செயலில் மூத்தவரை ஏத்திப்பரவிடுவோம் நந்தனமாய்!!

அவ்வைமகள் 


முதல் வெட்டு கணக்காய் கணக்கின் மீது விழுந்தது!



முதல் வெட்டு கணக்காய் கணக்கின் மீது விழுந்தது!


படத்திற்கு நன்றி:computerclipart.com
கல்வியில் வெகுகாலமாக ஒரு போக்கு நிலவிவந்திருக்கிறது. அது என்னவென்றால்: மாணவர்கள் என்பவர்கள் வெற்றுப் பாத்திரங்கள்! இந்த வெற்றுப் பாத்திரங்கள்  ஒரு ஆசிரியரின் முன்வந்து அமருவன  – அவ்வாறு அமர்ந்த அப்பாத்திரங்களுக்கு, ஆசிரியரானவர் கல்வி வார்த்து அவற்றை இட்டு நிரப்புவார்!!
கல்விக்குத் தரப்பட்ட இந்த வடிவமைப்பை ஒரு மாபெரும் அறிவார்ந்த அறிவாக – அசைக்கமுடியாத விதியாக – வழக்கமாக்கி - அச்சேற்றி – அரசாணை செய்த கதையாய் – ஆசிரியர்கள் யாவரும் உயர் பீடத்திலேயே வைக்கப்பட்டு காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வருவதானார்கள்.
இப்போக்கு, எவரும் குறையொன்றும் சொல்லாமலேயே பலகாலமாய் வழக்கில் நின்று வருகிறது என்றால் ஆசிரியர்கள் யாவரும் உண்மையிலேயே அத்தனை உயர்வானவர்களா? குற்றம் குறை அற்றவர்களா?
பலதுறைகளிலே இதே மாதிரியான நிலைமை தான்!!
உண்மையான மதிப்பு எவர் மீதோ எதன் மீதோ இருக்க, நடைமுறை மதிப்பு வேறு எவர் மீதோ எதன் மீதோ இருக்கும்!
மருத்துவம் – மருத்துவர்கள்!
அரசாங்கம் – அதிகாரிகள்!!
நீதி – நீதிபதிகள்!
காவல்துறை – காவல் அதிகாரிகள்!
அதிகாரிகள் – அடிமட்ட ஊழியர்கள்
அமைச்சர்கள் – அவர்களது உதவியாளர்கள்
அதற்காக-
அனைத்துக் காவல் அதிகாரிகளும், அனைத்துப் பிற அரசு அதிகாரிகளும், அனைத்து நீதிபதிகளும், அனைத்து மருத்துவர்களும், மதிப்புதரத்தக்கவர்கள அல்லர் என்பதல்ல.
எந்த ஒரு துறையிலும் கண்ணியமும், கடப்பாடும், தொழில் நேர்மையும் – சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் யாவரும் மக்களது மதிப்பிற்கும் வணக்கத்திற்கும், ஏன் பக்திக்கும், வழிபாட்டிற்கும் கூட உகந்தவர்கள் தாம்! அவர்களை வாழ்த்துவதோடல்லாது, அவர்களது சொல்லை மறுபேச்சில்லாமல் கேட்பதுவும் “நம் கடனே!” என மக்கள் எண்ணுவதும் சரியான செயல்தான்!
கல்வி –ஆசிரியர் இந்த ஜோடியின் நிலைமையும் மேற்தகையதே!!
எனினும், கல்வி என்பது மற்றவற்றைக் காட்டிலும் அத்தனைப் பிரியமான – அத்தனை வீரியமான – அத்தனை முக்கியமான ஒரு வாழ்க்கைப் பொருளாய் இருப்பதால் – அதனின் பணியாளர்களான ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்களாகிறார்கள்.
கல்விப் பணியாளர்களான ஆசிரியர்கள் பிற துறைகளில் இருக்கக் கூடிய பிற பணியாளர்களைக் காட்டிலும் கூடுதலான முக்கியத்துவம் பெறுவதன் காரணம், கல்வியின் நேரிடைப் பெறுமானர்களான  (receiving end) மாணாக்கர்கள் ஆசிரியர்களோடு மட்டுமே நேரிடையாகப் பழக வேண்டிய, பரிவர்த்தனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. பிற துறைகள் என்றால் ஒரு பணியாளைரை விட்டு/விடுத்து மற்றவர்களோடு பரிவர்த்தனை செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கல்விக் கூடங்களில் மாணாக்கர்களுக்கென  கல்விப் பரிவர்த்தனைக்கு உள்ள ஓரே நபர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. கல்வித்துறையின் – கல்விக்கூடங்களின் – தனித்துவ அமைப்பு அவ்வாறானது!
இத்தகு ஒரு வித்தியாசமான அமைப்புக்கு அச்சாரமாய் வருவன:
(1)      கல்விக்கூடங்களிலே வகுப்பறைக் கல்விக்காக இருக்கக் கூடிய கால நெருக்கடி (சென்ற இதழில் இதுபற்றிப் பேசினோம்)
(2)    பெற்றோர்களின் உயிரினும் மேலான மக்கள் செல்வம் ஆசிரியர்களது ஆக்கினையின் கீழ் வருதல். 
(3)       பெற்றோர்களுக்கு இருக்கின்ற கால நெருக்கடி.
(4)       பிரச்சினையென ஒன்று வந்து விட்டால், ஒரு கல்வியாண்டின்போது ஒரு குழந்தையை ஒரு பள்ளியிலிருந்து/கல்லூரியிலிருந்து  விடுவித்து இன்னொரு பள்ளிக்கு/கல்லூரிக்கு அனுப்பவியலாத நடைமுறைச் சிக்கல்கள்.
(5) அந்தக் கல்வி ஆண்டை எப்படியோ “பல்லைக் கடித்தபடி” ஓட்டிவிட்டாலும், அடுத்த ஆண்டு வேறொரு நல்ல பள்ளியில் இடம் கிடைக்காது எனும் நிலைமை. 
(6)   ஆசிரியர்கள்  நடத்தும் தேர்வுகளும் அதில் அவர்கள் வழங்கும் மதிப்பெண்களும் மட்டுமே மாணாக்கர்களின் கல்வித் தலைவிதியை  முடிவு செய்வதான நிலை.
(7)       ஆசிரியர் தரப்பிலிருந்து மாணவர்களுக்கு வருவதான பெரும்பாலான பிரச்சினைகள் உணர்வு நிலையில் – மன நிலையில் – குழந்தைகளின் எதிர்காலத்தில் – என  நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையன என்பதால் – நீதி கிடைக்காத இடத்தில் முட்டி மோதிக்கொள்வதை விட - பொறுத்துக் கொள்ளும்  மனோபாவத்தை வளர்த்துக்கொள்வதையே உயர்ந்த கோட்பாடாய்க் கொள்ளும் நடுத்தர்வர்க்கத்தினரே அதிக எண்ணிக்கையில் இருப்பதான நிலைமை!   

இந்நிலையில், வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்களுடன் உழன்று கொண்டிருக்கும் பெற்றோர்கள், கல்விக்கூடங்களில் தமது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் எத்தனையோ அநீதிகளை நிதமும் உள்வாங்கிய படிதான் காலம் தள்ளிவருகிறார்கள். பள்ளிகளிலிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் தினசரி வருகின்ற இவ்வாறான பிரச்சினைகள் பெற்றோரின் நிம்மதியைக் குறைத்தும், குலைத்தும் வருவது இவர்களது ஆளுமையையே பாதிக்கின்ற தீவிரத் தன்மையுடையது என்றால் அது மிகையில்லை.   
மேலும் சில பிரச்சினைகள் உண்டு:
(8)மாணாக்கர்கள் செலுத்துகின்ற கல்விக் கட்டணத்திற்கு இணையானதாக வழங்கப் படுகின்ற கல்வியின் தரம் இருக்கின்றதா என்பதைக் கண்காணிக்கவும், குறையிருப்பின் அதனைக் கண்டிக்கவும், செப்பனிடவும் முறையான ஏற்பாடுகள் இல்லாதிருத்தல். 

(9)  ஆசிரியப் பணிக்கு அமர்த்திவிட்டதாலேயே, ஆசிரியர்கள் அனைவரும் நன்றாய்க் கற்பிக்கிறார்கள் என்பதான முடிவுடன் கல்விக்கூடங்கள் – கல்வித்துறை மேலிடங்கள் இயங்குவது ஒரு வாடிக்கையாகிப்போன வேடிக்கை நிலவுதல்.
(10) “Teacher Effectiveness” எனும் ஆசிரியத்தொழில் திறமை, வகுப்பில் வெளிப்படுகிறதா என்பதனை எடைபோட்டுச் சரிபார்க்கும் முறைமைகளும் – விருப்பமும் இல்லாத கல்வி நிறுவன நிர்வாகங்கள் – கல்வித்துறை அதிகாரங்கள் என, சட்ட ஓட்டைகளில் ஜீவிக்கும் யதார்த்தங்கள்.
(11) நுகர்வோர் தொடர்பிலே நேரடியாக இருக்ககூடிய அனைத்துப்  பணியாளர்களும், சுய ஆளுமையிலும், பழகு பாங்கிலும், “ethics”  என்று சொல்லக்கூடிய பணிசார் ஒழுங்கிலும் தேர்ச்சி பெற்றவர்களாக – இவற்றில் பிசகற்றவர்களாக – நடை, உடை, சொல், தொனி, முகபாவங்கள், உடல் அசைவுகள், கண்ணோட்டம் ஆகியனவற்றில் மிகுந்த கண்ணியம் உடையவர்களாக, ஒழுங்குவிதிகளைக் கடைபிடிப்பவர்களாக இருக்கவேண்டிய அவசியம் உள்ள சூழ்நிலையில், நுகர்வோர் தொடர்பிலே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் இவற்றுக்கெல்லாம் தள்ளுபடி பெற்ற நிலைமை.
(12) நுகர்வோர் எனும் நிலையில் இல்லையென்றாலும், கற்பவர்கள் என்ற நிலையிலாவது மாணாக்கர்கள், ஆசிரியரின் – கற்பித்தல் – ஆளுமைத்திறன் – கற்பிக்கும் பாடத்திலே அவருக்கு இருக்கக் கூடிய பாண்டித்தியம் ஆகியனவற்றை மதிப்பீடு செய்யும் உரிமையும், அந்த மதிப்பீட்டை “Teacher Effectiveness” ன் அளவீடாக எடுத்துக் கொள்ளும் ஏற்பாடும் இல்லாத நிலவரம் இருப்பது.   

இன்னமும் பலவற்றைச் சேர்க்கலாம்! பட்டியலை நீட்டுவது நமது குறிக்கோளல்ல. சமுதாயத்தின் முக்கியமானதொரு சேவைப் பணியும், அதில் சேவை செய்யும் முக்கியமான பணியாளர்களும் “accountability” என்று சொல்லக் கூடிய “பதிலிறுக்கும் – பொறுப்பேற்கும்” நிர்ப்பந்தத்திலிருந்து எவ்வாறு விடுபட்டு வாழ்ந்துவருகிறார்கள் என்பதை நாம் உணரும் போது சமுதாய வியாதிகளுக்கு மருந்தாய் அமையவேண்டிய கல்வியே ஒரு சமுதாய வியாதியாக மாறி விட்டிருக்கிற ஆபத்தை உணருகிறோம்.

ஆக, சமுதாயத்திலே ஆசிரியர்களது “மதிப்பு” என்பது காலம் காலமாக மக்கள் கல்வியின் பால் வைத்திருக்கின்ற மதிப்பால் ஏற்பட்டதுதான் தானே ஒழிய ஆசிரியர்களின் பால் வைத்திருக்கிற மதிப்பு அல்ல எனத் தெரிய வருகிறது.
மாணவர்கள் வெற்றுப் பாத்திரங்கள் - அப்பாத்திரங்களுக்கு, ஆசிரியரானவர் கல்வி வார்த்து இட்டு நிரப்புதல் என்கிற “மாடல்” கல்வியிலும் சமுதாயத்திலும் நன்மைகளை விடுத்து பெரும் தீமைகளையே செய்வதானது! அறிவுச் செல்வம் என்பது ஆசிரியர்களின் தனிப்பட்ட சொத்தாய் மாறி, கல்வி, ஆசிரியர்களை மையமாய் வைத்து எழும்பியது! இவர்களை மையமாய் வைத்து கல்விக்கூடங்கள் எழும்பின காளான் முளைத்த கணக்காய்!! 
வெற்றுப் பாத்திரங்களை நாங்கள் தாமே இட்டு நிரப்புகிறோம் என்கிற     கல்வியாளர் மனோநிலையினால் – பல பாத்திரங்கள் காலியாகவே அனுப்பப்பட்டன. இவர்கள் வீசிப்போட்ட கல்விப் பிச்சையைப் பிடித்துக்கொள்ள  முடியாத பாத்திரங்கள் ஓட்டைப் பாத்திரங்களாக ஒதுக்கப் பட்டன.
பள்ளியின் வகுப்பறையில் மறுக்கப்பட்ட கல்வியை ட்யூஷன் மையங்களில் கூடுதல் காசையும் – கூடுதல் நேரத்தையும் ஒதுக்கி – மாணவர்கள் பெறவேண்டியதாயிற்று. இந்த கல்வித் தேடல் ஒவ்வொரு இல்லத்திலும் எதிரொளிக்கலானது.
இவ்வகையில் முதல் வெட்டு கணக்காய் கணக்கின் மீது விழுந்தது!
வகுப்பில் கணக்குப் புலிகள் கண்டு மாணவர்கள் அணுகமுடியாத அச்சம் கொண்டனர்!
பிதாகரஸ், இவர்களது காதில் மட்டுமே ரசியமாய் தனது தியரத்தை ஒதிவிட்டுச் சென்ற கதையாய் இவர்கள் சூத்திரங்களை விளக்கச் சுணங்கினார்கள்!   
எப்போதும் வேறு ஏதோ ஒரு எண்ண ஓட்டத்துடன் இவர்கள் ஒட்டுதல் இல்லாமல் பள்ளியில் உலா வரலானார்கள்!  பிற ஆசிரியர்களுடன் ஓரிரு வார்த்தைகள் கணக்காய்த்தான் பேசலானார்கள்!
மாலையில் மணியடிக்கும் போதே பள்ளியை விட்டு வெளியேறிய முதல்வர்கள் இவர்களே!
காலையில் மணியடித்து ஓய்ந்த பின்பு துல்லியக் கணக்கில் பரபரவென நுழைபவர்களும் இவர்களே!
டியூஷன் தாட்கள் பள்ளியிலேயே திருத்தப்பட்டன!
முடிபவர்கள் சாப்பாட்டு இடைவெளியிலும் கூட பள்ளியில் காணாமல் போனார்கள்!
பள்ளியில் வகுப்பறையில் கணிதம் கற்பிக்கும் பணி பார்ட் டைம் ஆகவும் – டியூஷன் பணி முழுநேரமுமானது!
மொத்தத்தில் கணித ஆசிரியர்கள் பள்ளியில் கணக்காய் அவ்வப்போது தென்பட்டார்கள்!

மேலும் பேசுவோம்

   
  

Book Review: Renuka Rajasekaran, Become A Scientist: Ask the Right Sequence of Questions


Book review:  Become A Scientist: Ask the Right Sequence of Questions, Renuka Rajasekaran, reviewed by Prof. B. Viswanathan,  Bulletin of the Catalysis Society of India, 11(2012)1–2

----------------------------------------------------------------------------------------------------------------------


Book Review
Become A Scientist: Ask the Right Sequence of Questions
Author: Renuka Rajasekaran
VDM Verlag Dr. Müller e.K.
ISBN 978-3-639-32778-6, paperback, 200 Pages

It is surprising to this reviewer that one can generate a coherent and fully informative text on this special topic.   The author has brought her skills and knowledge into a successful compilation through her extensive original research in this book.
The book takes the statement of Aristotle that ‘it is in the answers to the questions that we ask our knowledge exists’ and goes to prove how this will be trueIn eight distinct chapters, the author has brought out the complicated and confusing concepts of question and appropriate answers which we can research today; she demonstrates how the questions are generated and how once the question is available the answers will be certainly found out.   This exercise is demonstrated with a number of most appropriate examples like the introduction of the Polaroid camera and also the current famous theories of relativity from that of a falling man. 
It is surprising to note that the reinventing the wheel takes so much of our resources but still the activity continues.   This can be an eye opener for many of us who seem to indulge in so called research which may border in the domain of reinventing the wheel.   The author has clearly explained the four stages of research activity and has shown to the readers how this activity has to be pursued.
The concept of discovery has been adequately dealt with in Chapter 2.   The essence of this chapter is reflected in the following lines “Questioning not only initiates a movement towards knowing that is intelligent and rational but also is a guiding methodology by which we discover all future knowledge.” This chapter rightly points out that the practice of questioning is a human desire to know and that when expanded properly leads to unrestrictedly to know everything.
The next chapter on questioning not only recognizes the cognitive components that generate questioning but also inspire reflections that automatically lead to simple solutions. This chapter will be a great treat for all of us who toil to question mostly in non-coherent settings.
Schemas of questioning attributable to Aristotle, Dillon, Lehnert, Graeser and Eris are discussed in Chapter 4. It has been identified that the schema of Dillon stands unique and the details of this schema have been outlined in detail in Chapter 5. The applications of Dillon’s schema are demonstrated with adequate examples in Chapter 6. In Chapter 7, the author goes on to demonstrate how Dillon’s schema can be adapted for technology- and design-oriented issues which is great relevance for today’s world which hovers around multifunctional devices. In the final chapter, the author presents and delineates the Ten Commandments for Data Prospecting in Sciences and even comments on the nature of databases that must be able to satisfy the aspirations of the generation.
On the whole, the author has placed a wealth of not only information but also practice with appropriate examples which can truly inspire young questioning minds.   In a nutshell, the author has done a great service to the scientific community which has been most often in wilderness.
As has been pointed out in the preface by Dennis L. Carpenter, Ed. D. Assistant Superintendent, Newton County School System that “Written in simple English, this book takes the reader through the joyful voyage of scientific discoveries to the new shore of Knowledge Discovery to enhance the quality of the world in which we live. Yes. Data prospecting is sure to offer new jobs!! Read Dr. Rajasekaran’s Become a Scientist: Ask the Right Sequence of Questions to explore these.” There cannot be a better prescription than this to recommend this book.


B. Viswanathan
Professor
National Centre for Catalysis Research
Indian Institute of Technology, Madras
Chennai-600 036, India




ஆசிரியரை தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்ப்பது தகுமா?


ஆசிரியரை தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்ப்பது தகுமா?

 படத்ஹ்டிற்கு நன்றி: younglearnersx.blogspot.com
வகுப்பறையில் மாணாக்கர்கள் பாடத்திலிருந்து விலகி, தாமே தமக்குள்   நடத்திக் கொள்ளும் “தள்ளிய” கல்வியும் தாளாக் கல்வியும் கற்பித்தலின் வெள்ளாமை எனக் கண்டோம். இது தரும் விளைவு மாணாக்கர்களின் தேர்ச்சியில் எதிரொலிக்கின்றது – எதிரொளிக்கின்றது என்பதும் கண்டோம். கல்வியில் இது ஒரு எதிரிடைவினை – இது ஒரு ஆற்றல் கசிவு –– இது ஒரு காலவிரயம் – இது ஒரு மனிதவளச்சேதாரம் - இது ஒரு மூலாதார பலவீனம்.  ஒட்டுமொத்தத்தில் இது ஒரு நிரந்தர இழப்பு – ஒரு நிரந்தர பாதிப்பு!
ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டிய அந்தத் தருணத்தில், அதைக் கற்றுக் கொள்ளாமல் விட்டுவிட்டால் அதனை கற்றுக் கொள்ளும் அடுத்த வாய்ப்பு அரிதானது. கல்விக் கூடங்களில் காலம் என்பது மாணிக்கத்தை விடவும் மதிப்பு கூடுதலானது. விரும்பினாலும் கூட ஒன்றை ஆசிரியர் இன்னொரு பீரியட் மீண்டும் நடத்தும் அமைப்பு இல்லை. கால அட்டவணைகள் அத்தனை நுணுக்கமாய் அமைந்திருக்கும். அப்படியே கொஞ்சம் உபரி நேரம் கிடைத்ததென்றால் - அதனை மீள்பார்வைக்கு மட்டும் தான் பயன்படுத்தமுடியுமே தவிர மறுகற்பித்தலுக்கு (re-teaching) அது போதாது.  இந்தக் கால நெருக்கடியினை உணரவல்லோர் யார்? ஆசிரியர்கள் மட்டுமே! மாணாக்கர்கள் வகுப்பறைக்கு வாராமல் போவதை (absent), வருகைப் பதிவேட்டில் குறித்து வைத்துக் கொண்டு அதை மிகப்பெரியதொரு ஆவணமாகப் பயன்படுத்தும் ஆசிரியர்களும் நிர்வாகிகளும், வகுப்பறைக்கு சரியாய் வாராத மாணாக்கர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு – போதிய வருகைப்பதிவு இல்லாதபோது இறுதித்தேர்வுக்கு மாணாக்கர்களை அனுப்பாமல நிறுத்தும் சட்டத்தையும் கையாள்கிறார்கள். தத்தம் பதவிகளையும், அது தரும் உரிமைகளையும், இத்தனைத் துல்லியத்தோடு பார்க்கும் – பயன்படுத்தும் இவர்கள் – வகுப்பறைக்கு வந்தும் கூடப் படிக்கவியலாது – கற்பித்தலில் பொருத்தப்படாத் துண்டங்களாய் கற்பிக்கப்படாமல் கல்விக்குப் புறத்தே நிற்கவைக்கப்பட்டு “absent” செய்யப்படுகின்ற மாணாக்கர்களுக்கு என்ன நஷ்ட ஈட்டைத் தருகிறார்கள்? வகுப்பறையில் அம்ர்ந்ததாலேயே இவர்களுக்கு அனைத்தும் கற்பிக்கப்பட்டது, இவர்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இவர்களை இறுதித்தேர்வுக்குஅனுப்புவது எவ்வாறு?
இவர்கள் மாணாக்கர்களுக்கு ஒரு நஷ்ட ஈடு தருவதாகவே வைத்துக் கொண்டாலும் கூட அது “தனது வாழ்நாள்” எனும் பொக்கிஷத்தையும் தனது பெற்றோரின் வாழ்நாள் திரட்டு எனும் ஒப்பற்ற செல்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் காணிக்கையாக வைத்துக் கல்விக் கூடத்தை நாடிய மாணாக்கரின் நஷ்டத்தை எவ்வாறேனும் ஈடுசெய்ய இயலுமா? சொற்பதம் கடந்த துயரம் அல்லவா இது? இவ்வாறு மௌன யுத்தத்தில் காலம் தள்ளும் எத்தனையோ மாணாக்கர்கள்! அவர்களின் பின்புலத்தில் ஆயிரம் குடும்ப அவலங்கள்!! 
நன்றாகப் படிக்கும் மாணவரே என்றாலும் கூட ஒரே ஒரு நாள் வாராமல் போனாலோ அல்லது வந்தும் ஏதோ மனநிலை மற்றும் உடல் உபாதைகளினால், வகுப்பெடுக்கும் ஆசிரியர் ஒரு மிகப்பிரமாதமான ஆசிரியர் என்றே ஆனபோதும், நடத்தப்படும் பாடத்தில் – கற்பித்தலில் - ஈடுபடமுடியாமல் போகுமானால் அது எத்தனைக் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதனை அந்த மாணாக்கர் மட்டுமே அறிவார்.
எந்த ஒரு பாடமும், “learning continuum” எனப்படும் தொடர் சங்கிலியாக ஒவ்வொரு படியும் அமைக்கப்பட்டு – பல படிகள் ஒன்றின் மேல் ஒன்று பொருத்தப்பட்ட படிக்கட்டுகளாகக் கட்டுமானம் செய்யப்பட்டிருக்கும் – இதனை “learning hierarchies”  என்கிறோம். இதில் சங்கிலி  இணைப்புக்கள் நிகழாது போகுமெனில் அல்லது சங்கிலி இணைப்பு பலவீனமாய் ஏற்பட்டு  – உறுதியின்மையால் இற்றுப்போய் - விட்டுப்போகுமெனில் அங்கே கற்றல் சங்கிலி உருவாவதில்லை!!
விடுபட்டுப் போன ஒரு சங்கிலி இணைப்பைப் பிறகு உருவாக்குவதென்பதோ அல்லது சரியாய் உருவாகாத இணைப்பை பின்னாளில் பற்றவைத்து ரிப்பேர் செய்வதென்பதோ சுலபமான செயல் அல்ல.
எனவே தான் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு மணித்துளியையும் கல்விக்காக மட்டுமே முதலீடு செய்யவேண்டும் என்பது அடிப்படையாகின்றது. “போனால் வராது” என்கிற முது மொழி எங்கெங்கு பொருந்துமோ தெரியாது; ஆனால் ஒரு மாணாக்கரின் கல்விக்கான, வகுப்புக் கால அளவைக்கு இது முழுக்கமுழுக்கப் பொருந்தும். “காலம் பொன் போன்றது – கடமை  கண் போன்றது” என்பது ஆசிரியர்களுக்கு–மாணவர்களுக்கு, கற்பித்தலுக்கு-கற்றலுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது என்றே கூடச் சொல்லலாம். நான் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் உண்டு.
ஒரு கல்விக்கூடத்தில் அது பள்ளியோ, கல்லூரியோ, பல்கலைக்கழகமோ அது எதுவாகினும், ஒரு கல்வியாண்டு (அல்லது கல்வி அரையாண்டு) என்றால் அங்கே மூன்று காலங்கள் உண்டு. இவற்றை முறையே, அளிக்கப்பட்ட காலம் (available time), ஒதுக்கப் பட்டுள்ள காலம் (allocated time), கற்பித்தலுக்கான காலம் (instructional time) என்கிறோம். 
அளிக்கப்பட்ட காலம் என்றால் என்ன? ஒரு ஆண்டு என்றால்உலகெங்கிலும் பொதுவாக, “அளிக்கப்பட்ட காலம்” என்பது 36 வாரங்கள் மட்டுமே. இந்தியா எனும்போது – 195 நாட்கள் (பெரும்பாலான உய்ர்நிளிப பள்ளிகளில், கட்டாயமாய்); அமெரிக்காவெனில் 180 நாட்கள் எனலாம். இதில் வகுப்பறைக் கற்பித்தலுக்காக “ஒதுக்கப்படும் காலம்” மட்டும் ஏறக்குறைய 150 மட்டுமே – மீதி 30 நாட்கள்இடைத்தேர்வுகள் – இறுதித் தேர்வுகள் விடைத்தாள் திருத்துதல் – முடிவு அறிவிப்பு - ஆசிரியர் வருகை – தயாரிப்பு -–  இன்னபிற பணிகள் – விழாக்கள் – இத்யாதி எனப் போய்விடும். இந்த 150 நாட்களே, “கற்பித்தலுக்கான காலம்.”  இந்த 150 நாட்களில் ஏறக்குறைய 10 நாட்கள் ஆசிரியர் தன வகுப்பிற்காய் தான் நடத்தும், குறு தேர்வுகள் – சிறு தேர்வுகள் – செமினார் – ஆகியனவற்றுக்குப் போய்விடும். மீதம் உள்ளவை 140 நாட்கள். இந்த 140 நாட்களில், மொத்தம் எத்தனைப் பாடங்கள் உண்டோ அத்தனையையும் மாணவர்கள் கற்றாக வேண்டும். ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் கற்பிக்கும் பாடம் ஒன்று மட்டுமே! ஆசிரியரின் சுமை என்கிற ஒன்றிற்கு இணையாக மாணாக்கர்களுக்கு இருக்கின்ற சுமையை நாம் தராசில் நிறுத்திப் பார்த்தால் புரியும் மாணாக்கர்களுக்கு இருக்கின்ற பாரமும் அழுத்தமும்!
அதுவும் கற்பித்தலுக்கான காலம் எனும் குறுகிய கால அளவையில், அவர்களுக்குக் கிடைத்தே ஆகவேண்டியதை சிறப்பான கல்வி – செழிப்பான கல்வி கிடைக்கவில்லை என்றால் அந்தக் குழந்தைகள் எத்தனைத் திண்டாடிப் போகிறார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? 
வகுப்பறைக் கல்வியின்பால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, ஒரு வகுப்பறையில், கற்பித்தலுக்கான காலத்தில், ஏறக்குறைய சரிபாதி நேரம் கற்றல் நிகழாத - கற்றல் தொடர்பில்லாத நேரமாகப் போகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் பேருண்மை காட்டுவது என்ன? மாணாக்கர்களுக்கு- கற்றலுக்கென, கறாராக ஒதுக்கியிருக்கின்ற, குறைந்த பட்சமேயான காலத்தில் பாதியளவு வீணடிக்கப் படுகின்றது என்பதே! வகுப்பறை நேரம் என்பது மாணவர்கள் விலை கொடுத்து வாங்கியிருக்கின்ற நேரம்! அது மட்டுமல்ல. ஒரு மாணவன்/மாணவி ஒரு கல்விக்கூடத்திலே – ஒரு வகுப்பறையிலே – கல்விக்காக வந்து அமருகிறான்/அமருகிறாள் என்றால் அந்த வருகைக்குப் பின்னே வெகுபல பிரயத்தனங்களும், தயாரிப்புகளும், அவனது/அவளது தனிப்பட்ட தியாகங்களும் – பெற்றோரின் – உற்றோரின் தியாகங்களும் அடக்கம். ஒரு குழந்தை பள்ளிக்கோ கல்லூரிக்கோ வருகிறான் அல்லது வருகிறாள் என்றால் அந்த வரவிற்கு – பேருந்து – ரயில் சேவைகள் தொடங்கி – பால்காரர் – தயிர்க்காரி- காய்க்காரி – என சுற்றுப்பட்டில் சேவை செய்யும் ஓராயிரம் பேர்கள் உண்டு.
விடுமுறையில்லாத ஒரு நாள் காலையில் பள்ளிதுவங்கும் சற்று முன்னர், ஒரு பள்ளிக்கு அருகில் சென்று, சாலையோரம் விட்டேர்த்தியாக நின்றபடி அந்தச் சூழலை கவனித்தால் புரியும் – அங்கே திரண்டு நிற்கும் சமுதாய இயக்கம்! இந்த இயக்கம் எது கருதி? இந்த துடிப்பு எது நோக்கி? இந்த ஆர்வம் எதைப் பார்த்து? இந்த சமுதாயத்தின் எதிர்காலப் பிரஜைகளான இந்தப் பிஞ்சுகள் கற்றவர்களாக – வல்லவர்களாக – நல்லவர்களாக – வளர்ச்சிமாற்றம் அடைய வேண்டுமென்ற ஆன்ம வேண்டுதலல்லவா இது?     
இவ்வாறு மாணவர்கள் வகுப்பறையை வந்தடைந்து அங்கு அமரும் அதி அற்புதமான வகுப்பறைக் காலத்திலே அவர்கள் இன்னென்னவற்றைக் கற்க வேண்டும் – தேர்ச்சிநிலை அடைய வேண்டும் என்று பாடத்திட்டமும் (syllabus) தனித்தனிப்பாடங்களின் வரைவும் (curriculum map) இயம்புகின்றன. அதனை அவர்கள் தெளிவுறக் கற்குமாறு செய்வதற்காகவே வகுப்பறைக்கு ஆசிரியர் அனுப்பப்படுகிறார்.
எனவே கல்வி எனும் நிகழ்வில் மாணாக்கர்களுக்கு இருக்கின்ற உரிமை, எதிர்ப்பார்ப்பு, நிறைவு, என்பவை மட்டுமே கல்விக் கூடங்களின் கற்பிப்போரின் ஒரே குறிக்கோளாக இருக்க முடியும்!! ஏனெனில் இது ஒரு சமுதாயப் பணி!!    
 வகுப்பறை என்பது சிறு சமுதாயம் என்கிறோம். அவ்வாறெனில் ஒரு சமுதாயத்தின் தன்மையை வகுப்பறையில் காணமுடியும் – காணவேண்டும் என்பது கடப்பாடு. ஒரு சமுதாயத்திலே எத்தனை தனிமனித வேறுபாடுகள் உள்ளனவோ அத்தனை வேறுபாடுகள் மாணவர்களிடையே காணப்படுவது இயற்கை என்று சென்ற பகுதியில் அறிந்தோம். இந்த தனிப்பட்ட பண்புகளை அறிந்துணர்ந்து அவர்களுக்குக் கல்வி புகட்ட வேணுமேன்பது ஆசிரியரின்  தலையாய  பணி. அப்படியென்றால் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் வேண்டுமே! இது என்ன நடக்கின்ற காரியமா? என நீங்கள் வினவுகிறீர்கள். நல்ல கேள்வி. ஆனால், உண்மையில் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் வேண்டுமென்பதில்லை.
மாணவர்கள் குழுமியிருக்கும் நிலையில் – அவர்களைக் குழுவாக நிறுத்தி – அவர்கள் ஒவ்வொருவரும் கற்குமாறு தனித்துவ நிலையில் பாடம் புகட்டுவதுதான் ஆசிரியப் பணியின் பெற்றியும் வெற்றியும்!
இது சாத்தியமே!!
சிறிதோ பெரிதோ எதுவாகினும் சமுதாயம் எனும்போது அது ஒரு தொகுதி என்பதை நாமறிவோம். ஒரு சமுதாயம் பொதுவாக எவ்வாறு இருக்கும் - இயங்கும் எனும் ஒரு அடிப்படை வினாவை இப்போது எழுப்புவது பொருத்தமாக இருக்கும். சமுதாயம் எனும் எந்த ஒன்றையும், இயல்பு விகித அமைப்பு எனும் ஒரு வரைபடத்தின் மூலம் விளக்குவார்கள். இதனை “Normal Distribution Curve” என்பார்கள் (படத்தில் காண்க).
இந்த வரைபடத்தின் மூலம் நாமறிவது யாதெனில், எந்த ஒரு குணாதிசயத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த குணாதிசயம் ஒரு சமுதாயத்தில், இயல்பு விகித அமைப்பிலேயே காணப்படும் என்பது. இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குவது நல்லது.
அழகு எனும் ஒரு குணாதிசயத்தை எடுத்துக் கொள்வோம். இயல்பு விகித அமைப்பு வரைபடத்தின் படி, உலகில் 68%   பேர் அழகில் சராசரியர்களாகவே இருப்பார்கள். 9.2%  பேர் சராசரியை விட ஒரு படி கூடுதலான அழகுடையவர்களாக இருப்பார்கள்; 9.2% பேர் சராசரியை விட ஒரு படி குறைவான அழகுடையவர்களாக இருப்பார்கள்; 4.4.% பேர் சராசரியை விட ஒன்றரை மடங்கு கூடுதலான அழகுடையவர்களாக இருப்பார்கள்;  4.4.% பேர் சராசரியை விட ஒன்றரை மடங்கு குறைவான  அழகுடையவர்களாக இருப்பார்கள்;  1.7%  பேர் சராசரியை விட இரு மடங்கு கூடுதலான   அழகுடையவர்களாக இருப்பார்கள்;  1.7%  பேர் சராசரியை விட இரு மடங்கு குறைவான  அழகுடையவர்களாக இருப்பார்கள்;          0.5% பேர் சராசரியை விட இரண்டரை மடங்கு கூடுதலான அழகுடையவர்களாக இருப்பார்கள்; 0.5% பேர் சராசரியை விட இரண்டரை மடங்கு குறைவான அழகுடையவர்களாக இருப்பார்கள்; 0.1% பேர் சராசரியை விட மூன்று மடங்கு கூடுதலான அழகுடையவர்களாக இருப்பார்கள்; 0.1% பேர் சராசரியை விட மூன்று மடங்கு குறைவான  அழகுடையவர்களாக இருப்பார்கள். சமுதாய மக்களின் குணாதிசயங்கள் காட்டும் அதே அமைப்பு தான் வகுப்பறை மாணவ சமுதாயமும் காட்டுகிறது. முன்னதிலிருந்து தானே பின்னது வருகின்றது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!!
ஒரு கரண்டி நிறைய மக்களை சமுதாயத்திலிருந்து எடுத்து வகுப்பறைக்குள் வைத்தால் எப்படி இருக்கும்? அவ்வாறு வைத்தது போன்ற “மாதிரி” (sample population) தான் வகுப்பறை!! எனவே கல்வியாளர்கள் நிறைந்த ஆய்வுகளுக்குப் பிறகு இயல்பு விகித அமைப்பு வரைபடத்தின் படியே வகுப்பறை இயங்குவதை உறுதி செய்திருக்கிறார்கள்.     


படத்திற்கு நன்றி:http://www.regentsprep.org/Regents/math/algtrig/ATS2/NormalLesson.htm

இப்போது, மாணாக்கர்களின் பொதுக் குணாதிசயத்தைப் புரிந்து கொள்வது எத்தனை எளிது பாருங்கள்!!
இங்கு எடுத்துக் காட்டாக நாம் எடுத்துக் கொண்ட “அழகு” எனும் குணாதிசயத்திற்குப் பதிலாக – கற்பிப்பதைப் புரிந்து கொள்ளும் திறன்”, “கேள்விக்கு பதிலுரைக்கும் திறன்”, என - கற்றல் தொடர்பான பல்வேறு குணாதிசயங்களை மாற்றி மாற்றிப் பொருத்திக்கொண்டே போகலாம்.
இவ்விதமான இயல்பு விகித “கற்றல்”  குணாதிசய அமைப்போடு தான்  ஒவ்வொரு வகுப்புக்குள்ளேயும் மாணவர்கள் வருகிறர்கள். இந்த அமைப்பை மாணவர்களின் நுழைவுப் பண்புகள்  (input characteristics)  என்கிறோம். ஆனால், பாடதிட்டத்தின்படி ஒரு பாடம் நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாணவரும் இன்னென்ன அறிவு (knowledge), இன்னென்ன புரிந்து கொள்ளல் (understanding), இன்னென்ன திறன் (skill),  இன்னென்ன மனப்பாங்கு (attitude) ஆகியவற்றோடு வெளிநடக்கவேண்டும் என்று தனித்தனிப்பாட வரைவு காட்டுகிறது. இதனை செல்கைப் பண்புகள் (output characteristics) என்கிறோம். நம் வகுப்புக்குள்ளே நுழையும் மாணவர்களுக்கு எத்தனை வலிவோடு – எத்தனை ஆற்றலோடு – எத்தனை – விசுவாசத்தோடு – எத்தனை பரிவோடு – எத்தனை துடிப்போடு கற்பித்தால் அவர்கள் கற்றலில் சிறந்து – தனித்தனிப்பாட வரைவு காட்டுகிற செல்கைப் பண்புகள் அடையப்பெற்றதோடல்லாது அரசின் பொதுத் தேர்விலும்  சிறப்புறுவார்கள் என்பதுதான் ஆசிரியரின் பணி.
இந்த இயல்பு விகித அமைப்பு வரைபடம் என்பது ஆசிரியப் பயிற்சியிலே ஒரு முக்கியமான பாடமாகும். இதனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாது – நீர்த்தோ விடுத்தோ ஒரு ஆசிரியப் பயற்சி இருக்குமேயானால் அதைச் சாடுவது நன்று.
சமுதாய இலக்குகள் யாவுமே ஒரு கடைக்கோடி சாமானிய மனிதனுக்காக வடிவமைக்கப்படுபவை.  கல்வி எனும் சமுதாய இலக்கில் – வகுப்பறையில் - பாடதிட்ட இலக்குகளும் அவ்வாறானவையே. எவனொருவன்/எவளொருவள் கடைசி பெஞ்சில் அமர்ந்தபடி என்னால் “பட்டம் பெற இயலுமா?” என்ற மனக்கிலேசத்துடன் வகுப்பறை விட்டத்தையும், ஜன்னல் வழி, விண்ணில் சலலசலக்கும் பட்டத்தையும் மாறிமாறிப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி பதட்டத்துடன் அமர்ந்திருக்கிறானோ/ளோ அவனை/அவளை, கனிவான கண்ணோட்டம் எனும் பேரொளி காட்டி, இணக்கமான அசைவுகளின் மூலம், தாயினும் சாலப் பரிந்து, கல்வி எனும் கரத்தால் அரவணைத்து, கற்பித்தல் எனும் கன்னல் சாற்றில் கரைந்த கற்கண்டாய் சித்தாந்தங்களைப் பதமாய்ப் பரிமாற, அப்பரிமாறலில் - அப்பரிமாற்றத்தில், கற்றல் பெற்று அக்குழந்தை உருமாற்றத் தோடு – உளமாற்றமும் அடைந்து – சமுதாயத்தின் பால் பற்று கொள்வான்/கொள்வாள் எனில் அந்த ஆசிரியரை தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்ப்பது தகுமே! தகுமே!
இன்னமும் பேசுவோம்
அவ்வைமகள்
(வல்லமை இதழில் வெளிவந்தது)
http://www.vallamai.com/?s=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88+

பிச்சைப்புகினும் கற்கை நன்றே?


பிச்சைப்புகினும் கற்கை நன்றே?



படத்திற்கு நன்றி:ccsf.edu
எது எவ்வாறு கற்பிக்கப்படுகிறதோ, அதுவே அது எவ்வாறு கற்றுக் கொள்ளப் படுகிறது என்பதை முடிவு செய்கிறது என்கிறோம். இது ஏனெனில். கல்வி என்பது ஒரு இயக்க வினை (Dynamic process). இந்த வினைக்கான இயங்கு விசையாக அமைவது  Teaching–Learning எனப்படும் ஒற்றை நிகழ்வாகும். ஆம்! கல்வியாளர்கள், வகுப்பறைக் கல்வியில்,  போதித்தல், கற்றல் என்கிற இரண்டையுயம் வெவ்வேறாகப் பார்ப்பதில்லை. இவ்விரண்டையும் இணைத்து, போதித்தல்-கற்றல் என்கிற ஒரு இரட்டைக் கிளவியாகவே அதனைக் காண்கின்றனர். ஏனெனில் இவை இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்பவை (simultaneous processes).
ஒரு சித்தாந்தத்தை ஆசிரியர் போதிக்கிறார் என்றால் அது அவர் போதித்து முடித்த பின்பு தான் மாணவர்களின் மனதுக்குள்ளே பதிகிறது என்பது இல்லை. அவரது போதனையின் பாதியிலே பாதி பதிகிறது என்றில்லை – கால்வாசி போதனையில் பதிய ஆரம்பிக்கிறது என்றில்லை. ஆசிரியர் துவக்குகிற முதல் சொல்லோ அல்லது முதல் ஒரு சில சொல் துளிகளோ கூட ஒரு மாணவனை வேறொரு கற்றல் படிக்கும் (learning step), உணர்வு தளத்திற்கும், கிரகிப்பு நிலைக்கும் இட்டுச்சென்று விடக்கூடும். ஆசிரியர் தொடர்ந்து உதிர்க்கிற இட்டுக் கட்டு வாசகங்கள், vocabulary என்கிற, பாடத் தொடர்பான மொழிக்கோவையை முன்னிறுத்தும் திறன், செரிவான – பொருத்தமான, எடுத்துக் காட்டுக்கள்,  விளக்குமுகமாக அவர் எடுத்தாளும் சொல்வளம் ஆகியன அந்த மாணவன்/மாணவி அக்கணத்திலே அடைந்திருக்கிற உணர்வுத் தளத்திற்கும் கிரகிப்பு நிலைக்கும் தகவுடையதாக இருக்குமேயானால் அவனது/அவளது கற்றல் கற்பித்தலை ஒட்டி அமையும்.
ஆசிரியரின் போதனை பாணி மாணாக்கரின் கற்றல் பாணிக்கு இணக்கமானதாக — இணைப்பை ஏற்படுத்துவதாக அமையவில்லை எனில், அங்கே கற்பித்தல் மட்டுமே நிகழும்.
கற்றல் நிகழாதா என் நீங்கள் கேட்கலாம்!
எதிர்ப்பார்த்த கற்றல் (intended learning) நிகழாது, மாறாக, மாற்றுக் கற்றல் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும்.
மாற்றுக் கற்றல் என்பது என்ன?
அத்தருணத்தில் – அந்த பீரியடில் வேண்டாக் கல்வி (unintended learning)
மாற்றுக் கற்றல் என்பது ஒரே வகுப்பில் பல்வேறு நிலைகளில் நிகழும். இதனை விளக்குமுகமாக நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு எளிய எடுத்துக்காட்டைத் தெரிவு செய்து கொள்கிறேன்.
ஆசிரியர் அணுவின் அமைப்பைப் பற்றிய பாடம் நடத்துகிறார். இவர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் எவ்வாறு கட்டம் கட்டமாகத் தொடர்பற்றுப் போகிறார்கள் என்று பாருங்கள்.
   (1)  தொடக்கத்திலேயே தொடர்பு விட்டுப் போன நிலை
ஒரு மாணவனோ அல்லது சில மாணவர்களோ போதிக்க வந்த சித்தாந்தத்தின் முளையோடு நின்று விட்டு மேலே செல்ல இயலாது போராடியபடி இருக்க ஆசிரியர் மேலே மேலே போய்க் கொண்டிருப்பார். இந்த முளை என்னதென்றால் – அவனுக்கு ஏற்கனவே (முந்தைய வகுப்பில் கற்றிருந்த காரணத்தினால்) பரிச்சயமான ஒரு சிறு அறிமுகமாக மட்டுமே இருக்கும்.
ஆசிரியர் உரை: 
அணு என்பது பொருளின் மிகச்சிறிய துகள். அதில் உட்கருவும், அதனைச்சுற்றி எலெக்ட்ரான்களும் வலம்வந்தபடியிருக்கின்றன. இது சூரியனைச் சுற்றிப் பிற கோள்கள் வலம் வருவதைப்போன்றது.
மாணவனின் உள்வினா 
எலெக்ட்ரான்கள் வலம்வந்தபடியிருக்கின்றன என்றால் உட்கரு ஏன் தன் அச்சில் தானே சுழலக்கூடாது?
  (2)பாதியிலே தொடர்பு விட்டுப்போன நிலை
இன்னும் சில மாணவர்கள் பாதியிலே தொடர்பு விட்டுப்போன காரணத்தினால் முற்றுபெறாத சித்தாந்தத்தில் சிக்குண்டபடி தவித்துக் கொண்டிருப்பார்கள்.  
ஆசிரியர் உரை:
அணு என்பது பொருளின் மிகச்சிறிய துகள். அதில் உட்கருவும், அதனைச்சுற்றி எலெக்ட்ரான்களும் வலம்வந்தபடியிருக்கின்றன. இது சூரியனைச் சுற்றிப் பிற கோள்கள் வலம் வருவதைப்போன்றது. அணுவின் உட்கருவிலே ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் இருக்கின்றன. அணு என்பது மின் தன்மையற்று உள்ளது. ------ அணு பகுக்கப் படக்கூடியது
மாணவனின் உள்வினா:
------ அணு பகுக்கப் படக்கூடியதென்றால் எப்படிப் பகுக்க முடியும்?
(3)      பாதிக்கு மேலே தொடர்பு விட்டுப்போன நிலை 
ஆசிரியர் உரை:
அணு என்பது பொருளின் மிகச்சிறிய துகள். அதில் உட்கருவும், அதனைச்சுற்றி எலெக்ட்ரான்களும் வலம்வந்தபடியிருக்கின்றன. அணுவின் உட்கருவிலே ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் இருக்கின்றன. அணு பகுக்கப் படக்கூடியது. அணு என்பது மின் தன்மையற்று உள்ளது. ப்ரோட்டான்களின் எண்ணிக்கை எலெக்ட்ரான்களின் எண்ணிக்கைக்குச் சமமானது. ப்ரோட்டான்களின் எண்ணிக்கை அணு எண் எனப்படும்.
மாணவனின் உள்வினா:
எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை ஏன் அணு எண்ணாக இருக்க முடியாது?
இந்த வினாக்கள் எவற்றையும் ஆசிரியர் தனது போதனையில், எந்நிலையிலும் எழுப்பவில்லை. இவ்வினாக்கள் மாணாக்கரின் உள்ளத்திலே எழுமே என்று எதிர்பார்த்துத் தனது பாடத்தைத் தயாரிக்கவும் இல்லை.
(  (4)   வகுப்புக்கு வருவதற்கு முன்னமேயே எல்லாம் கற்று விட்ட நிலை
ஆசிரியர் சொல்ல வந்த கருத்து இதுதான் என்பது முற்றிலும் புரிந்து விட்ட நிலையில் சில மாணாக்கர்கள் இருக்ககூடும். வீட்டில் அண்ணன் அக்கா படிக்கும்போது தானும் அறிந்து கொண்டது. ட்யூஷனில் கற்றுக் கொண்டது. டிஸ்கவரி சேனல் பார்த்து அறிந்து கொண்டது எனப் பலவிதமான காரணங்களினால் அன்றைய பாடம் முழுமையும் ஏற்கனவே அறிந்தவர்கள் இவர்கள். அதுவும், அப்பாடத்தை அத்தனை நுணுக்கத்தோடு சுவைபடக் கற்றவர்கள் இவர்கள். உப்பு சப்பில்லாது இந்த ஆசிரியர், அதே பாடத்தைக் குளறுபடி செய்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாது கொதித்துக்கொண்டிருப்பார்கள். அவ்வப்போது ஆசிரியரின் மேல் விழும் காகித ராக்கெட்டுகளும், விசில் சத்தமும் இவர்களின் உபயமாகும். ஆனால் இந்த மாணவன் தான் ராக்கெட் எறிந்தான் அல்லது சீழ்க்கையடித்தான் என்று ஆசிரியரால் கண்டுபிடிக்கவே முடியாது.

ஆளான மாணவர்களோ அல்லது விடலைகளோ நிரம்பிய வகுப்பு அங்கே பெண்ணாசிரியர் என்றால் – நான் மேற்சொன்ன மாணவர்கள் தமக்குள் ஒரு சுவாரசியமானதொரு கல்விப் பயணத்தைத் தொடக்குவார்கள்:  
ஒரு மாணவன் பெண்ணாசிரியரை, உள்ளடைகளோடோ, அல்லது அவற்றையும் விடுத்தோ படம் வரைந்து அதற்குக் கீழே, அவனது மொழிவளத்தைக் காட்டி குறிப்போ கவிதையோ எழுதி அடுத்த மாணவனுக்கு அனுப்ப, அதற்கு மேலே இரண்டாமவன் தன் படைப்புத் திறனைக் காட்ட — பல இருக்கைகள் – பல இரு கைகள் – பல பேனாக்கள் – பல பொன் மொழிகள் – பல ஜியோமித வடிவங்கள் – கோலங்கள் – சந்கேதங்கள் – என்கிற கணக்கில் சித்திரமும் கைப்பழக்கம் – செம்மொழியும் தொடர்ப்பழக்கம் என்பதாக தாள் நிறைய தாளாக் கல்வி வளர அந்தத் தாள் இறுதியில் பெண்கள் பக்கம் போய்ச் சேரும் – யாம் ஆணுக்குச் சற்றும் தாழ்ந்தோம் அல்லரே! என மகளிரும் மகிழ்வாய் “மொய்” வார்க்க, அந்த வகுப்பும் முடியும் தருவாயை நெருங்கும். அச்சமயம், ஆசிரியை பாடத்தை முடித்திருப்பார், கரும்பலகையோ, வெள்ளைப் பலகையோ அதை அழித்த படியே, மாணவர்களைப் பார்க்க, அந்த வினாடி - பெண்களுக்குள் “அப்பாவியாய்” தோற்றம் அளிக்கும் ஒரு பெண், சட்டென எழுந்து ஆசிரியையிடம் போய் சந்தேகம் கேட்க எழுந்து செல்வாள் – “ஸ்டூடண்டுக்கு என் பாடம் புரிந்து, மேற்கொண்டு கூடுதலாகத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு நான் பிரமாதமாகப் பாடம் நடத்தியிருக்கிறேன்” என்கிற பெருமிதத்தோடு அந்த ஆசிரியை அப்பெண்ணை ஆவல் மீதுற எதிர்கொள்ளும் அந்த சில வினாடிகளுக்குள், “கவிதாவைப் போல் கவனமாகப் பாடத்தை கவனிப்பவர்கள் எவருமே இல்லை” எனவேறு அந்த ஆசிரியர் பாராட்டுவார். மாணாக்கர்களும் அவரை ஆமோதிப்பதைப் போல. “Kavithaa Long Live” அல்லது “Good Job! Good Job” எனக் கரவொலி எழுப்புவார்கள். கவிதா ஆசிரியையை நெருங்கி தனது ஐயத்தை மிக பௌயமாய் வெளியிட – ஆசிரியை அதை விளக்க மும்முரமாக – கவிதாவின் இடக்கை விரலிடுக்கில் மடிக்கப்பட்ட நிலையில் கவனமாய் பொருந்தியிருந்த “அந்தத் தாள்” ஆசிரியையின் புத்தகத்திற்குள்ளோ, நோட்டுப் புத்தகத்திற்குள்ளோ மிகக் கவனமாக செருகி முடிக்கப் பட்டிருக்கும். மணியடிக்கவும், ஆசிரியர் நிறைந்த மனதோடு, மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான சேவைச் சான்றிதழ்ப் பட்டயத்தையும் சுமக்காமல் சுமந்து கொண்டு ஒருவித வெற்றி மகிழ்வோடு அறையை விட்டு வெளியேறுவார்.
இருதரப்பிலும் பார்த்தால் அது – “ஒரு பீரியட் வெற்றிகரமாக முடிந்துவிட்டது” என்று சொல்லவேண்டிய நிகழ்ச்சி. பாடத்திட்டத்தில் குறிப்பிட்டிருந்த பாடம் போதிக்கப்பட்டதாக ஆசிரியர் பதிவு செய்து விடுவார்!! மாணவர்கள் தம் கற்றலைத் தேர்வில் பதிவு செய்யும் போது தேறுவது எத்தனைப் பேரோ?  
இங்கே மாணவர்களில் இன்னுமொரு சாரார் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும்:
எந்த வகுப்பிலும் ஓரிரு அலாதியான மாணவர்கள் இருப்பார்கள். தைரியம் நிறைந்தவர்கள் அவர்கள். தெளிவாகப் பேசுபவர்கள். கற்றுக் கொள்ளுவதில் ஐயமோ தடங்கலோ ஏற்பட்டுவிட்டதென்றால், அந்நிலையிலிருந்து வெளியேற விரும்பாதவர்கள் – வெளியேற இயலாதவர்கள். அறிவு ஜீவிகள் ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் அதனைப் பல்வேறு நிலைகளில் பார்ப்பவர்கள். ஒரு துளி கோடிட்டுக் காட்டினாலும் கூட அதனை ஆழமாகச் சிந்திக்கும் சூட்சமம் கொண்டவர்கள். துறைவிட்டுத் துறை சென்று விஷயங்களை இணைத்தும் பிரித்தும் பார்க்கும் ஆற்றலும், அத்தகைய ஆய்வில் கிடைக்கும் விழுதை சுவாரசியமாக விவாதிக்கும் திறனும் உடையவர்கள். இத்தகைய மாணவர்கள் ஆசிரியரைச் சிக்கலான கேள்விகள் கேட்டுத் திக்கு முக்காட வைத்துவிடுவார்கள்.
இத்தகு மாணவர்களின் அறிவுப்பூர்வமான வினாக்களைச் சந்திக்கும் தயார் நிலையில் இல்லாத ஆசிரியர்களே வெகு பலரும்!! மாணவரின் வினாக்கள் சிறப்பானவையே – தெறிப்பானவையே – பொறுப்பானவையே – இருப்பினும் – விடை தரவியலாத குறை ஆசிரியரிடத்திலே!! மாணவனின் கேள்விக்கணைகளை எதிர்நோக்கவியலாமல் போனதை, வகுப்பறையில் மாணவன் தன்னை உதவாக்கரை கேள்விகள் கேட்டு அவமானப் படுத்தியதாக உருவகம் செய்து கொண்டு, இம்மாணவர்களை, ஆசிரியர்கள் படுத்தும் பாடு அப்பப்பா! அந்தச் சித்திரவதையை விவரிக்க வார்த்தைகள் போதா! வகுப்பறையில் அவமானப் படுத்தப் படுவதும் - வீண்பழி சூட்டப்பட்டு இவர்கள் தண்டிக்கப்படுவதும் உண்டு.
சொல்லப்போனால் இவ்வகை மாணவர்கள் சூதுவாது தெரியாதவர்கள் – எத்தனைக் கெத்தனை தைரியமாகப் பேசுவது போல் தெரிகிறார்களோ அத்தனைக்கத்தனை மென்மையானவர்கள். இவர்களின் படிப்பாற்றல் – படைப்பாற்றல் இரண்டுமே அநாயசமானது! பிரமாதமான எழுத்தாற்றல் இருக்கும். புதுக் கவிதையா மரபுக்கவிதையா – இலக்கணமா – இவர்களை வெல்ல ஆளில்லை! ஓவியம், நடிப்பு, நடனம், இசை ஆகியவற்றில் இயல்பான திறன் இருக்கும். ஆனால் கையெழுத்து நன்றாயிருக்காது.  Silly mistakes என்று சொல்லக் கூடிய அற்பப் பிழைகள் நிறைய இருக்கும் (எடுத்துக் காட்டாக: மைனஸ் குறி; முற்றுப் புள்ளி – சந்திப் பிழைகள்  கணக்கில் –step காட்டாமல் விடுப்பது – முக்கோண விதிவழி கணக்கைப் போடச்சொன்னால் கால்குலஸ் வழியில் போடுவது ஆகியன, அண்ணாவின் அரசியல் திறமை பற்றி கேட்டால் அவர் சர்வதேசத் தலலைவரராகப் பரிமளிக்காமல் போனது ஏன் என அவரை சர்வதேச அரசியல்வாதிகளோடு ஒப்பீடு செய்வது - கால்குலேட்டரைப் பயன்படுத்தி மட்டுமே கணக்கு போடச் சொன்னால் அதை மறந்துவிட்டு மனக்கணக்கிலேயே போடுவது ஆகியன.) இம்மாணவர்கள் சுருக்கமாக விடையளிக்கச் சொன்னால் – விரிவாக எழுதுவார்கள் – விரிவாக எழுதச்சொன்னால் – குறைவாக எழுதிவிட்டு ஏனையவற்றைப் படம் போட்டு – சமன்பாடுகள் – குறியீடுகள் கொண்டு காட்டி – அந்த சித்தாந்தம் எவ்வாறு தொடரும் – அதனை அறிய மேலும் என்னென்ன செயலாம் என் ஒரு திட்டவடிவத்தையும் குறிப்பிட்டிருப்பர்கள். இத்தகையதொரு விடைக்கு அவர்களுக்குக் கிடைகிற சன்மானம் என்ன தெரியுமா? தேர்வில் தோல்வி அல்லது சொற்ப மதிப்பெண்கள்!! காரணம்? புரியாத கையெழுத்து – கேட்ட வினாவுக்கு எதிர்ப் பார்க்கப் பட்ட பதிலில்லை!! நடைமுறையை மீறி எதிர்காலத்தைப் பற்றிய காலம் கடந்த சிந்தனையோடு வாழும் அறிவு ஜீவிகள் கட்டுப் பெட்டியான தேர்வுகளிலே தோல்வியைத் தழுவுமாறு ஆக்கப் படுகிறார்கள்.
ஆசிரியரின் மீது ராக்கெட் விட்டது – ஆசிரியரை ஆபாசப் படமாக வரைந்தது – விசில் அடித்தது இவையெல்லாம் செய்வது யார் யாரோ! ஆனால் இந்த மாணவர்களின் மீது இந்த வீண் பழிகள் வந்து விழும். ஒசத்த குரலில் தைரியமாய் விவேகமான கேள்விகள் கேட்கும் பிறவிக் குணம் ஒன்றால் மட்டுமே இந்த மாணவர்கள் துன்பப்படுதல் வெளிப்படை.    
இத்தகைய மாணவர்களின் நிலைப் பாட்டைப் பரிந்து பேச பள்ளி – கல்லூரி ஆகிய கல்வி நிறுவங்களின் பொறுப்புப் பதவிகளில் இருப்போரும் வாரார்!
இவர்களுக்குத் துணை வர வீட்டிலுள்ளோரும் வாரார் – ஏனெனில் இவர்களில் வெகு பெரும்பாலோர் மிகவும் ஏழ்மையான வீட்டுச் சூழல்களில் இருந்து வருபவர்கள். மேலும் வீட்டிலும் கூட படக் படக் எனக் கேள்வி கேட்கும் பழக்கம் இருப்பதால் கல்விக்கூடத்தில் தனது குழந்தையின் மீது நடத்தப்படும் அத்துமீறல்களை, பெற்றோரும் கூட  முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை.  
இவ்வாறான இழுபறிக் கல்வி வாழ்க்கையில், ஒரு நிலையில் இவ்வகை மாணவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மீதும் – கல்விக்கூடங்களின் மீதும் வெறுப்பு ஏற்பட்டுவிடுகிறது."Drop Outs" என்று நாம் சொல்கிற பள்ளிப் படிப்பை அல்லது கல்லூரிப் படிப்பைப் பாதியிலே நிறுத்திக்கொள்ளும் நபர்களில் மிகப் பெரும்பாலோர் இவ்வாறு வெளியேறுபவர்களே!!
கல்விக் கூடங்களை விட்டு வெளியேறிய நிலையில் இவர்களுக்கு இருக்கின்ற சூட்சுமம் –  சமுதாயப் பிரக்ஞை – ஆகியன அரசியலுக்குப் பொருத்தமானதாய் அமைகின்றன! இவர்களுக்கு இருக்கின்ற வாய்ப் பேச்சுத் திறமை – தைரியமான – ஆணித்தரமான விவாதத் திறமை – கவிபுனையும் ஆற்றல் – வசனங்கள் – ஆகியன அரசியலில் நல்ல முதலீடாகின்றன. ஒரு சிறிய கல்விக் கூடத்தில் பொருந்தாதவர்களாக விரட்டி அடிக்கப் பட்டவர்கள் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் கட்சியை வெகு நேர்த்தியாக நிர்வகிப்பது – இவர்களின் ஆளுமையின் கம்பீரமானதொரு வெளிப்பாடு. குறுகிய காலத்திலேயே மாபெரும் வளர்ச்சி கண்டு இவர்கள் செழிப்பது இவர்களது திட்டமிடும் திறனின் முத்திரை. இவர்கள் “மைக்கைப்” பிடித்துப் பேச ஆரம்பித்துவிட்டால், மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போல, கண்ணன் குழலை மெய்மறந்து கேட்ட ஆவினங்கள் போல நாம் அடிமையாகி விடுகிறோம் என்றால் இவர்களுக்கு உண்மையிலையே மேலாண்மைப் பண்புகள் உள்ளன என்பதற்கு அது சான்று!!
நாட்டு நடப்பை வைத்துப் பார்க்கும்போது நம்மூர் அரசியல்வாதிகள் அனைவரும் மெத்தப படித்தவர்களாக இருந்திருந்தால் – இத்தனை ஊழல் – அராஜகம் பெருத்திருக்க வாய்ப்பில்லை என்று நமக்கு அடிக்கடித் தோன்றுகிறதல்லவா?
கல்விக்கூடங்களில் படைப்பாற்றல் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அத்தனை அரவணைப்பு இல்லை – அவதிகளையே அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது நாம் குற்றம் சாட்டவேண்டியது எவரை? 
வகுப்பறை என்பது ஒரு சிறு சமுதாயம். சமுதாயத்திலே எத்தனை வேற்றுமைகள் தனிமனிதரிடத்திலே உள்ளனவோ அத்தனைத் தனிமனித வேற்றுமைகள் மாணாக்கர்களிடையே இருப்பது இயற்கை. இந்த இயற்கையை ஆராதிக்க விழையாத – இந்த இயற்கை அமைப்புக்கு சேவை செய்ய விழையாத –அற்புதமான மனித குல வித்துக்களைக் கொண்டு  கல்விப்பயிர் வளர்க்க முன்வராத வணிக வளாகங்களாய் கல்விக் கூடங்கள் மாறிப் போனதெனில் இது கல்வியின் பிழையா? கற்பிப்பவரின் பிழையா?
இத்தருணத்தில் எனக்கு நினைவுக்கு வந்த வாசகம் சர் கிளாஸ் மோசரின் கூற்று: 
Education costs money, but then so does ignorance – Sir Claus Moser
 “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” என்று பெற்றோர்கள் தம் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தமது குழந்தைகளுக்கான கல்வியில் நிறைய முதலீடு செய்கிறார்கள். அவ்வாறு அங்கு சென்று சேர்ந்த தம் மக்களிடம் அறியாமையே நிலைப்பாடாகுமெனில், இதனை அவர் எவரிடம் முறையிடுவது?
ஐன்ஸ்டீன், எடிசன். டாவின்சி, மேரி கியூரி ஆகியோர் தனித்திறன் பெற்ற குழந்தைகளாகவே  இருந்தனர். குழந்தைகளாக இருந்தபோது அவர்கள் செய்திருக்கிற பைத்தியக்காரத்தனங்கள் நிறையவே உண்டு. அவர்களின் துடுக்குத் தனத்தையும், வளர்ந்த குழந்தைகளாக இருந்தபோது அவர்கள் செய்திருக்கிற ஓராயிரம் தவறுகளையும், அவர்கள் ஜீனியஸ் தன்மையோடு சாதாரண வாழ்க்கையில் பொருந்தாது போராடிய போது அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிற உணர்ச்சிக் குமுறலையும் – குற்றமாகக் கருதி அவர்களைத் தண்டித்து ஒதுக்கியிருந்தால் உலக சமுதாயம் என்னென்னவற்றை எல்லாம் இழந்திருக்க வேண்டும்!!

இன்னமும் பேசுவோம்
அவ்வை மகள்
(வல்லமை இதழில் வெளிவந்தது) 


















Sunday, January 15, 2012

செரியாக் கல்வி : சிறையில் செரிந்தது


செரியாக் கல்வி : சிறையில் செரிந்தது





செரியாக் கல்வி : சிறையில் செரிந்தது







என் முது நிலைக் கல்வி - வேதியியலில்!! இதில் க்வாண்டம் மெக்கானிக்ஸ் பிரிவில் முதலில் வந்த பாடம் "பெட்டியில் ஒரு வஸ்து" (Particle in a Box) என்பதாகும். முழுவதும் கணித வரையறையின் அடிப்படையிலான பாடம் இது.  இதை எதற்காகப் படிக்கிறோம் -- படிக்க வேண்டும் என்று புரியவில்லை. பேராசிரியர் மட மடவென்று எழுதித்தள்ள - எந்திரங்களைப் போல அச்சசல் காப்பியடித்துக் கொண்டிருந்தனர் மாணவ-மாணவியர்.   கேள்வி கேட்பார் எவருமில்லை.
அந்தப் பணியை நானே செய்யலாமே எனத் தோன்ற, கேட்டும் விட்டேன்.
"இந்த   Particle in a Box ஐ நாம் ஏன் படிக்க வேண்டும்? வேதியலிலோ அல்லது நமது தினப்படி வாழ்விலோ  இது எவ்வாறு பயன்படுகிறது? எடுத்துக்காட்டுக்கள் தந்தால் நீங்கள் நடத்துவதைப் புரிந்து கொள்ள முடியும்."  
எனது வெளிப்படையான இந்தக் கேள்வியை ஆசிரியர் பொறுப்பான முறையிலே ஏற்றுக் கொள்வார் என்று தான் நான் எதிர்ப் பார்த்தேன்!  மாறாக  அவர் முகம் சிவந்து வெடிக்க ஆரம்பித்து விட்டார். எம் ஸ் சி என்பது ஆரம்பப் பள்ளியா? ஊட்டி விடுவதற்கு? எடுத்துக் காட்டுக்கள் இல்லாமல் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி இல்லாதவர்கள் இந்த வகுப்பிற்கு வரத்தேவையில்லை – என்றார்.
இவ்விஷயம் அன்றோடு நின்றுவிடவில்லை. அந்த அரையாண்டு முழுக்க என்னை அவர் ஒரு வைரியாகவே பாவித்தார். Internal Assessment என்று சொல்லப்படுகின்ற உள் நிலை மதிப்பீடு ஒவ்வோன்றிலும் கை வைத்தார்.  தன்னாலியன்ற ஒவ்வொறு வகையிலும் என்னை வகுப்பில் அவமானப் படுத்தினார். “மனமே பொறு” என்கிற ஒரே வைராக்கியத்தின் மூலம் அந்த அரையாண்டை நகர்த்தினேன்.  
புரிந்துகொள்ளாமல் வெறும் மனப்பாடப் பயிற்சியின் மூலமே அந்தப் பாடத்தை நான் தேர்வில் வெற்றி கொண்டேன்.  
சொல்லப்போனால், நான் இளம் அறிவியல் படிக்கும்போதே, இயற்பியல் வேதியலில் ஆய்வு நடத்தி அத்துறையில் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று ஆசைப் பட்டேன். அந்த ஆசையை வேரோடு பிடுங்கி எறியும் அளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது இப்பேராசிரியரின் கற்பித்தலும் அவர் மாணவர்களை நடத்திய விதமும். இத்தனைக்கும் நான் இளம் அறிவியல் படிப்பில் பல்கலைக் கழக “ரேங்க்” வாங்கியிருந்தவள். முதுநிலைக் கல்வியின் போது கல்லூரியின் வேதியியல் கழகம், தமிழ் மன்றம், உள்ளிட்ட பல அமைப்புக்களில் பொறுப்பான பதவியும் வகித்து வந்தவள். எனக்கே இத்தனை அவதி என்றால் பிற மாணாக்கர்களின் நிலை பற்றி என்ன சொல்ல?       
புரிந்து கொள்ளாமலேயே என் மண்டைக்குள் ஒரு பாடத்தைப் பதித்தது எனக்குள் மாபெரும் சுமையாக இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல பல ஆண்டுகள் “செரியாத” கல்வியின் சுமையால் வாடினேன் வருந்தினேன்.
பல ஆண்டுகள் சென்றன; சிறையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதற்காக, ஒரு சமூகப் பணி குழுவோடு ஒரு நாள் மைய சிறைச் சாலை சென்றேன். முதல் சிறை அறையின் முன், குழுவாகச் சென்று நிற்கிறோம். அந்த வினாடி, “he is a perfect particle in a box”  என வாய்விட்டுக் கூவினேன்.  அனைவரும் என்னைப் பார்த்து, “என்ன ஆச்சு?’ என்றார்கள்.
“பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தத்திற்கு, நடைமுறையில் ஒரு எடுத்துக்காட்டை, சிறைக்குள் இருந்த நிலையில் அந்த மனிதன் எனக்குத் தந்தான்.

“பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தத்தில் வரும் சில மொழிவழக்குகள் சிறைக் காட்சியில் மட்டுமே எனக்கு விளங்கின. “Boundary Conditions” “Degrees of Freedom” “escape impossibility” “solution to the problem is trivial” “the particle moves in a straight line until it reflects from wall.
சிறை வாயிலில் எனக்கு அறிவியல் ஞானம் பிறந்தது. “பெட்டியில் வஸ்து” எனக்குப் புலப்பட்டது. எட்டாக் கனியென இருந்த  க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தம் உள்ளங்கை நெல்லிக் கனியானது.
இதனைத் தொடர்ந்து,  “பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தத்திற்குப் பல எடுத்துக் காட்டுக்கள் இருப்பது பளிச்சிட்டது: கூண்டுக் கிளி, கருவறையில் இருக்கும் சிசு, தொழுவத்து மாடு என உதாரணங்கள் உதிர்ந்தன.
இந்த எடுத்துக் காட்டுக்கள் வாயிலாக “பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தத்தை எனது பேராசிரியர் அன்று விளக்கியிருந்தால் அந்த சித்தாந்தத்தைக் கற்றுக்கொள்வது எளிதாயிருந்திருக்கும்.
நான் சேவை செய்வதற்காக, சிறைச் சாலை சென்ற காரணத்தால் மட்டுமே கிடைத்த ஞான தீட்சை இது. இவ்வகை ஞானம் பெற என்னுடன் படித்த இன்னபிற மாணாக்கர்கள் என்ன செய்திருக்க முடியும்? சரியாகச் சொல்லித் தரப்படாத செரியாக் கல்வியால் அவர்களில் பெரும்பாலோர் வேதியியலை ஒதுக்கி விட்டு வேறு துறைகளுக்குச் சென்று விட்டார்கள். மொத்தம் 18  பேரில் நாங்கள் மூவர் மட்டுமே அறிவியல் துறையில் ஆய்வுப் பணியில் இருக்கிறோம்!!.
எதனை எவ்வாறு சொல்லித் தரவேண்டுமோ, அதனை  அவ்வாறு மாணாக்கர்களுக்குப் புரியுமாறு, கற்பித்தல் என்பது ஆசிரியரின் கடமையல்லவா?  இதற்காகத்தானே அவர்கள் பணியமர்த்தப்பட்டு சம்பளமும் வழங்கப் படுகிறார்கள்?
நடைமுறையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே சில நல்ல ஆசிரியர்களைப் பார்க்கிறோம் (இவர்களில் பெரும்பாலோர் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் அல்லர்). கற்பித்தலைக் கடமை எனக் கருதாது கடனே எனக் கருதும் ஆசிரியர்களே வெகுபலராயிருக்கிறார்கள் (இவர்களில் வெகு பலருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது!)
“குருவில்லா வித்தை சிறக்காது” என்கிற வாக்கை ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியபடி, கற்பித்தலின் பால் பற்றுதல் இல்லாது பணியாற்றும் ஆசிரியர்களைப் பார்க்கும் போது, “பிச்சைப் புகினும் கற்கை நன்றே!” என்கிற வாசத்தை மறு பரிசீலனைச் செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது.               
ஒன்று எவ்வாறு சொல்லித்தரப் படுகின்றதோ அதுவே அது எவ்வாறு கற்றுக் கொள்ளப் படுகின்றது என்பதை முடிவு செய்கின்றது. இவ்வகையில், நாம் நமது கல்வியின் நிலையை சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது என்பது முக்கியமாகின்றது!   
குறிப்பு:    
In physics, the particle in a box (also known as the infinite potential well or the infinite square well) is a problem consisting of a single particle inside of an infinitely deep potential well, from which it cannot escape, and which loses no energy when it collides with the walls of the box. In classical mechanics, the solution to the problem is trivial: The particle moves in a straight line, always at the same speed, until it reflects from a wall.